Published : 22 Mar 2014 06:55 PM
Last Updated : 22 Mar 2014 06:55 PM

பாசனத் திட்டங்களுக்காகக் காத்திருக்கும் பொள்ளாச்சி

# தொகுதியில் நீர் மேலாண்மைத் திட்டங்கள் இல்லை. பாண்டியாறு - புன்னம்புழா, ஆனைமலையாறு - நல்லாறு, நீராறு - நல்லாறு இணைப்புத் திட்டங்கள், அவினாசி - அத்திக்கடவு திட்டம், சிறுவாணி அணையின் உயரத்தைக் கூட்டுதல், நொய்யல் நதி பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் கிடப்பில் உள்ளன.

பாண்டியாறு - புன்னம்புழா திட்டம் நிறைவேறினால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களுக்கு 14 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும். கூடுதலாக இரண்டு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 200 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். திட்டம் நிறைவேறாததால் பாண்டியாற்றின் நீர் கேரளாவின் சாலியாற்றில் கலந்து, சுமார் 200 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கிறது.

நீராறு - நல்லாறு இணைப்புத் திட்டம் நிறைவேறினால் திருமூர்த்தி அணைக்கு 0.9 டி.எம்.சி. தண்ணீர் கூடுதலாகக் கிடைக்கும். சிறுவாணி அணையின் உயரத்தை அதிகரிப்பதாலும், அத்திக்கடவு - அவினாசி திட்டத்தைச் செயல்படுத்துவதாலும் பவானியில் மழைக் காலங்களில் பெருக்கெடுக்கும் வெள்ளத்தை திசை திருப்பி அவினாசி, அன்னூர் பகுதிகளில் இருக்கும் நீர் நிலைகளில் நீரைத் தேக்கலாம். ஆனால், மேற்கண்ட திட்டங்கள் அனைத்தும் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக கிடப்பில் உள்ளன.

# கோவை நகரத்தில் ஆர்.எஸ்.புரம், கோவை புதூர், குனியமுத்தூர் உட்பட சுமார் 21 வார்டுகள் பொள்ளாச்சி தொகுதியில் வருகின்றன. இவற்றில் குனியமுத்தூர் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை நீடிக்கிறது. நகரத்தின் பல இடங்களில் பாதாள சாக்கடைக்காக சாலைகள் தோண்டப்பட்டு பணிகள் முடிக்காமல் குண்டும் குழியுமாக இருக்கின்றன.

# கோவை - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுக்கரையில் இருந்து வாழையாறு வரை நான்கு வழிச் சாலை அமைக்கும் பணி கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. ஆனால், நிதிப் பற்றாக்குறை காரணமாக கடந்த இரு ஆண்டுகளாகத் திட்டம் முடங்கிக் கிடக்கிறது. இதனால், இப்பகுதியில் விபத்துகளும் அதிகம் நடக்கின்றன.

# போத்தனூர் - பொள்ளாச்சி - பழனி - திண்டுக்கல் அகல ரயில் பாதைத் திட்டம் ரூ. 375 கோடி மதிப்பீட்டில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. கடந்த மூன்று ஆண்டுகளாக பணிகள் ஆமை வேகத்தில் நடக்கின்றன.

# பொள்ளாச்சியில் தென்னை விவசாயிகள் பயன்பெற தென்னை உற்பத்திப் பொருட்கள் ஆய்வு மையம், தென்னை நார் கயிறு உற்பத்தித் தொழிற்சாலை, கொப்பரை சேமிப்புக் கிடங்கு தேவை.

# கிணத்துக்கடவு, நெகமம், புளியம்பட்டி, வழுக்குப்பாறை உள்ளிட்ட இடங்களில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் தக்காளி பயிரிடப்படுகிறது. சீசன் காலங்களில் அதிக விளைச்சல் காரணமாக கிலோ 50 பைசா முதல் ஒரு ரூபாய்வரை மட்டுமே விலை கிடைக்கிறது. இதனால், தக்காளியை சாலையில் கொட்டுகின்றனர் விவசாயிகள். தக்காளியைப் பாதுகாக்கக் குளிர் பதனக் கிடங்கு மற்றும் தக்காளி கூட்டு மதிப்பு பொருட்களான ஊறுகாய், ஜாம் போன்றவை தயாரிக்க தொழில் வாய்ப்புகள் தேவை. கிணத்துக்கடவில் சமீபத்தில்தான் குளிர் பதனக்கிடங்கு அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. அதை விரைந்து முடிக்க வேண்டும்.

# தொண்டாமுத்தூர், சாடிவயல், மாதம்பட்டி, பேரூர் உள்ளிட்ட இடங்களில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் பன்னீர் திராட்சை பயிரிடப்படுகிறது. இதற்கும் நியாயமான விலை கிடைப்பது இல்லை என்கின்றனர் விவசாயிகள். எனவே, இப்பகுதியில் ஒயின் தொழிற்சாலை அமைத்தால் திராட்சை விவசாயிகள் பயன் பெறுவர்.

# தொண்டாமுத்தூர், ஆனைக்கட்டி, மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் - மனித மோதல் கடந்த ஐந்து ஆண்களில் பல மடங்கு அதிகரித்துவிட்டது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

# வால்பாறை தேயிலைத் தோட்டங்களில் நியாயமான தினக்கூலி கிடைக்காததால் கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 60 ஆயிரம் தொழிலாளர்கள் வெளியேறிவிட்டனர். எனவே, தொழிலாளர்களுக்குப் பணிப் பாதுகாப்பு, நியாயமான கூலி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x