Published : 17 Jul 2018 02:32 PM
Last Updated : 17 Jul 2018 02:32 PM

இளம்பெண்ணிடம் செல்போன் பறிப்பு; 4 கி.மீ. தூரம் விரட்டிச்சென்று பிடித்த இளைஞர்: திமுக எம்எல்ஏ பாராட்டு

சைதாப்பேட்டையில் இளம்பெண்ணிடம் செல்போனைப் பறித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் பறந்த இளைஞர்களை 4 கி.மீ. துரத்திச்சென்று தி.நகர் அருகே மடக்கிப் பிடித்த இளைஞருக்குப் பாராட்டு குவிகிறது. திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் அந்த இளைஞரை நேரில் அழைத்துப் பாராட்டி, அவருக்கு கைக்கடிகாரத்தைப் பரிசாக அளித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் வசிப்பவர் ப்ரீத்தி (21). அடையாறில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்றிரவு 9 மணி அளவில் பணி முடிந்து வீடு திரும்ப பேருந்தில் வந்து இறங்கிய அவர் சென்னை சைதாப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்து வந்துள்ளார். அப்போது அவரது செல்போனை மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டுபேர் பறித்துள்ளனர்.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் மோட்டார் சைக்கிள் நபர்களுடன் போராடினார். அவர்கள் செல்போனைப் பறிக்கும் முயற்சியில் தீவிரமாக இருந்ததில் ப்ரீத்தி கீழே விழுந்து காயமடைந்தார். இதை அவ்வழியாக வந்த சின்னமலை பகுதியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷ் (24) தனது மோட்டார் சைக்கிளில் அவர்களை மடக்கப் பார்த்தார்.

ஆனால் அவர்கள் வேகமாகச் சென்றதால் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து தனது மோட்டார் சைக்கிளில் அந்த இளைஞர்களை விரட்ட ஆரம்பித்தார். விக்னேஷிடம் சிக்காமல் போக்குகாட்டியபடி வேகமாகச் சென்ற இளைஞர்கள் தி.நகர் பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து நெரிசல் காரணமாக வேகத்தைக் குறைத்தனர். அப்போது விக்னேஷ் அவர்களை இடித்துத் தள்ளினார்.

அப்போது இருவரில் ஒருவர் தப்பி ஓடினார். விக்னேஷ் ஒருவரைப் பிடித்தார். திருடன் தப்பி ஓடுகிறான் என்று குரல் கொடுத்ததை அடுத்து அந்த இளைஞரை அருகில் உள்ள பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். பின்னர் இருவரையும் அவர்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளுடன் மாம்பலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போலீஸார் இருவரிடமும் நடத்திய விசாரணையில், அவர்கள் ஆலந்தூரைச் சேர்ந்த நவீன் (24) மற்றும் நிர்மல் (22) எனத் தெரியவந்தது. அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் பறித்த இளைஞர்களை துணிச்சலாக விரட்டிப் பிடித்த இளைஞர் விக்னேஷை போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.

சைதாப்பேட்டையை சேர்ந்த விக்னேஷின் துணிகர செயல் அத்தொகுதி எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் கவனத்திற்குச் சென்றது. இதையடுத்து இன்று காலை விக்னேஷின் வீட்டுக்கு அவர் நேரில் சென்றார். அவரது பெற்றோர் மா.சுப்பிரமணியத்தை வரவேற்றனர். அவர்களுக்கு வாழ்த்துச் சொன்ன அவர் இளைஞர் விக்னேஷின் தீரச்செயலைப்பாராட்டினார். மேலும், மா. சுப்பிரமணியன் விக்னேஷுக்கு கைக்கடிகாரத்தைப் பரிசாக அளித்தார்.

இது குறித்து மா.சுப்பிரமணியன் தனது முகநூலில் பதிவு செய்திருப்பதாவது:

“நேற்று மாலை சைதையில் தேரடி சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த இளம் பெண்ணொருவரின் செல்போனை அபகரித்துக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் தப்பிச்சென்ற இரண்டு பேரை ஏறத்தாழ நான்கு கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்று பிடித்து,கொள்ளையர்கள் பறித்துச்சென்ற செல்போனை வாங்கி R1 (தியாகராய நகர்)காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ள சைதை சின்னமலை பகுதியைச் சார்ந்த இளைஞர் நண்பர் விக்னேஷின் இல்லம் தேடிச் சென்று அவரைப் பாராட்டி கைக்கடிகாரம் ஒன்றைப் பரிசளித்தோம்” என்று பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x