Published : 24 Jun 2019 05:44 PM
Last Updated : 24 Jun 2019 05:44 PM

ராதாரவி சர்ச்சைப் பேச்சின்போது நடிகர் சங்கத்தைக் கேள்வி கேட்ட நயன்தாரா: தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள படம் ‘கொலையுதிர் காலம்’. பூமிகா, பிரதாப் போத்தன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். வி.மதியழகன் தயாரித்துள்ளார்.

‘கொலையுதிர் காலம்’ இசை வெளியீட்டு விழா, கடந்த மார்ச் 23-ம் தேதி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய ராதாரவி, “எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் எல்லாம் லெஜண்ட். அவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். நயன்தாரா நல்ல நடிகை, இவ்வளவு நாள் திரையுலகில் நிலைப்பதே பெரிய விஷயம். அவரைப் பற்றி வராத செய்தியே கிடையாது. அதெல்லாம் தாண்டி நிற்கிறார். தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஒரு விஷயத்தை 4 நாட்கள் மட்டுமே ஞாபகம் வைத்திருப்பார்கள். பிறகு விட்டுவிடுவார்கள்.

நயன்தாரா, ஒரு படத்தில் பேயாகவும் நடிக்கிறார். இன்னொரு புறம் சீதாவாகவும் நடிக்கிறார். இப்போது சீதாவாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். முன்பெல்லாம் சீதாவாக நடிக்கவேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவைத்தான் தேடுவார்கள். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம். அதற்கு நேர்மாறாக இருப்பவர்களும் நடிக்கலாம்” என்று பேசினார்.

அவருடைய இந்தப் பேச்சு, மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. திரையுலகைச் சார்ந்தவர்கள் மட்டுமின்றி, பலரும் இந்தப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தனர். குறிப்பாக, திமுக தலைவர் ஸ்டாலின், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராதாரவியை தற்காலிகமாக நீக்கினார்.

பொது விஷயங்கள் மட்டுமின்றி, தன்னைப் பற்றிய எந்த விஷயத்துக்குமே வாய் திறக்காத நயன்தாரா, அந்தச் சமயத்தில் மட்டும் மிகப்பெரிய அறிக்கையை வெளியிட்டார். அதில், “நடிகர் சங்கத்துக்கு எனது பணிவான கேள்வி. உச்ச நீதிமன்றம் சொன்னதைப் போல ஒரு புகார் குழுவை அமைப்பீர்களா? விசாகா குழு வழிகாட்டுதல்களின்படி துறைக்குள் விசாரணையைத் தொடங்குவீர்களா?” என்று நடிகர் சங்கத்திடம் கேள்வி எழுப்பினார் நயன்தாரா. (நயன்தாராவின் முழு அறிக்கையைப் படிக்க: ராதாரவியின் மலிவான உத்தி; நடிகர் சங்கத்துக்கு கேள்வி: நயன்தாரா காட்டம்)

நயனின் இந்தக் கேள்வியைக் கேட்டுப் பொங்கி எழுந்த நடிகர் சங்கம், உடனடியாக ராதாரவிக்கு எதிராக ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில், “இனிவரும் காலங்களில் நீங்கள் இதை உணர்ந்து, இதுபோன்ற வக்கிரமான பேச்சைத் தவிர்த்து செயல்படுவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அதைத் தவிர்த்து, இதுபோன்ற செயல்களில் நீங்கள் தொடர்ந்து செயல்படுவீர்கள் என்றால், தென்னிந்திய நடிகர் சங்கம் திரைத்துரையில் தங்களுக்குத் தொழில் ஒத்துழைப்பு தருவது பற்றித் தீவிரமாக முடிவு செய்ய வேண்டி இருக்கும் என்பதை முன்னரே தங்களுக்கு இக்கடிதத்தின் மூலமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் கூறப்பட்டிருந்தது.

 (நடிகர் சங்கத்தின் முழு அறிக்கையைப் படிக்க:தொழில் ஒத்துழைப்பு தருவது பற்றி முடிவு செய்ய வேண்டி இருக்கும்: ராதாரவிக்கு நடிகர் சங்கம் எச்சரிக்கை)

நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளரான விஷால்தான் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் உள்ளார் என்பதால், தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பிலும் ராதாரவியைக் கண்டித்து உடனடியாக ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.

அதில், “நடிகர் சங்கம் எடுக்கும் முடிவிற்கு தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் முழு ஒத்துழைப்பு வழங்கும்” என்று கூறப்பட்டிருந்தது. (தயாரிப்பாளர் சங்கத்தின் முழு அறிக்கையைப் படிக்க: கைதட்டலுக்காக கொச்சையான பேச்சுகளைப் பேசி வருகிறார் ராதாரவி: தயாரிப்பாளர் சங்கம்)

இப்படி தனக்குப் பிரச்சினை வந்தபோது நடிகர் சங்கத்தை உரிமையாகக் கேள்வி கேட்ட நயன்தாரா, நேற்று (ஜூன் 23) நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க வரவில்லை. இந்த முறை மட்டுமல்ல, கடந்த முறை (2015) நடைபெற்றத் தேர்தலிலும் வாக்களிக்கவில்லை.

நயன்தாரா மட்டுமின்றி த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் போன்ற முன்னணி நடிகைகளும் இந்தத் தேர்தலில் வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா கேள்வி கேட்டபோது பொங்கி எழுந்த நடிகர் சங்க நிர்வாகிகளும் உறுப்பினர்களும், அவர்கள் நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்கக்கூட வரவில்லை என்று சுட்டிக்காட்டத் தவறியது ஏன்? கடந்த முறை வாக்களிக்கவில்லை என்பதைச் சொல்லி, இந்த முறையாவது வாக்களிக்க வரச்சொல்லி வலியுறுத்தத் தவறியது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து பாண்டவர் அணி சார்பில் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட கருணாஸிடம் பேசினேன். “ஓட்டு போட வராத உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. தேர்தல் தேதி, நடைபெறும் இடம் என எல்லாவற்றையும் தெரியப்படுத்துகிறோம். அப்படி இருக்கும்போது சங்கத்தின் மீது அக்கறை கொண்டு, அவர்களாகத்தானே வந்து ஓட்டு போட வேண்டும்?

நாம் அறிவுறுத்தலாகச் சொல்ல முடியுமே தவிர, அழுத்தம் கொடுக்க முடியாது. அவரவர் கடமையை உணர்ந்து, அவர்களாகத்தான் வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்கள், தபால் வாக்கு செலுத்தியவர்களுக்கு நன்றி சொல்லி இன்று காலையில் ஒரு அறிக்கை கொடுத்துள்ளேன். அஜித் மாதிரியான ஆட்கள் எப்போதுமே வருவதில்லை. அவர்கள் அப்படி இருக்கும்போது நாம் என்ன பண்ண முடியும்?

நயன்தாராவைப் பொறுத்தவரை, அவருக்குப் பிரச்சினை என்று வரும்போது சங்கம் தேவைப்படுகிறது. சங்கம் ஆதரவு தரவில்லை என்று கோபமும் வருகிறது. அப்படியானால் சங்க உறுப்பினரின் தலையாய கடமையான ஓட்டு போடுவதற்கு நயன்தாரா வந்திருக்க வேண்டுமல்லவா?” என்றார் கருணாஸ்.

உரிமையுடன் நடிகர் சங்கத்தைக் கேள்வி கேட்ட நயன்தாரா, தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x