Published : 08 Jul 2019 06:46 PM
Last Updated : 08 Jul 2019 06:46 PM

இயக்குநர் சங்க அலுவலகமா அல்லது  கேளிக்கை விடுதியா எனத் தெரியவில்லை: கரு.பழனியப்பன்

இது இயக்குநர் சங்க அலுவலகமா அல்லது  கேளிக்கை விடுதியா எனத் தெரியவில்லை. எங்கு பார்த்தாலும் காலி மது பாட்டில்களாக இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் கரு.பழனியப்பன்.

கடந்த மாதம் தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் 99-வது பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், இயக்குநர் பாரதிராஜாவை தலைவர் பதவிக்கு ஒருமனதாகத் தேர்வு செய்தனர். மேலும், இதர பதவிகளுக்கானத் தேர்தல் ஜுலை 14-ம் தேதி நடைபெறும் என்று அறிவித்தார்கள்.

ஒருமனதாக பாரதிராஜாவைத் தேர்வு செய்ததற்கு, எஸ்.பி.ஜனநாதன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனைத் தொடர்ந்து தன் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் பாரதிராஜா. தலைவர் பதவிக்கும் சேர்த்து தேர்தல் என்பதால், ஜுலை 21-ம் தேதிக்கு இயக்குநர் சங்கத் தேர்தலை தள்ளி வைத்தனர்.

வேட்புமனு தாக்கல் உள்ளிட்ட விபரங்களை ஆலோசிக்க இயக்குநர் சங்கத்தின் 100-வது சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூலை 8) சென்னையில் நடைபெற்றது. இதில், தற்போது தலைவராக இருக்கும் விக்ரமன், பொருளாளர் பேரரசு, செயலாளர் ஆர்.கே.செல்வமணி பங்கேற்றனர். இதில், இயக்குநர்கள் எஸ்.பி.ஜனநாதன், கரு.பழனியப்பன் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில், பாரதிராஜாவை ஒருமனதாகத் தேர்வு செய்ததற்கு தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்தார் கரு.பழனியப்பன். இது குறித்து, “இயக்குநர் சங்கப் பொதுக்குழுவுக்குப் பெரும்பாலும் வராத பாரதிராஜா, கடந்தமுறை மட்டுமே கலந்து கொண்டார். அவரால்தான் தமிழ் சினிமாவின் முகம் மாறியது என்பது உண்மை. அதற்காக அவரை சாமியாகக் கும்பிட வேண்டும் என அவரே விரும்பமாட்டார். தேர்தலில் போட்டியிட்டு ஜனநாயக ரீதியில் தேர்வு செய்யப்பட வேண்டும்” என்று பேசினார் கரு.பழனியப்பன். இதற்கு பாரதிராஜாவின் ஆதரவு இயக்குநர்கள் பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இதனால் சிறு சலசலப்பு ஏற்பட்டது.

தொடர்ச்சியாக கரு.பழனியப்பன் பேசுகையில், “இது இயக்குநர் சங்க அலுவலகமா அல்லது  கேளிக்கை விடுதியா எனத் தெரியவில்லை. எங்கு பார்த்தாலும் காலி மது பாட்டில்களாக இருக்கிறது” என்று புகார் கூறினார். இந்தப் புகாரால் மேலும் சலசலப்பு ஏற்பட்டு ரகளையாக மாறியது. பல்வேறு முன்னணி இயக்குநர்களும் பேச்சுவார்த்தை நடத்தி சலசலப்பைச் சரிசெய்தனர்.

இதனைத் தொடர்ந்து வருகிற 21-ம் தேதி தேர்தலுக்காக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தத் தேர்தலில் தலைவர், செயலாளர், பொருளாளர், 2 துணைத் தலைவர்கள், 4 இணைச் செயலாளர்கள், 12 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x