Published : 20 May 2019 04:43 PM
Last Updated : 20 May 2019 04:43 PM

‘பரியேறும் பெருமாள்’ டு ‘சூப்பர் சிங்கர்’: ஒரு பாடகரின் நெகிழ்ச்சிக் கதை

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வருடம் (2018) ரிலீஸான படம் ‘பரியேறும் பெருமாள்’. கதிர், ஆனந்தி, யோகி பாபு ஆகியோர் நடித்த இந்தப் படம், சாதிக்கொடுமை பற்றித் தீவிரமாகப் பேசியது. எனவே, இந்தப் படம் பெரும்பாலானவர்களால் கொண்டாடப்பட்டது. பல விருதுகளும் இந்தப் படத்துக்குக் கிடைத்தன.

இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். இதில் இடம்பெற்ற ‘பொட்டக்காட்டில் பூவாசம்’ பாடலை விவேக் எழுத, யோகி சேகர் மற்றும் ஃபரீதா இருவரும் பாடினர். இந்த யோகி, தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ‘சூப்பர் சிங்கர் 7’ நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவர்.

“என்னுடைய ஆர்வம் எல்லாமே இசை மீதும், இண்டிபென்டன்ட் மியூசிஸியனா ஆகவேண்டும் என்பதுதான். அதுக்காக என்ன பண்ண வேண்டும் என்பதுதான் என்னுடைய தேடலாக இருந்தது.

நிறைய பாடல்களில் கோரஸ் பாடியுள்ளேன். தினமும் காலை 9 மணியில் இருந்து 6 மணி வரைக்கும் வேலை, மாதச் சம்பளம் என்பதெல்லாம் எனக்குக் கிடையாது. வேலை இருந்தால் மட்டும்தான் காசு கிடைக்கும்.

ஒரு கட்டத்தில், வாழ்வதற்கு காசு கட்டாயம் என்ற சூழ்நிலை ஏற்பட்டது. ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். 6 மாதங்கள் அங்கு வேலைசெய்த பிறகு, ‘நீங்கள் சினிமாவில் பாடிக் கொண்டிருக்கிறீர்கள். எனவே, எங்கள் நிறுவனத்துக்கு செட் ஆக மாட்டீர்கள்’ என்று சொல்லி வேலையைவிட்டு நிறுத்திவிட்டனர்” என்று தன் சோகக்கதையை சொல்லத் தொடங்குகிறார் யோகி.

இந்த நேரத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில், இசைக்கலைஞர்கள் மற்றும் இசையை விரும்புபவர்கள் பற்றி காதலர் தின சிறப்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட யோகி, தன்னுடைய வாழ்க்கைத் துணையையும் அந்த நிகழ்ச்சி மூலமாகப் பெற்றார். மனைவி மஞ்சிமா வந்த நேரம், யோகியின் வாழ்க்கையில் நல்லது நடந்தது. அப்போதுதான் ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

“அந்தப் பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், அந்தப் பாடலை நான் தான் பாடினேன் என பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை. அதனால், எனக்கான அங்கீகாரத்தைத் தேடி மறுபடியும் ஓட ஆரம்பித்தேன். சில சமயம் வேலை கிடைக்கும், சில நேரங்களில் வேலையே இருக்காது. பேச்சுலராக இருந்தபோது எந்த சூழ்நிலையாக இருந்தாலும் சமாளித்துவிடுவேன். ஆனால், திருமணமான பிறகு நிலையான வருமானம் என்பது தேவைப்பட்டது” என்கிற யோகி, வருமானத்துக்காக உணவு டெலிவரி செய்யும் வேலையில் சேர்ந்தார்.

அங்கு ஒருநாளைக்கு 900 ரூபாய் வரை தினசரி வருமானம் கிடைத்தது. ஆனால், அதில் பெட்ரோலுக்கு 300 ரூபாய், சாப்பாட்டு 200 ரூபாய் போக, 500 ரூபாய்தான் அவரால் வீட்டுக்குக் கொடுக்க முடிந்தது. சில சமயங்களில் குழந்தைக்கு டயாப்பர் வாங்கக்கூட காசில்லாமல் கஷ்டப்பட்டுள்ளார் யோகி.

இந்தக் கஷ்டத்திலும் வீட்டிலேயே ஹோம் ஸ்டுடியோ ஒன்று வைக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் யோகியை விட்டுப் போகவில்லை. அவரின் ஆசையைப் புரிந்துகொண்ட மனைவி, தன்னுடைய நகைகளை அடகுவைத்து, கணவனின் ஆசையை நிறைவேற்றியுள்ளார். அந்த நகைகளைக்கூட இன்னும் மீட்க முடியாத கஷ்டத்தில் இருக்கிறார் யோகி.

“என் மனைவி, அவங்க வீட்டில் ஒரே பொண்ணு. அவங்க என்ன ஆசைப்பட்டாலும், உடனே செய்து தருவாங்க. ஆனால், இதுவரைக்கும் என்கிட்ட எந்த விஷயத்தையுமே அவங்க கேட்டது கிடையாது. என்கிட்ட காசே இல்லேனா கூட, என்னுடன் சந்தோஷமா இருப்பாங்க. அது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

மஞ்சிமா, எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு நீ. என்னோட மியூஸிக் மேல, என்னைவிட நீ  மிகப்பெரிய நம்பிக்கை வச்சிருக்கனு தெரியும். அந்த நம்பிக்கைதான் எனக்கு உந்துசக்தியாக இருக்கு. லவ் யூ” என்று நெகிழ்கிறார் யோகி.

என்ன கஷ்டப்பட்டாலும், எந்த சூழ்நிலை வந்தாலும்... மக்களோட மக்களா இருக்கிற இசைக் கலைஞனாக ஆக வேண்டும் என்பதுதான் யோகியின் ஆசை. அந்த ஆசை நிறைவேற ‘இந்து தமிழ் திசை’யின் வாழ்த்துகள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x