Published : 12 Jul 2018 04:20 PM
Last Updated : 12 Jul 2018 04:20 PM

தவறான உறவால் மகன் கொலை; ஆண் நண்பர், கணவர் இருவரையும் கொல்ல துப்பாக்கி வாங்கிய பெண் கைது

சென்னையில் தவறான உறவுகாரணமாக தனது 9 வயது மகனை அடித்துக் கொன்ற ஆண் நண்பர் மற்றும் கணவரை கொல்ல துப்பாக்கி வாங்கிய பெண்ணிடம் ரூ.5 லட்சம் பெற்று போலி துப்பாக்கி கொடுத்து ஏமாற்றியவர்கள் கைது செய்யப்பட்டனர். கொலை நோக்கில் துப்பாக்கி வாங்கிய பெண்ணும் கைது செய்யப்பட்டார்.

சென்னை நெசப்பாக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி ரித்தேஷ் என்ற 9 வயது சிறுவன் குடும்ப நண்பரால் கடத்தி கொலை செய்யப்பட்டார். கொலையாளி நாகராஜ் என்பவரை போலீஸார் கைது செய்தனர். போலீஸாரிடம் கொலையாளி அளித்த வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் தகவல்களைக் தெரிவித்திருந்தார்.

சிறுவன் ரித்தேஷின் தாயார் மஞ்சுளா(38). மஞ்சுளாவின் கணவர் மின்வாரியப் பணியாளராக பணியாற்றி வந்தார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருந்த நிலையில் திடீரென அவர் மரணமடைந்தார். இதையடுத்து கருணை அடிப்படையில் மஞ்சுளாவுக்கு மின்வாரியத்தில் பணி கிடைத்தது.

தமிழ்நாடு மின்சார வாரியத் தலைமை அலுவலகத்தில் பணியாற்றிய மஞ்சுளாவுக்கும் கார்த்திகேயனுக்கும் நட்பு ஏற்பட்டு நாளடைவில் இருவரும் முறைப்படி பதிவுத் திருமணம் செய்துகொண்டனர். இனிமையாக சென்ற இல்லற வாழ்வின் விளைவாக அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

ரித்தேஷ் என்று பெயரிட்டு வளர்த்து கே.கே.நகரிலேயே மிகப் பெரிய பள்ளியில் சேர்த்து படிக்க வைத்து வந்தனர். கார்த்திகேயனை விட மஞ்சுளா 4 வயது பெரியவர். நாகராஜ் என்ற வீடு புரோக்கர் மஞ்சுளாவுக்கு பழக்கமானார். நட்பு வளர்ந்து நாளடைவில் அது கூடா நட்பாக மாறியுள்ளது. கார்த்திகேயன் வசதியானவர். தொழிலிலும் நல்ல வருமானம். நாகராஜ் மஞ்சுளாவின் தவறான தொடர்பு பற்றிஅறிந்த கணவர் கார்த்திகேயன் அவர்களை கண்டித்தார்.

மனைவியின் நண்பர் நாகராஜை கார்த்திகேயன் தாக்கி துரத்திவிட்டார். கார்த்திகேயனை எதிர்க்க முடியாத நாகராஜ், அவரை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் மஞ்சுளா-கார்த்திகேயன் தம்பதிகளின் 9 வயது மகன் ரித்தேஷை கடத்திச்சென்று சேலையூரில் அபார்ட்மெண்டில் அடைத்து வைத்து கொலை செய்தார். பின்னர் வேலூரில் கைது செய்யப்பட்ட நாகராஜ் தான் ரித்தேஷை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

நாகராஜ் கைது செய்யப்பட்டார். மகன் கொலை செய்யப்பட்டு, கணவனும் கைவிட்ட நிலையில் தனியாக வாழ்ந்து வந்த மஞ்சுளாவுக்கு தனது இந்த நிலைக்கு காரணமான நாகராஜ் மீது கொலை வெறி ஏற்பட்டது. தனது மகன் கொலைக்கு பழிக்கு பழிவாங்க திட்டமிட்டார். நாகராஜ் விரைவில் ஜாமீனில் வெளிவர உள்ளது தெரியவந்தது. இதையடுத்து நாகராஜை கொல்ல திட்டமிட்டார். மேலும் சொத்துப்பிரச்சினையில் தனது கணவரையும் கொல்ல வேண்டும் என முடிவெடுத்துள்ளார்.

தற்போது மஞ்சுளா சிஐடி நகரில் தனியாக வசித்து வருகிறார். நாகராஜை கொல்ல துப்பாக்கி வாங்க வேண்டும் என திட்டமிட்ட மஞ்சுளா இதற்காக சைதாப்பேட்டை தெற்கு சிஐடி நகர் நந்தனத்தில் வசிக்கும் பிரசாந்த்(24), பள்ளிக்கரணை ராஜிவ்காந்தி 2 வது தெருவில் வசிக்கும் சுதாகர்(எ) சுரேஷ்(31) என்ற இருவரை அணுகியுள்ளார். அவர்கள் துப்பாக்கி மற்றும் சைல்ன்ஸருடன் சேர்ந்து ரூ.5 லட்சம் ஆகும் என்று கூறியுள்ளனர்.

அதற்கு ஏற்றார்போல் உள்ள துப்பாக்கிகளின் கேட்லாக்கை காட்டியுள்ளனர். தூரத்திலிருந்து நாகராஜை குறிப்பார்த்து சுட்டுக்கொல்ல வேண்டும், சத்தமில்லாமல் இருக்க சைல்ன்ஸர் துப்பாக்கியாக இருக்க வேண்டும் என்று கூறிய மஞ்சுளா ரூ.5 லட்சத்தை கொடுத்துள்ளார். சொன்னபடி பிரசாந்தும், சுரேசும் துப்பாக்கி பார்சலை மஞ்சுளாவிடம் கொடுத்து வீட்டில் போய் பிரித்து பாருங்கள் என்று கூறியுள்ளனர்.

வீட்டுக்கு வந்து பார்சலை பிரித்துப் பார்த்த மஞ்சுளாவுக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. அவர்கள் கொடுத்தது சாதாரணமாக சில ஆயிரங்கள் விலை உள்ள ஏர்கன் ஆகும். தாம் நன்றாக ஏமாற்றப்பட்டிருப்பதை அறிந்த மஞ்சுளா திருடனுக்கு தேள் கொட்டியதுபோல் செய்வதறியாது திகைத்துள்ளார். பின்னர் வேறு மாதிரி புகார் கொடுக்கலாம் என்று சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் அளித்துள்ளார்.

புகாரை கேட்ட போலீஸார் 5 லட்சம் மோசடி செய்ததாக சொல்கிறீர்கள் என்ன மோசடி செய்தார்கள் என்று கேட்டுள்ளனர். ஆனால் மஞ்சுளா உண்மையை சொன்னால் மாட்டிக்கொள்வோன் என்று பயந்து வேறொரு பொருள் வாங்க பணம் கொடுத்தபோது தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளார். போலீஸார் இருவரையும் பிடித்து ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரித்தபோது துப்பாக்கி வாங்க பணம் கொடுத்த கதை தெரியவந்துள்ளது.

கணவரையும் தனது மகனைக்கொன்ற ஆண் நண்பரையும் கொலை செய்யும் நோக்கில் கள்ளத்துப்பாக்கி வாங்க பணம் கொடுத்த மஞ்சுளா, அவரிடம் பணம் வாங்கி மோசடி செய்த பிரசாந்த் மற்றும் சுரேஷ் ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஒரு பெண் கணவனின் மறைவுக்கு பின்னர் கிடைத்த நல்ல வாழ்க்கையை வாழத்தெரியாமல் தவறான உரவில் ஈடுபட்டதால் மகனையும் இழந்தார்.

அதன் பின்னரும் கொலை முயற்சியில் ஈடுபட முயன்று தற்போது போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார். தற்போது கைது நடவடிக்கையால் அரசு வேலையும் இழந்து சிறைக்கும் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது அவரது குடும்பத்தாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x