Last Updated : 25 May, 2019 08:32 PM

 

Published : 25 May 2019 08:32 PM
Last Updated : 25 May 2019 08:32 PM

புதிய படங்கள், திருமணம் தொடர்பாக வதந்தி: சிம்பு விளக்கம்

புதிய படங்கள், திருமணம் தொடர்பாக வதந்திகள் வலம் வருவது தொடர்பாக சிம்பு அறிக்கை மூலமாக விளக்கமளித்துள்ளார்.

'வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தைத் தொடர்ந்து 'மாநாடு' படத்துக்காக உடல் இளைத்து வருகிறார் சிம்பு. இதனிடையே ஹன்சிகாவின் 50-வது படமான 'மஹா'வில் நடித்து வருகிறார். விரைவில் நரதன் இயக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கவும் தேதிகள் ஒதுக்கியுள்ளார்.

இதனிடையே 'தொட்டி ஜெயா 2', 'வல்லவன் 2', முத்தையா இயக்கத்தில் படம், ஹரி இயக்கத்தில் படம் என பல்வேறு படங்களில் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகின. இதனால் சிம்பு எந்த படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார் என்பதில் குழப்பம் நீடித்தது. மேலும், ஆகஸ்ட் மாதத்தில் சிம்பு திருமணம் செய்யவுள்ளார் என்றும் செய்தி வெளியானது.

இவ்வாறு சிம்புவைச் சுற்றி தொடர்ச்சியாக வதந்திகள் பரவியதைத் தொடர்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிம்பு தெரிவித்திருப்பதாவது:

புது உறவுகளுடன் அதிக நேயத்துடன் என் குடும்பப் புகைப்படம் பெரிய அளவில் வலம் வருவது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளிக்கிறது. என் இளைய சகோதரர், என் சகோதரி குடும்ப வாழ்க்கையை அமைத்து கொண்டது என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகிறது.  இவர்களுக்காக அழகான தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்த ஊடக நண்பர்களுக்கு நான் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது சொந்த மற்றும் தொழில்துறையினரிடத்தில் நிறைய யுகங்களும் வதந்திகளும் நிறைந்திருக்கும். குறிப்பாக என் திருமணம் குறித்த சில வதந்திகள் என் காதுகளுக்கு வருகிறது.  நான் தெளிவுபட கூற விரும்புகிறேன், அந்தமாதிரி திட்டங்கள் எதுவும் இப்போதைக்கு இல்லை, இது குறித்து ஏதேனும் முடிவோ, சம்மதமோ இருந்தால் அதனை நான் குறித்த நேரத்தில் குறித்த வழிமுறையில் தெரிவிப்பேன்

தொழில் துறை ரீதியாகவும் சில படங்களுடன் என்னைத் தொடர்பு படுத்தி நிறைய வதந்திகள் வருவதை அறிகிறேன். ஒரு நடிகராக சில பல வலியுறுத்தும் சூழ்நிலைகளின் அழுத்தத்தில் சில தயாரிப்பாளர்களை நான் கேஷுவலாகச் சந்திக்கும் அவசியம் ஏற்பட்டது. அதனால் நான் பட வாய்ப்புக்காக பார்த்தேன் என்று பொருளல்ல. இந்தச் சந்திப்புகளையெல்லாம் எதிர்காலப் படங்கள் என்று வதந்திகள் பெரிய அளவில் புழங்கி ஏதோ அறிவிக்கப்பட்ட படங்களாகவே செய்திகள் வெளிவருகின்றன.

இது போன்று கேள்விப்பட்டதையெல்லாம் செய்தியாக நம்புவது தொழிற்துறையையும் என் ரசிகர்களையும் தவறான வழிகாட்டுதலுக்கு இட்டுச் செல்கிறது. ஆனால் வதந்திகளை உண்மையென நம்பி அது நடக்காமல் போகும் போது ரசிகர்கள் அதிருப்தியும் ஏமாற்றமும் அடைகின்றனர்.

ஆகவே  அப்படி படங்கள் ஏதாவது நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறேன் என்றால் அதை சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் முறையாக அறிவிக்கும் என்பதை ஒரு நடிகராக இந்தத் தருணத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இவ்வாறு சிம்பு தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x