Published : 22 Mar 2014 04:07 PM
Last Updated : 22 Mar 2014 04:07 PM

கோவை நொய்யல் ஆற்றைக் காக்கத் திட்டம் தேவை!

# கோவையில் ஓடும் நொய்யல் ஆற்றைச் சீரமைக்கத் திட்டங்கள் எதுவும் இல்லை. வெள்ளியங்கிரி மலையில் உற்பத்தியாகும் இந்த ஆறு சிறுவாணி, பேரூர், திருப்பூர் வழியாக பவானி - கொடுமுடியில் கலக்கிறது. பேரூர் வரை மட்டுமே இந்த ஆறு மாசுபடாமல் இருக்கிறது. அதைத் தாண்டியவுடன் நகரக் கழிவுகள், தொழிற்சாலை மற்றும் சாயக் கழிவுகள் ஆற்றில் கலக்கின்றன. ஆற்றைச் சீரமைக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்டகாலக் கோரிக்கை.

# கோவை - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பெரியநாயக்கன்பாளையம் - மேட்டுப்பாளையம் வரை 20 கிலோ மீட்டர் தூரத்துக்கு நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் முடங்கிக்கிடக்கின்றன. இதனால், இந்தப் பகுதிகளில் விபத்துகளும் அதிகம் நடக்கின்றன.

# கவுண்டம்பாளையம், ஆனைக்கட்டி, துடியலூர் பகுதிகளின் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரங்களில் யானைகள் ஊருக்குள் அடிக்கடி புகுந்துவிடுகின்றன. இவற்றைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை.

# கோவையில் சிறு நவீன பஞ்சாலைகள் சுமார் 660 உள்ளன. பெரும்பாலான ஆலைகளில் மூன்று ஆண்டுகளுக்கு ஒப்பந்தம்போட்டு வெறும் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து தொழிலாளர்களைக் கசக்கிப் பிழிகிறார்கள். 18 வயதில் உள்ளே வரும் ஓர் இளம் பெண் 21 வயதுக்குப் பின்புதான் வெளியே செல்ல முடிகிறது. இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும் என்கிறார்கள் தொழிலாளர்கள்.

# நகருக்குள் பாதாளச் சாக்கடை, மழைநீர் வடிகால் பணிகள், குடிநீர்த் திட்டப் பணிகள் பாதி அளவுதான் நிறைவடைந்துள்ளன. சங்கனூர் பள்ளம் ஓடைக்கு 200 கி.மீ தொலைவுக்குக் கரை கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால், பணிகள் நடக்கவில்லை. 284 கோடி ரூபாயில் மேற்குப் புறவழிச்சாலைத் திட்டமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

# கோவை நகருக்குள் வராமல் இருகூர் அருகே கேரளாவுக்குத் திருப்பி விடப்பட்டுக்கொண்டிருந்த ரயில்களில் ஆறு ரயில்கள் இப்போது கோவை நகருக்குள் வருகின்றன. ஆனால், எதிர்பார்த்தற்கு மாறாக, மற்றொரு பிரச்சினை உருவாகியுள்ளது. இந்த ரயில்கள் நகருக்குள் வரும்போது சுமார் 20 ரயில்வே கேட்டுகள் மூடப்பட்டு, நாள் ஒன்றுக்குச் சுமார் 6 மணி நேரம் வரை வாகனங்கள் காத்திருக்கின்றன. அங்கெல்லாம் மேம்பாலங்கள் தேவை என்பது மக்களின் கோரிக்கை. தவிர நஞ்சுண்டாபுரம் உட்பட நகரின் பல இடங்களில் மேம்பாலம் கட்டும் பணிகள் பாதியில் நிற்கின்றன.

# மின்வெட்டுப் பிரச்சினையால் விவசாயம், விசைத்தறி, கறிக்கோழிப் பண்ணை, பனியன் கம்பெனி, பவுண்டரி, உதிரி பாகங்கள் தொழிற்சாலைகள், நூற்பாலைகள் என மொத்தத் தொழிலும் முடங்கிக்கிடக்கிறது. ஒருகாலத்தில் கோவையில் சிறு தொழிலதிபர்களாக இருந்தவர்கள் இன்று கூலி வேலைக்குச் செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கடந்த மூன்று மாதங்களாகத்தான் மின் விநியோகம் பரவாயில்லை.

# கோவையில் தரமான கல்லூரிகள் இருப்பதால், பெரும்பாலான இளைஞர்கள் தகவல் தொழில்நுட்பம் படித்துள்ளனர். ஐ.டி. பார்க் அமைக்கப்பட்டிருந்தாலும், இங்கே எதிர்பார்த்த அளவுக்கு ஐ.டி. நிறுவனங்கள் வரவில்லை. சமீபத்தில் கோவையிலிருந்து பெரும் முதலீடு பிற மாநிலங்களுக்குச் செல்வதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனால், படித்த இளைஞர்கள் பெங்களூரு, ஐதராபாத், சென்னை போன்ற பெரு நகரங்களுக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

# நிலம் ஆர்ஜிதம் செய்வதில் எதிர்ப்புகள் இருப்பதால், சர்வதேச விமான நிலைய விரிவாக்கம் கேள்விக்குறியாகி உள்ளது. அதற்கேற்பக் கட்டமைப்பு வசதிகள், தரமான தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் ஏற்படுத்தப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x