Published : 20 Jul 2018 04:57 PM
Last Updated : 20 Jul 2018 04:57 PM

‘சரி சரி சண்டை போடாதீங்க ஏட்டய்யா’; மாமூல் தகராறில் ஈடுபட்ட போலீஸாரை மணல் திருடும் நபர் சமாதானப்படுத்திய காட்சி: வைரலாகப் பரவும் வீடியோ

மணல் திருட்டில் ஈடுபட்டவர்களை மாமூல் வாங்கி அனுமதித்த காவலருடன் எஸ்.ஐ. சண்டை போட ‘சண்டை போடாதீங்க ஏட்டய்யா’ என்று மணல் திருட்டில் ஈடுபடுபவர் சமாதானப்படுத்தும் காணொலிக் காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மணல் திருட்டு தமிழகத்தில் பெரும் சாபக்கேடாக உள்ள நிலையில் உயர் நீதிமன்றமே கடுமையாக கண்டித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மணல் திருட்டைத் தடுக்க முயன்று தனது உயிரையே கொடுத்த போலீஸார் உள்ளனர்.

சமூதாயத்தின் பெரும் சீர்கேடாக இயற்கையை அளிக்கும் மணல் திருட்டு நபர்களை பிடிக்கும் பொறுப்பில் உள்ள போலீஸார் மணல் திருடர்களிடம் மாமுல் வாங்குவதில் சண்டைபோட்ட சம்பவம் மதுரையில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மதுரை மாவட்டம், வைகை ஆற்றுப் பகுதியில் மணல் திருட்டு சாதாரணமாக நடந்து வருகிறது. மாட்டு வண்டிகள் மூலமாக மணலைத் திருடி விற்பனை செய்து வருவது வாடிக்கையான நிகழ்வாக உள்ளது. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீஸார் மாமூல் வாங்கிக்கொண்டு அனுமதிப்பதாக அப்பகுதியில் குற்றச்சாட்டு உள்ளது.

‌மணல் திருட்டு நடக்கும் பகுதி அண்ணாநகர் காவல் நிலைய எல்லையில் வருகிறது. மணல் திருட்டில் மாமூல் அதிகம் வசூலிக்கப்படுவதை அறிந்த மதிச்சியம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பிரேம் சந்திரன் தனது உரிமையை நிலைநாட்ட எண்ணினார். தனது அதிகாரத்தைக் காண்பிக்க எண்ணி திடீரென களத்தில் குதித்தார். மணல் திருடிக் கொண்டிருந்த கும்பலைத் துப்பாக்கி முனையில் மடக்கினார்.

’நாமதான் மாமூலை கரெக்டா கொடுத்து விடுகிறோமே இவர் யார் புதுசா ஆஃபிஸர் நம்மை மிரட்டுகிறார்’ என்ற யோசனையுடன்,  'என்ன சார் துப்பாக்கி எல்லாம் தூக்கிட்டு வந்துட்டீங்க அதான் கரெக்டா கொடுத்து விடுகிறோமே’ என்று மணல் திருடும் கும்பலைச் சேர்ந்தவர்கள் அலட்சியமாகக் கேட்டுள்ளனர்.

“டேய் நான் என்ன மாமூல் வாங்கும் போலீஸுன்னு நினைச்சீங்களா? ஒருத்தன் தப்பிக்க முடியாது அம்புட்டு பயலுவளும் கையைத் தூக்குங்க” என்று எஸ்.ஐ மிரட்ட, அவ்வளவுதான்டா இதோடு கதை முடிந்தது என்று நினைத்த மணல் திருட்டு கும்பலைச் சேர்ந்தவர்கள் நாம்“சார் தெரியாம செய்துவிட்டோம் சார்” என்று பம்மியுள்ளனர்.

''அதான்டா நானும் சொல்றேன், இவ்வளவு நாளா இதை தெரியாம நான் இருந்ததால்தான் நீங்க தெரியாம தப்பிச்சிட்டீங்க இனிமேல் அது நடக்காது’’ என்று எஸ்.ஐ. பிரேம் சந்திரன் கூற “சார் நாங்கள் உங்களுக்கு என்ன செய்யணும்” என்று மணல் கடத்தல் கும்பல் கேட்க, அப்படி வாங்க வழிக்கு என்று சிரித்த எஸ்.ஐ ஒரு மாட்டு வண்டிக்கு குறிப்பிட்ட தொகை வீதம் தனக்கும் லஞ்சம் தர வேண்டும் எ‌னக் கேட்டுள்ளார்.

‘ஒரு திருட்டுக்கு இரண்டு மாமூலா’ “சார் ஏற்கெனவே கொடுத்துக்கிட்டு இருக்கோமே சார்” என்று அவர்கள் கூற, “அதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கு வரவேண்டியது வரணும், நாட்டையே கொள்ளை அடிக்கிறீர்களா? உழைச்சிப் பிழையுங்கடா, மனுஷனா இருந்த நேர்மை இருக்கணும்” என்று எஸ்.ஐ அடுக்கடுக்காக அறிவுரை கூற “சார் நீங்கள் மாமூல் கேட்பதை விட அறிவுரை சொல்வதை எங்களால் தாங்க முடியவில்லை எவ்வளவு கொடுக்கணும்னு சொல்லுங்க” என்று கேட்டுள்ளனர்.

“கொடுப்பீங்க கொடுப்பீங்க அப்ப இந்த லிமிட் ஸ்டேஷன் போலீஸ் நான் எதற்கு இருக்கிறேன்” என்று அண்ணாநகர் காவல் நிலைய காவலர் ராம்குமார் அப்போது அங்கே திடீரென்று என்ட்ரி ஆனார்.

’’சார் வந்துட்டாருல்ல, நீங்களே பேசி ஒரு நியாயம் சொல்லுங்க சார்’’ என்று மணல் திருட்டு நபர்கள் ராம்குமாரிடம் நியாயம் கேட்க, எஸ்.ஐ. பிரேம் சந்திரனும், காவலர் ராம்குமாரும் முறைக்க அந்த இடத்தில் ஒரு வெப்பம் உருவானது.

’’ஏன் சார் என் எல்லைக்குள்ள வந்து மாமுல் வாங்குகிறீர்கள்’’ என்று ராம்குமார் கேட்க ’’நான் என்ன இளிச்சவாயனா?’’ என்று பிரேம் சந்திரன் கேட்க இருவரும் ஆபாசமாகப் பேசி சண்டையிட்டுக்கொண்டனர்.

’’எல்லாத்துக்கும் ஒரு பொறுமை உண்டு’’ என்று பிரேம் சந்திரன் எகிற, ’’இங்க பாரு நான் பட்டாளத்தில் வேலை பார்த்தவன், டெய்லி வந்து தொல்லை கொடுக்கக் கூடாது’’ என்று ராம்குமார் கூறியுள்ளார்.

இருவருக்கும் சண்டை முற்றிக்கொள்ள பிரேம் சந்திரன், ''அதிகமா பேசுன நான் மென்டலாயிடுவேன், மரியாதையாப் பேசணும்’’ என்று எகிற, 'மருதமலை' படத்தில் ‘சரி சரி சண்டை போட்டுக்காதிங்க ஏட்டய்யா’ என்று மாமூல் வாங்க வரும் வடிவேலிடம் வியாபாரி கூறும் காட்சியில் வருவதுபோல் போலீஸார் இருவரின் சண்டையை மணல் திருட வந்த நபரே சமாதானப்படுத்தி  “சரி, சரி சண்டை போட்டுக்காதீங்க சார். எவ்வளவு எதிர்பார்க்கிறீர்கள் சார்’’  என்று கேட்டுள்ளார்.

இவர்களின் அத்தனை நடவடிக்கையையும் அதே கும்பலில் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து வாட்ஸ் அப்பில் போட்டுவிட்டார். இந்த வாட்ஸ் அப் வீடியோ ஃபேஸ்புக் வரை பரவி மதுரை காவல் ஆணையர் காதுககுப்  போக அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக பிரேம் சந்திரனையும், ராம்குமாரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்ட மதுரை காவல் ஆணையர்  காணொலிக்காட்சி குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். விசாரணை முடிவில் காவலர்கள் இருவருக்கும் சஸ்பெண்ட் நிச்சயம் என்கின்றனர் சக காவலர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x