Last Updated : 31 May, 2016 12:08 PM

 

Published : 31 May 2016 12:08 PM
Last Updated : 31 May 2016 12:08 PM

இப்படியும் பார்க்கலாம்: அது முற்றிலும் இலவசம்!

வெளிநாட்டுக்காரர் ஒருவர் நம் ஊருக்கு வந்தால், அவரை எங்கெல்லாம் அழைத்துப் போக ஆசைப்படுவோம்? தாஜ்மகாலுக்கு டிக்கெட் எடுப்போம். எதிர்காலத்தில் சுற்றுலாத் துறை செழிக்கவும், சினிமாக்காரர்கள் அபத்தமாக ஆடிப் பாடவும் இடம் வேண்டும் என்ற எண்ணத்தில் மன்னர்களால் கட்டப்பட்ட கோட்டை, கொத்தளங் களுக்கு அழைத்துச் செல்வோம்.

அங்கெல்லாம் செல்லும்போது நாம் எப்படி எல்லாம் பெருமை அடித்துக்கொள்வோம்? காரணம், நமக்கு ஆயிரக்கணக்கான வருடக் கலாச்சாரம் இருக்கிறது. பற்களைத் தேய்ப்பது அனைவருக்கும் நல்லது என்பதை வெளிநாட்டினர் கண்டுபிடித்தபோது, நாம் “உங்க பிரஷ்ல வேம்பு இருக்கா?” எனக் கேட்டோம். சரி, இந்த ரீதியில் பெருமை பேசி வெளிநாட்டுக்காரருடன் அலைகிற நாம் நம் ஊரின் பொதுக் கழிப்பறையைக் காட்டிப் பெருமை கொள்ள இயலுமா?

கஷ்டமானக் கேள்வியா?

வருடந்தோறும் தேர்வு கால நிகழ்வுகளைக் காண்கிறோம். “இந்தப் பாடத்தில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்தன; இந்த சப்ஜெக்ட்டில் எதிர்பாராததைக் கேட்டு விட்டார்கள்” என்றெல்லாம் மாணவ-மாணவிகள் பேட்டி கொடுப்பார்கள். உடனே இதற்குக் கருணை மதிப்பெண் கொடுக்க வேண்டும் என்று ஒரு அணி குரல் கொடுக்கும்.

பத்தாம் வகுப்புத் தேர்வுக்கு கல்லூரிப் பாடத்திட்டங்களிலிருந்தோ, செவ்வாய் கிரகத்தின் பத்தாம் வகுப்புப் பகுதிகளில் இருந்தோ கேள்விகள் கேட்கப்பட்டால், அது அநியாயம்.

உங்களுக்கு வழங்கப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட பாடப் புத்தகத்திலிருந்துதானே கேட்கிறார்கள்? அதன் முன் அட்டையிலிருந்து பின் அட்டைவரை நன்கு கவனம் செலுத்திப் படித்திருந்தால், அப்புறம் எப்படி “கஷ்டமான கேள்விகள் கேட்டார்கள்” என்ற கண்ணீர் வர முடியும்? பரீட்சை எழுதுபவர்களுக்கு ஏன் தன்னம்பிக்கை இல்லை?

பெற்றோரும் குழந்தைகளும்

இரு குடும்பங்களை எடுத்துக்கொள்வோம்.

முதல் குடும்பத்தில் அப்பா, அம்மா இருவரில் ஒருவர்கூட உழைப்பதில்லை. இந்தச் சூழலில் அந்தக் குடும்பத்தின் குழந்தை தன் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள என்னென்ன பாடுபடும்? இப்போது அந்தப் பெற்றோரைப் பார்த்து பொறுப்பில்லாதவர்கள்; தங்கள் கடமையிலிருந்து தவறிவிட்டார்கள் என்றுதானே விமர்சிப்போம்?

மாறாக, இரண்டாவது குடும்பத்தைச் சேர்ந்தக் குழந்தை நல்ல ஆடைகள் உடுத்தியிருக்கிறது; உற்சாகம் ததும்பும் விழிகளுடன் இருக்கிறது. அப்படியானால் இந்தப் பெற்றோர் தங்கள் கடமையைச் சரிவரச் செய்கிறார்கள் என்றுதானே அர்த்தம்!

ஆக, பெற்றோர் தங்கள் கடமையைச் சரியாகச் செய்கிற பட்சத்தில், அந்தக் குழந்தை உலகைத் தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்கிறது. இந்த வாதத்தைக் கொஞ்சம் திருப்பிப் போடுவோம். பெற்றோர்கள் பொறுப்புடன் இருந்து குழந்தைகள் தங்கள் கடமையிலிருந்து தவறி விட்டால்?

குழந்தைகளின் கடமை என்ன? படிக்க வேண்டிய நேரத்தில் படிப்பதுதான்! பெற்றோர் தங்களுக்குத் தரும் வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொள்வதுதான்!

சொல்லப்போனால், தனது கடமையைச் சரியாகச் செய்கிற குழந்தையின் பெற்றோர்தான் உலகைத் தன்னம்பிக்கையுடன் சந்திக்கிறார்கள். “எம்.ஈ முடிச்சும் வேலை ஒண்ணும் கிடைக்கலீங்க. இப்பதான் ஸ்போக்கன் இங்கிலீஷ் கோர்ஸுக்கும், பிழையின்றி தமிழ் எழுத ஒரு கோர்ஸூக்கும் போயிட்டிருக்கான்...” என்று ஒரு குரல்,“பொண்ணு ஒரு தொழிற்சாலை நடத்தி பத்துபேருக்கு வேலை கொடுத்திருக்கா...பையன் வெளிநாட்ல இருக்கான்”.

இந்த இரண்டு குரல்களில் எது பெருமையானது?

பெற்றோரின் தன்னம்பிக்கை அதிகரிப்பது ஒருபுறம் இருக்கட்டும். அந்தக் குழந்தை தன்னம்பிக்கையுடன் தனது படிப்பு சார்ந்த வாழ்க்கையை எதிர்கொள்ளும் இல்லையா? படிக்க வேண்டியதைப் படித்து, தன் கடமையைச் சரியாகச் செய்கிற குழந்தை உற்சாகத்துடன் தேர்வுக்குக் கிளம்பி, “எப்போது கேள்வித்தாள் கொடுப்பார்கள்?” என்று காத்திருக்குமே தவிர,” கல்வித் திட்டத்தில் ஏதாவது மாறுதல் வந்து தேர்வு முறையையே ரத்து செய்து விட மாட்டார்களா?” என்று ஏங்காது. நிச்சயமாய் “எதிர்பார்த்தது எதுவுமே வரலீங்க..” என்று புலம்பாது.

எப்படி வரும் தன்னம்பிக்கை?

இதன் மூலம் கீழ்க்கண்ட முடிவுகளுக்கு வர முடியும்:

ஒரு குழந்தை தன் கடமையைச் சரியாகச் செய்கிறபட்சத்தில் அதன் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது. குடும்பத்தில் அனைவரும் தன் கடமையைச் சரியாகச் செய்தால், அந்தக் குடும்பம் தன்னம்பிக்கையுடன் உலகை எதிர்கொள்கிறது. ஒரு சமூகம் தனக்கான தன்னம்பிக்கையை, தன் கடமையைச் செய்வதிலிருந்துதான் பெற முடியும்.

நிறையபேர் தன்னம்பிக்கையை அதிகரித்துக்கொள்வதற்கான வழிகளைத் தேடுகிறார்கள். நம்பிக்கையில் சிறந்த நம்பிக்கை தன்னம்பிக்கை என்றோ, அந்த ஆற்றலை அரும்பாடுபட்டு வளர்த்துக்கொள்ள வேண்டிய ஒன்று என்றோ கனவிலும் கருத வேண்டாம். அது ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய ஒன்று அல்ல. அது தன்னாலேயே ஏற்பட வேண்டிய ஒன்று.

தன் கடமையை, பொறுப்பைச் சரியாகச் செய்கிறபட்சத்தில் அது இலவசமாய் வந்துவிடும்.“நமது எல்லைக்குட்பட்டு நம்மால் ஆனதைச் செய்து விட்டோம்” என்ற நினைப்பிற்குப் பிறகு வருவதுதான் தன்னம்பிக்கை. சினிமாக்காரர்களுக்கு ஒரு காட்சியைத் தருகிறேன். கதாநாயகனை வில்லன் எப்படியெல்லாமோ சித்திரவதை செய்கிறான். கடைசியில் ஒரு பொதுக்கழிப்பிடத்தில் ஐந்து நிமிடம் இருக்கச் செய்ததில் நாயகன் தாக்குப்பிடிக்க முடியாமல் இரகசியத்தைச் சொல்லிவிடுகிறான்.

இந்த இலட்சணத்தில் கழிப்பறைகள் இருந்தால், அதற்கு என்ன அர்த்தம்? அதை நிறுவியவர், பராமரிப்பவர்,உபயோகிப்பவர் என எல்லோரும் தங்கள் கடமையைச் செய்யவில்லை என்றுதானே அர்த்தம்? கழிப்பறை கட்டுவதும், தண்ணீர் தருவதும் அரசாங்கத்தின் பொறுப்பு என்றால், அதை உபயோகிப்பவர்களின் கடமை என்ன? சரியாகப் பயன்படுத்த யார் சொல்லித்தர வேண்டும்?

தேசத்தின் பெருமை கோவில்களிலும், கோட்டைகளிலும் மட்டுமா இருக்கிறது? தன் பொறுப்பைச் சரியாகச் செய்யாதவர்களினால்தான் தேசத்தின் தன்னம்பிக்கையும் குறைகிறது.!

தொடர்புக்கு: >shankarbabuc@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x