Last Updated : 28 Jun, 2016 11:42 AM

 

Published : 28 Jun 2016 11:42 AM
Last Updated : 28 Jun 2016 11:42 AM

உங்கள் குழந்தையின் கவனம் எப்படி?

ஆட்டிஸம் உட்பட பல்வேறு மூளை செயல்திறன் பாதிக்கப்பட்ட சிறப்புக் குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வியையும், அவர்களுடைய வேலைகளை அவர்களே செய்துகொள்ளும் வகையிலான பயிற்சிகளையும் அளிக்கிறது திருவள்ளூர் மாவட்டம் எண்ணூரில் உள்ள குமரன் சிறப்புப் பள்ளி.

ஐந்து குழந்தைகளுடன் 2002-ல் ராஜம்மாள் அறக்கட்டளையின் கீழ் தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில், தற்போது 40 குழந்தைகள் சிறப்புக் கல்வியும் பயிற்சியும் பெற்றுவருகின்றனர்.

“எனது இரண்டு குழந்தைகளுமே சிறப்புக் குழந்தைகள். 15 ஆண்டுகளுக்கு முன்பு சிறப்புக் குழந்தைகளைப் பற்றி விழிப்புணர்வு இல்லை. இதுபோன்ற பள்ளியைத் தொடங்கி, சிறப்புக் குழந்தைகளுக்கு உதவலாமே என்ற எண்ணத்தில்தான், பயிற்சி பெற்று, இந்தப் பள்ளியைத் தொடங்கினேன்” என்கிறார் ராஜம்மாள் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரான செந்தமிழ் செல்வி.

இங்கு சிறப்புக் குழந்தைகளுக்குப் ஃபிசியோதெரப்பி, யோகா, மைண்ட்ஃபுல்னஸ் போன்ற பயிற்சிகளைக் கடந்த 10 ஆண்டுகளாக அளித்துவருகிறார் தனசேகர். மைண்ட்ஃபுல்னஸ் எனப்படும் மனத்திட்பப் பயிற்சி, சிறப்புக் குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல் அனைவருக்குமே உதவக் கூடியது என்கிறார் அவர்.

மனத்திட்பப் பயிற்சி

மனத்திட்பப் பயிற்சியில் முதலில் குழந்தைகளின் பிரச்சினைகள் குறித்துப் பெற்றோர்களிடமிருந்து கேட்டுப் பதிவு செய்கிறார்கள். பிரச்சினைகளின் தீவிரத்துக்கு ஏற்ப, கவனக் கல்வி அறிமுகப் பயிற்சியை ஏழு அமர்வுகளில் குழந்தைகளோடு பெற்றோருக்கும் சேர்த்துத் தருகிறார்கள்.

கவனப் பயிற்சி ஏறக்குறைய ஒரு மணி நேரத்துக்கு நடக்கும். இதன் முடிவில், 10 நிமிடங்கள் சிற்றுண்டி இடைவேளை. குழந்தைகளுக்கு இயற்கை உணவும் பழரசமும் வழங்கப்படும். கவன மணி (Mindfulness bell) ஒலித்த உடன், குழந்தைகள் கவனத்துடன் சாப்பிடுவார்கள்.

கவனக் கல்வி

இதில் ஆசிரியர் வணக்கம், பூரண மவுனம் போன்றவை சொல்லித் தரப்படுகின்றது. மவுனத்தில் இருக்கும் குழந்தைகள், ஆசிரியர் சொல்வதைச் சரியாகக் கவனித்துக் கேட்டு, அதன்படி நடப்பார்கள். “ஒவ்வொரு குழந்தைக்கும் கவனம் செலுத்தும் அம்சம் வித்தியாசப்படும். உதாரணத்துக்கு, நான்கு வயதுடைய குழந்தை எட்டு முதல் 15 நிமிடங்கள்வரை ஒரே விஷயத்தில்,கவனம் செலுத்த முடியும். ஆனால் அதற்குள் கவனம் சிதறினால், அந்தக் குழந்தைக்குக் கற்கும் திறன் குறைவாக உள்ளது என்று அர்த்தம்” என்கிறார் தனசேகர் .

கவனமாகச் சாப்பிடுதல்

குழந்தைகள் உணவைக் கவனமாகச் சாப்பிட வேண்டும் என வலியுறுத்துகிறது இந்தப் பள்ளி. கவனமாக மென்று சாப்பிடாவிட்டாலும், இயற்கைக் கடன்களை செய்யாவிட்டாலும் பாடங்களைக் கேட்கும்போதும், படிக்கும்போதும் வயிறு, மூளைக்குத் தொல்லைதர ஆரம்பித்துவிடும். குறிப்பாகச் சாப்பிடும்போது டிவி பார்ப்பது உடல் நலத்துக்கு கேடு. பேசுவதும் பல நோய்களுக்கு மூலக் காரணமாக அமையும். நன்றாக வாயை மூடி உணவை மென்று, ருசி உணர்ந்து சாப்பிட வேண்டும்.

பசி எடுக்கும்போது மட்டுமே சாப்பிட வேண்டும். சோம்பல், பயம், குற்ற வுணர்வு, பதற்றம், கவலை, வெறுப்பு ஆகிய எதிர்மறை எண்ணங்கள், உணர்ச்சிகள் மனதில் தோன்றும்போது சாப்பிடுவது தவறான பழக்கம்.

உடல் இயக்கத்தில் கவனம்

நடக்கும்போதும், நிற்கும்போதும், உட்காரும்போதும், படுக்கும்போதுகூடக் குழந்தைகள் கவனம் செலுத்துவது அவசியம் என்கிறது இந்தப் பள்ளி. இதை ஒருங்கிணைந்த உடல் இயக்கப் பயிற்சியின் (Integrated body movements) மூலமாகக் கற்றுத்தருகிறார்கள். இந்தப் பயிற்சியில் 30 நிமிடங்கள் முதல் 45 நிமிடங்கள்வரை 21 உடல் இயக்க நிலைகள் கற்றுத்தரப்படுகின்றன. இவற்றை மூன்று விதங்களில் செய்வதற்குக் குழந்தைகளுக்குப் பயிற்சி அளிக்கிறார்கள்.

“தொடர்ந்து இந்தப் பயிற்சியைச் செய்வதால் அவர்களுடைய முதுகுத்தண்டு உறுதி பெறுகிறது. முதுகுத்தண்டை நிமிர்ந்த நிலையில் வெகு நேரம் வைத்துக் கொள்ள முடிந்தால், குழந்தைகளின் படிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். இதனால் உடல், மனம், உணர்வு, சமூக வளர்ச்சியில் குழந்தைகள் முன்னேற்றம் காண்கிறார்கள்” என்கிறார் தனசேகர்.

மூச்சில் கவனம்

இசை, நட்பு ரீதியான கலந்துரையாடல், குட்டிக் கதைகள், ஓவியம் தீட்டுதல், குழு நடவடிக்கைகள், ‘மவுண்டன் அண்டு பெபிள்’ தியானம் (Mountain and pebble meditation) போன்றவற்றின் மூலமாக மூச்சில் கவனம் செலுத்தக் கற்றுத்தரப்படுகிறது. இப்பயிற்சியில் கவனம் செலுத்துவதற்கான பிரத்யேக மணியை (Mindfulness bell) ஆசிரியர் ஒலிக்கச் செய்வார்.

மனத்திட்பப் பயிற்சியின் இரண்டாவது பிரிவில், மாதிரிக் கவன வகுப்பறை அடிப்படையில் பள்ளிப் பாடங்களைக் கவனமாகப் படித்து, புரிந்துகொண்டு, வெளிப்படுத்துவது எப்படி என்று கற்றுத் தரப்படுகிறது. இதன்மூலம் பார்ப்பதில், கேட்பதில், அறிகையில், பேசுவதில், படிப்பதில், எழுதுவதில், நடத்தையில் பின்தங்கிய குழந்தைகள் கண்டறியப்பட்டுச் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

கட்டளைகளுக்கு வசப்படாத குழந்தைகள்

“இன்றைய குழந்தைகள் மன இறுக்கத்தில் அதிகமாகச் சிக்கியுள்ளார்கள். அதிலிருந்து அவர்களை வெளியே கொண்டுவரவே கவனம் செலுத்துதலை ஊக்குவிக்கிறோம். வசப்படுத்துவது வியாபாரக் கல்வி; கவனம் செலுத்த வைப்பது மனத்திட்பக் கல்வி. கவனமாகச் செயல்பட்டால், யாரையும் கவனம் செலுத்த வைக்கலாம். கவனமாக எதைச் சொன்னாலும், செய்தாலும் குழந்தைகள் அதை எளிதாகப் பற்றிக் கொள்வார்கள்” என்கிறார் தனசேகர்.

செந்தமிழ்ச் செல்வியைத் தொடர்புகொள்ள: 98404 23125

தனசேகர்: 94446 72190

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x