Published : 08 Jul 2019 07:16 PM
Last Updated : 08 Jul 2019 07:16 PM

ஹாலிவுட் பட வாய்ப்பை மறுத்தது ஏன்? - விக்ரம் விளக்கம்

ஹாலிவுட் படத்தில் நடிக்க மறுத்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார் விக்ரம்.

விக்ரம் நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகியுள்ள படம் ‘கடாரம் கொண்டான்’. ராஜேஷ் எம் செல்வா இயக்கியுள்ள இந்தப் படத்தை, கமலின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளன.

அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு, ஜிப்ரான் இசையமைத்துள்ளார். வருகிற 19-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகிறது.

இந்நிலையில், இந்தப் படத்தின் புரமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள விக்ரம், ஹாலிவுட் படத்தில் நடிக்க மறுத்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

“கியானூ ரீவ்ஸுடன் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க என்னை அணுகினார்கள். அந்தக் கதாபாத்திரம் நன்றாக இல்லை. அமிதாப் பச்சன் ‘கிரேட் காட்ஸ்பி’ படத்தில் நடித்தார். ஆனால், வெகுசில காட்சிகளே வந்திருந்தார்.

ஹாலிவுட், இந்தியாவைப் பெரிய சந்தையாகப் பாக்கிறது. எனவே, அதைத் தங்களுக்கு அனுகூலமாக்கிக் கொள்ள இந்திய நடிகர்களைத் தங்கள் படங்களில் நடிக்க வைக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வரும் வாய்ப்புகளை நாம் சரியாகக் கணித்து, ஜாக்கிரதையாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார் விக்ரம்.

‘கடாரம் கொண்டான்’ படத்தைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து மற்றும் மணிரத்னம் படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் விக்ரம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x