Published : 20 Oct 2015 11:16 AM
Last Updated : 20 Oct 2015 11:16 AM

ஆங்கிலம் அறிவோமே - 80: கொலைகளின் ஆங்கிலம்

What is your good name?

What is your respectable name?

இரண்டில் எது மேலும் பவ்யமானது என்று கேட்டுள்ளார். Good அல்லது respectable தேவையில்லை! What is your name? என்பதே போதுமானது. மரியாதை பொங்க வேண்டுமென்றால் May I know your name என்றோ Can you please tell your name என்றோ கேட்கலாமே!

எனக்கென்னவோ நமது இந்தி மொழி பேசும் மக்கள் மூலமாகத்தான் ‘good name’ வந்திருக்க வேண்டும் எனத் தோன்றுகிறது. இந்தியில் ‘ஆப் கா ஷுப் நாம் கியா ஹை? (Aap kaa shub naam kya hai?) என்று கேட்பது வழக்கம். அந்த ஷுப் (சுபம்) தான் (shub) ஆங்கிலத்தில் good ஆக எதிரொலித்திருக்க வேண்டும்.

The என்பதை ‘தி’ என்று உச்சரிக்க வேண்டுமா? அல்லது ‘த’ என்று உச்சரிக்க வேண்டுமா? என்று ஒரு வாசகர் கேட்டிருக்கும் கேள்வி வேறு சிலரது மனங்களிலும் எழுந்திருக்க வாய்ப்பு உண்டு.

அதாவது The என்பதை ‘தில்’ என்பதில் உள்ள ‘தி’ என்பதுபோல் உச்சரிக்க வேண்டுமா அல்லது தர்மம் என்பதில் உள்ள ‘த’ என்பதுபோல் உச்சரிக்க வேண்டுமா? அதாவது THIS என்பதில் உள்ள THI என்பதுபோல் உச்சரிக்க வேண்டுமா? அல்லது THAT என்பதில் உள்ள THA என்பதுபோல உச்சரிக்க வேண்டுமா? அதாவது (‘ஐயகோ, விளக்கம் புரியுது. விடையைச் சொல்லுங்க’ என்று குரல்கள் கேட்கின்றன). சரி சரி

A,E,I,O,U ஆகியவற்றை vowels என்றும் பிற ஆங்கில எழுத்துக்களை consonants என்றும் குறிப்பிடுவது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

Vowelsக்கு முன்னால் உள்ள the என்றால் அதை ‘தி’ என்று உச்சரிக்க வேண்டும். The orange தி ஆரஞ்ச். The Umbrella தி அம்ரெல்லா.

Consonantsக்கு முன்னால் உள்ள the என்றால் அதை ‘த’ என்று உச்சரிக்க வேண்டும். The basket த பாஸ்கெட். The purse த பர்ஸ்.

வெகு நாட்கள் கழித்து மொட்டை மாடியில் படுத்துக்கொண்டபோது வானத்தில் தெரிந்த நட்சத்திரங்கள் வெகு ரம்யமாக இருந்தன.

“Never I have seen such a sight’’ என்றான் இளைய மகன். அவனது ஆங்கிலத்தைத் திருத்தி அவன் பரவசத்தை நான் அப்போது குலைக்கவில்லை.

ஆனாலும் ஒரு சிறு விளக்கம். Never என்ற வார்த்தையோடு ஒரு வாக்கியம் தொடங்கினால் அதைத் தொடர்ந்து auxiliary verb இடம் பெறும்.

அதாவது “Never have I seen such a sight’’ என்றுதான் அந்த வாக்கியம் இருந்திருக்க வேண்டும்.

FETICIDE INFANTICIDE

ஒரு வாசகர்“ Suicide என்று அந்த வார்த்தைக்கு ஏன் பெயரிட்டார்கள்?” என்று கேட்டிருக்கிறார். இன்னொருவர் “Infanticide, Feticide ஆகிய இரண்டும் ஒன்றா” என்று கேட்டிருக்கிறார்.

பொதுவாக cide என்பது கொலையைக் குறிக்கிறது. Homicide என்பது மனிதரை மனிதர் செய்யும் கொலை. லத்தீன் மொழியில் sui என்றால் தன்னைத் தானே என்று அர்த்தம். எனவே suicide என்றால் தற்கொலை.

Genocide என்றால் இனப்படுகொலை. Insecticide என்றால் பூச்சிகளைக் கொல்வது. Biocide என்றாலும் நடைமுறையில் பூச்சிக் கொல்லிதான்.

Feticide என்பதும் Infanticide என்பதும் ஒன்றுதான் என்று சிலர் கருதினாலும் அப்படியல்ல. Feticide என்பது கருவில் இருக்கும்போது கொல்வது. அதாவது கருச்சிதைவு. கணிசமான நாடுகளில் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு Feticide-ஐ சட்டங்கள் அனுமதிக்கின்றன.

Infanticide என்பது தன் குழந்தையை அதன் பெற்றோரே (முக்கியமாக அம்மாவே) கொல்வது. ஒருவயதுக்கு உட்பட்ட குழந்தையைக் கொல்வதைத்தான் இப்படிக் குறிப்பிடுவார்கள். Infanticide-ஐ எந்த நாட்டின் சட்டமும் அனுமதிப்பதில்லை.

மன்னரைக் கொன்றால் அது Regicide. தந்தையைக் கொன்றால் Patricide. அன்னையைக் கொன்றால் Matricide.

அதற்காக cide-ல் முடியும் வார்த்தைகள் எல்லாம் கொலையைக் குறிப்பவை என்று ஒட்டுமொத்தமாக மனதில் ‘கொல்ல’ வேண்டாம்.

எடுத்துக்காட்டாக, coincide. ஒரே நேரத்தில் நடப்பது, ஒரே புள்ளியில் இணைவது போன்றவற்றைக் குறிக்க இந்த வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். Our vacations coincided this year. The interest of employers and employees do not generally coincide. The centres of concentric circles coincide.

“That was a sheer coincidence’’ என்றால் அது திட்டமிட்டதல்ல. மிகவும் தற்செயலாக நடைபெற்றது என்று பொருள்.

“Personification குறித்து குறிப்பிட்டிருக்கிறீர்கள். Metaphor குறித்து நான் படித்ததும் இதுவும் ஒன்றாக இருக்கிறதே இரண்டும் ஒன்றுதானே?’’ என்று ஒரு வாசகர் கேட்டிருக்கிறார். இந்த இரண்டோடு Simile என்பதையும் சேர்த்தே விளக்கி விடலாம் என்று தோன்றுகிறது.

Simile (ஸ்மைல் அல்ல ஸிமிலி) என்பது உவமை.

She was as busy as a bee.

It was as black as coal.

You were as brave as a lion.

Metaphor என்பதை உருவகம் எனலாம். அதாவது ஒன்றுக்குக் குறியீடாக மற்றொன்றைச் சொல்வது. மற்றபடி பொதுவான வாக்கியங்களில் அப்படிப் பயன்படுத்த மாட்டோம். Life is a roller coaster என்றால் வாழ்க்கையில் நாம் நிஜமாகவே (அதாவது நம் உடல்) உயரத்திலும், பள்ளத்திலும் சென்று வருகிறோம் என்பதில்லை. நிகழ்வுகள் மாறி மாறி வருகின்றன என்றுதான் அர்த்தம்.

Time is money என்பார்கள். அதற்காக ஒரு பொருளை கடையில் வாங்கிக் கொண்டு time-ஐ கொடுக்க முடியுமா என்ன? Time is money என்பது ஒரு Metaphor.

My neighbour is a fox என்றால் அவர் தந்திரமானவர் என்றுதானே அர்த்தம். அவருக்கு நான்கு கால்கள் இருக்குமா என்ன?

Personification என்பது Metaphor-லிருந்து மாறுபட்டது. உயிரற்ற பொருள் அல்லது தன்மைக்கு உருவம் கொடுப்பது. அதாவது மனிதத் தன்மையை உயிரற்ற ஒரு பொருளுக்கு அளிப்பது.

The trees sighed in the wind.

The moon winked at me.

The stars danced playfully.

தொடர்புக்கு - aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x