Last Updated : 18 Jun, 2019 03:20 PM

 

Published : 18 Jun 2019 03:20 PM
Last Updated : 18 Jun 2019 03:20 PM

தங்கத்தை விட தண்ணீரின் மதிப்பு பெரியது; சேமியுங்கள்: எஸ்.பி.பி வேண்டுகோள்

தங்கத்தை விட தண்ணீரின் மதிப்பு பெரியது. ஆகையால் சேமியுங்கள் என்று 'கூர்கா' இசை வெளியீட்டு விழாவில் எஸ்.பி.பி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘டார்லிங்’, 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு', '100' ஆகிய படங்களைத் தொடர்ந்து 'கூர்கா' படத்தை இயக்கியுள்ளார் சாம் ஆண்டன். இதில் யோகி பாபு, சார்லி, மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒரு நாயும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்துள்ளது.

4 Monkeys Studio தயாரித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் சித்தார்த், கரு.பழனியப்பன், பாடகர் எஸ்.,பி.பி, எஸ்.பி.சரண் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்கள்.

இந்த விழாவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பேசும் போது, “நான் சென்னையில் இருப்பதே ரொம்பக் குறைவு. எங்கேயாவது பயணத்திலேயே இருப்பேன். இப்போதுள்ள படங்களைப் பற்றித் தெரியாது. பாட்டுப் பாட மட்டும் தான் தெரியும். இந்தப் படம் வெற்றியடைய வேண்டும். ஒரு நிர்வாகம் வெற்றியடைந்தால், அதன் மூலம் பலருக்கும் சோறு கிடைக்கும். அது தான் முக்கியமான விஷயம். லைட் மேன்கள், டிரைவர் தொடங்கி ஹீரோக்களை வரை யாருமே சோம்பேறிகளாக இருக்க முடியாது. திரையுலகில் அவ்வளவு கஷ்டப்பட்டு உழைக்கிறார்கள். வெற்றி நம் கையில் இல்லை. ஆனால், வெற்றியடைந்தால் பலருக்குச் சாப்பாடு கிடைக்கும்.

இங்கு நிறைய வாட்டர் பாட்டில்கள் கொடுத்திருக்கிறார்கள். தயவுசெய்து யாரும் விட்டுவிட்டுப் போய்விடாதீர்கள். தங்கத்தை விட தண்ணீரின் மதிப்பு பெரியது. குளிப்பதற்கு அரை பக்கெட் தண்ணீருக்காக அரை மணிநேரம் காத்திருந்தேன். தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. தண்ணீர் ரொம்பவே பார்த்து உபயோகியுங்கள். அதற்குக் காரணம் நாம் தான். இப்போதாவது தண்ணீரைச் சேமிக்க முயற்சி செய்ய வேண்டும்.

ப்ளேட்டில் சாப்பிடுவதை விட இலையில் சாப்பிடுங்கள். இரண்டு உடைகளை மாற்றி மாற்றிப் போடுங்கள். அதைத் துவைப்பதற்காக தண்ணீரை வீணாக்காதீர்கள். இதே மாதிரி நிறைய விஷயங்கள் உள்ளன. அடுத்த தலைமுறைக்கு தண்ணீரைச் சேமித்து கொடுக்க வேண்டியதுள்ளது” என்று பேசினார் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x