Last Updated : 19 May, 2019 11:19 AM

 

Published : 19 May 2019 11:19 AM
Last Updated : 19 May 2019 11:19 AM

காஞ்சனா இந்தி ரீமேக்; விலகியது ஏன்? - ராகவா லாரன்ஸ் விளக்கம்

'காஞ்சனா' இந்தி ரீமேக்கான 'லட்சுமி பாம்' இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகியது ஏன் என்று இயக்குநர் லாரன்ஸ் விளக்கமளித்துள்ளார்.

ராகவா லாரன்ஸ் இயக்கி, நடித்த படம் ‘காஞ்சனா’. ‘முனி’ படத்தின் இரண்டாம் பாகமாக உருவான இந்தப் படம்,  2011-ம் ஆண்டு வெளியானது. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் கன்னடம், சிங்களம் மற்றும் வங்காள மொழியிலும் இந்தப்படம் ரீமேக் செய்யப்பட்டது.

தற்போது 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது 'காஞ்சனா'. 'லட்சுமி பாம்' என்று பெயரிடப்பட்ட இப்படத்தில் அக்‌ஷய் குமார், கைரா அத்வானி ஆகியோர் நடிக்க படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இப்படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி வந்தார்.

இந்நிலையில், நேற்று (மே 18) 'லட்சுமி பாம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக,் இணையத்தில் வெளியிடப்பட்டது. 2020-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி வெளியாகும் என்றும் அறிவித்தார்கள். படக்குழுவினருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில், நேற்றிரவு (மே 18) ராகவா லாரன்ஸ் அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அதில் தான் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.

இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகியதற்கான காரணம் குறித்து லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும்,

’மதியாதார் தலைவாசல் மிதியாதே’என்று தமிழில் பழமையான சொற்றொடர் ஒன்று உண்டு. இந்த உலகத்தில் பணத்தையும் புகழையும் விட சுயமரியாதையே ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமானது. எனவே காஞ்சனா இந்தி ரீமேக்கான ’லட்சுமி பாம் ‘லிருந்து வெளியேற முடிவு செய்துள்ளேன். என்ன காரணம் என்பதை குறிப்பிட விரும்பவில்லை. ஏனெனில் நிறைய காரணம் இருக்கிறது. அதில் ஒன்று, என்னிடம் தெரிவிக்காமல் எனக்கு தெரியாமல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது. ஒரு மூன்றாவது நபர் மூலம்தான் இதை நான் தெரிந்து கொண்டேன். ஒரு இயக்குனராக என் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டை அடுத்தவர் மூலம் தெரிந்து கொள்வது மிகவும் வலி மிகுந்ததாக இருந்தது.  மிகவும் அவமானகரமாகவும், ஏமாற்றமாகவும் உணர்கிறேன். ஒரு படைப்பாளியாக போஸ்டர் டிசைனும் எனக்கு பிடிக்கவில்லை. இந்த நிலைமை எந்த இயக்குநருக்கும் ஏற்படக்கூடாது.

என்னுடைய ஸ்கிரிப்டை திரும்பப் பெற இயலும். ஏனெனில் நான் இந்தப் படம் சம்பந்தப்பட்ட எந்தவொரு ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை. ஆனால் நான் அவ்வாறு செய்யமாட்டேன். அது தொழில்முறையாக இருக்காது. நான் என்னுடைய ஸ்கிரிப்டை கொடுக்க தயாராக இருக்கிறேன். ஏனெனில் நான் தனிப்பட்ட முறையில் அக்‌ஷய் குமார் சாரை மிகவும் மதிக்கிறேன். அவர்களின் விருப்பப்படி எனக்கு பதில் வேறொரு இயக்குனரை நியமிக்கலாம். ஸ்கிரிப்டை ஒப்படைப்பதற்காக விரைவில்  அக்‌ஷய் குமார் சாரை சந்திப்பேன். நல்ல முறையில் இந்த ப்ராஜெக்டிலிருந்து வெளியேறி விடுவேன். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படம் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x