Last Updated : 21 Jun, 2019 12:54 PM

 

Published : 21 Jun 2019 12:54 PM
Last Updated : 21 Jun 2019 12:54 PM

கிரேஸி மோகனும் பாலாஜியும் ராம லட்சுமணர்கள்’’ - ஒய்.ஜி.மகேந்திரா நெகிழ்ச்சி

’‘’கிரேஸி மோகனும் பாலாஜியும் ராம லட்சுமணர்கள் மாதிரி. அப்படியொரு சகோதரர்களை நான் பார்த்ததே இல்லை’’ என்று ஒய்.ஜி.மகேந்திரா நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

நாடக கதாசிரியரும் திரைப்பட வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் குறித்து, நடிகர் ஒய்.ஜி.மகேந்திரா, தனியார் இணையதளச் சேனலில் தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

அதில் அவர் கூறியதாவது:

கிரேஸி மோகனும் நானும் நல்ல நண்பர்கள். நான் சீனியர்தான். ஆனாலும் மனம் விட்டுப் பேசிக்கொள்வோம். ஆனால் கிரேஸி மோகன், பாலாஜி, வாசு மூவரும் என் வீட்டுக்கு வந்து என் அப்பாவுடன் அப்படி அரட்டையடிப்பார்கள். ‘நம்ம அப்பா நம்மகிட்ட இப்படிலாம் பேசவே இல்லியே’ என்று பொறாமைப்படுகிற அளவுக்கு ஜாலியாகப் பேசிக்கொள்வார்கள். அப்பா ஒய்.ஜி.பார்த்தசாரதி, ‘எம் பையன் கழுத்தறுத்துட்டான். அதனால நாடகத்தை கேன்சல் பண்றோம். அதுக்குப் பதிலா, மோகனோட டிராமாவைப் போடுங்க’ என்று சபாவில் சொல்லுவார் அப்பா.

இன்னொரு விஷயமும் கிரேஸி மீது ரொம்பவே பொறாமை கொள்ளச் செய்யும். என்னுடைய டிராமாவைப் பார்த்துவிட்டு, அதை விமர்சித்துப் பாராட்டி நீண்ட கடிதம் எழுதுவான். இப்படித்தான் ‘வியட்நாம் வீடு’ டிராமாவைப் பார்த்துவிட்டு, ‘மகேந்திரா. இதை எங்களால பண்ணவே முடியாது. ரொம்பவே பிரமாதம் பண்ணியிருக்கே. இதுமாதிரி நிறைய பண்ணு மகேந்திரா’ என்று மனதாரப் பாராட்டினான். இப்படிப் பாராட்டுகிற மனசு எனக்குக் கூட இல்லை. ஆனா அப்படியொரு மனசு கிரேஸிக்கு உண்டு.

கிரேஸி மோகனின் மிகப்பெரிய வெற்றியும் சாதனையும் என்னவென்றால், நாடக ஆடியன்ஸில் குழந்தைகளை தன் வசனங்களால் தொட்டுவிடும் திறமைசாலி அவன். குழந்தைகளென்றால், பத்துப் பதினைந்து வயது குழந்தைகளை மட்டும் சொல்லவில்லை. நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிற குழந்தை குணத்தைத் தொட்டு உசுப்பிவிடுவான். என்னுடைய அம்மாவுக்கு 92 வயது. கிரேஸி மோகனின் டிராமாவுக்குப் போய்விட்டு, அப்படியொரு மலர்ச்சியுடன் முகம் கொள்ளாதச் சிரிப்புடன் வருவார்கள்.

கிரேஸி மோகனும் அவன் தம்பி பாலாஜியும் ராம லட்சுமணர்கள் என்றுதான் சொல்லுவேன். இப்படியெல்லாம் பாசமாகவும் பிரியமாகவும் நடந்துகொள்வார்கள். ஒரு படத்தில் நாகேஷ் சொல்லுவார்... ‘நானும் இவனும் ரொம்ப நெருக்கம். நான் சோடா குடிச்சா, இவன் ஏப்பம் விடுவான்’ என்பார். கிரேஸி மோகன் சோடா குடித்தால், பாலாஜி ஏப்பம் விடுவான். அந்த அளவுக்கு அற்புதமான சகோதரர்கள்.

என்னுடைய புது டிராமாவை பாலாஜி பார்த்துவிட்டான். கிரேஸிதான் பார்க்கலை. கடந்த 9ம் தேதி அன்று வெளிநாட்டில் இருந்தேன். அப்போது, சென்னைக்குப் போனதும் இந்த டிராமாவுக்காக ஒரு விழா எடுக்கவேண்டும். அதற்கு சிறப்பு விருந்தினராக கிரேஸி மோகனைப் போடவேண்டும். அப்படிச் செய்தால்தான், நம் புதிய டிராமாவைப் பார்க்க கிரேஸி வருவான்’ என்று சொல்லிக்கொண்டிருந்தேன்.

மறுநாள்... கிரேஸி இறந்துட்டதா தகவல் வருது. எனக்கு எப்படி இருந்திருக்கும், யோசித்துப் பாருங்கள்.

இவ்வாறு ஒய்.ஜி.மகேந்திரா கிரேஸியுடனான தன் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x