Last Updated : 31 Jan, 2017 10:32 AM

 

Published : 31 Jan 2017 10:32 AM
Last Updated : 31 Jan 2017 10:32 AM

காஞ்சியில் தேர்வு இனிது: நான்கு வகை நலன்கள் தெரியுமா? - மாணவர் திருவிழாவில் இசைக்கவி ரமணன் சுவாரஸ்யம்

பொதுவாக நாம் யாரையேனும் சந்தித்தால் முதலில் எழுப்பும் கேள்வி ‘நலம் தானா?’ என்பதுதானே… கடந்த ஞாயிற்றுக்கிழமை காஞ்சிபுரத்தில் நடந்த ‘இனிது இனிது தேர்வு இனிது’ மாணவர் திருவிழா நிகழ்ச்சியில் இசைக்கவி ரமணன், மாணவர்களிடம் நான்கு வகையான நலன்களைக் கனிவுடன் கேட்டறிந்ததுடன் அவற்றை எப்படிப் பேணிக்காக்க வேண்டும் என்பதையும் சுவாரஸ்யமாக விவரித்தார்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழ் மற்றும் எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரி நிறுவனம் ஆகியவை இணைந்து, தொடர்ச்சியாக மாணவர் திருவிழாவை நடத்தி வருகின்றன. அந்த விழாவின் சிறப்பு அழைப்பாளர்களில் ஒருவரான இசைக்கவி ரமணன், “உங்கள் வய‌தில் நானும் மிகவும் கஷ்டப்பட்டேன். ஆனால், நிறைய கற்றுக்கொண்டேன். பின்பு நல்ல நிலைக்கு வந்தபோதும் அந்தக் கஷ்டங்களை நான் மறக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அந்தச் சமயத்தில் என் வாழ்க்கையில் கடைப்பிடித்த ஒழுக்கம்தான் என்னை உயர்ந்த நிலைக்கு அழைத்துச் சென்றது.

தமிழ் வழியில் படித்தால்தான் நமது பண்பாடு புரியும் என்று கூறி எனது தந்தை என்னை தமிழ் வழியில் படிக்க வைத்தார். நீங்களும் நமது பண்பாட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள‌ வேண்டும். அதற்குத் தாய்மொழியில் தேர்ச்சி பெற வேண்டும்.

நான்கு நலன்கள்

பொதுவாக நமக்குத் தெரிந்தவர்களை நெடுநாட்கள் கழித்துப் பார்க்கும் போது நலம்தானா என்று கேட்போம். ஆனால், நலன்களில் எத்தனை வகையான நலன்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? அவை மொத்தம் நான்கு.

உடல் நலம், புத்தி நலம், மன நலம், ஆன்ம நலம் ஆகியவையே அவை. அந்தக் காலத்தில் பலர் நெடுந்தூரம் பயணம் செய்து படித்தார்கள். பகுதி நேரமாகப் பல்வேறு வேலைகளைச் செய்தார்கள். இப்போது இருப்பது போன்ற வசதிகள் அப்போது இல்லை. அதனால் இயல்பாகவே உடல் உழைப்பு இருந்தது. தற்போது அந்த வாய்ப்புகள் குறைந்துவிட்டன. எனவே உடல் நலம் பெறுவதற்குச் சிறு உடற்பயிற்சிகளைச் செய்யுங்கள். உடல் நலம் சிறப்பாக இருந்தால்தான் நீங்கள் படிக்கும் விஷயங்கள் மனதில் பதியும். மேலும் சத்தான உணவுகளை உண்ண வேண்டும்.

அடுத்து, புத்தி நலம். அதாவது, அறிவுக்குப் பயிற்சி. அதற்கு நல்ல புத்தகங்களைத் தேடிப் படியுங்கள். நல்ல சிந்தனைகள் வளரும். மூன்றாவதாக‌, மன நலம். எதற்கும் பதற்றம் அடையக் கூடாது. பதற்றம் அடைவதால் செய்ய வேண்டிய வேலைகளை முறையாகச் செய்ய முடியாது. இறுதியாக, ஆன்ம நலம். இதற்குத் தியானம், யோகா போன்ற பயிற்சிகள் உதவும். அதேசமயம் நமது பண்பாடு, நாட்டுப்பற்று ஆகியவற்றிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

அவர், மாணவர்களிடம் பேசியது மட்டுமின்றி பாடல்கள் பாடியும் உற்சாகமூட்டினார். அவருடன் சேர்ந்து மாணவர்களும் பாடி, நிகழ்ச்சியை மேலும் சுவாரஸ்யமாக்கினார்கள்.

கனவுகளுக்கு அடித்தளம்...

மாவட்ட வருவாய் அலுவலர் க.சௌரிராஜன் பேசும்போது, “காஞ்சிபுரம் மாவட்டத்தை 'கல்வியின் கேந்திரம்' எனலாம். வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்கூட இங்கு வந்து போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி எடுக்கின்றனர்.

நாளை இந்த மாணவர்கள் கூட்டத்திலிருந்து ஒருவர் மாவட்ட ஆட்சியராக வரலாம் இல்லையா…? ஆனால் இந்தக் கனவுகளுக்கெல்லாம் ஆதாரமாகவும் அடித்தளமாகவும் இருப்பது 12-ம் வகுப்புதான். எனவே இப்போதுதான் நீங்கள் அதிக கவனத்துடன் படிக்க வேண்டும். ‘தி இந்து’ தமிழ் நாளிதழ், எஸ்.கே.ஆர். பொறியியல் கல்லூரி ஆகியவை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் உதவி வருவது பாராட்டுக்குரியது. இதனை மாணவர்கள் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

மாவட்டக் கல்வி அலுவலர் எஸ்.கற்பகவள்ளி, “மாணவர்கள் 12-ம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் எனில் படித்தவற்றை அவ்வப்போது மனதுக்குள் அசைபோட வேண்டும். வகுப்புத் தேர்வுகளை மேற்கொள்வதுடன் நீங்களே அடிக்கடி வீட்டில் கேள்விகளைத் தயார் செய்து சுயமாகத் தேர்வு எழுதிப் பயிற்சி எடுக்க வேண்டும்” என்றார்.

நிகழ்ச்சியில் எஸ்.கே.ஆர்.கல்லூரியின் சார்பில் பொருட்களை இடமாற்றும் ரோபோ, ஸ்கேல் கட்டர், பிளாஸ்டிக் மோல்டிங் 3டி ஜெட் பிரிண்டர், நாணயம் செலுத்தினால் குளிர்பானம் வருதல் போன்றவை அடங்கிய‌ அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. மாணவர்கள் ஆர்வத்துடன் இயந்திரங்கள் இயக்கும் முறையைப் பற்றிக் கேட்டறிந்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் மட்டுமின்றி சென்னை நகரிலிருந்தும் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



இசைக்கவி ரமணனிடம் மாணவர்கள் சில கேள்விகளை எழுப்பினார்கள். “படிக்கும் விஷயங்கள் அடிக்கடி மறந்து விடுகின்றன அதற்கு என்ன செய்வது?” என்று ஒரு மாணவர் கேட்டார்.

அதற்கு, “நாம் படிக்கும் விஷயங்களை மனதில் காட்சிப்படுத்திக் கொண்டு படிக்க வேண்டும். நாம் வீட்டில் இருந்து பள்ளிக்கு வரும் வழி மறந்து விடுவதில்லை. காட்சிப்படுத்தப்பட்ட விஷயங்கள் நம் மனதில் பதிந்துள்ளதே அதற்குக் காரணம். அதுபோல நாம் காட்சிப்படுத்திக் கொண்டு படிக்க வேண்டும்” என்றார்.

பெற்றோர் ஒருவர், “தொலைக்காட்சி பார்க்கும் மாணவர்களை எவ்வாறு கட்டுப்படுத்துவது?” என்றார். அதற்கு ரமணன் “நீங்கள் தொலைக்காட்சி பார்க்காமல் ஏன் ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கக்கூடாது?” என்று பதிலளிக்க, மாணவர்களிடையே கரவொலி எழுந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x