Published : 15 May 2019 06:22 PM
Last Updated : 15 May 2019 06:22 PM

எதிர்மறையான செய்திகளைத் தவிர்த்து விடுங்கள்: அமிதாப் குறித்து எஸ்.ஜே.சூர்யா விளக்கம்

தமிழ்வாணன் இயக்கத்தில் அமிதாப் பச்சன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் படம் 'உயர்ந்த மனிதன்'. தமிழ் மற்றும் இந்தி என இருமொழிகளிலும் இப்படம் உருவாகி வருகிறது. அமிதாப் பச்சன் நடிப்பில் உருவாகும் முதல் நேரடி தமிழ்ப்படம் இதுவாகும்.

கடந்த மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்கியது. இதில், அமிதாப் பச்சன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா சம்பந்தப்பட்டக் காட்சிகளைப் படமாக்கினார் தமிழ்வாணன்.  இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்ட அன்று, அமிதாப் பச்சனுடன் எடுத்த புகைப்படங்களை, தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் எஸ்.ஜே.சூர்யா.

மேலும், இதன் படப்பிடிப்புத் தளத்தில் ஒரு வீட்டினுள் மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் புகைப்படம் மாட்டியிருப்பது போலவும், அதற்கு கீழே அமிதாப் பச்சன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பது போலவும் சில காட்சிகளைப் படமாக்கினர். அப்போது, “சிவாஜி கணேசன் எனும் தலைவனின் நிழலில் இரு சீடர்கள், எஸ்.ஜே. சூர்யாவும் நானும்” என நெகிழ்ந்தார் அமிதாப்.

ஆனால், அமிதாப்புக்கும் படக்குழுவுக்கும் இடையில் ஏதோ மனக்கசப்பு உண்டாக, படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வெளியேறினார் அமிதாப். அத்துடன், ‘உயர்ந்த மனிதன்’ படத்துக்காகக் கொடுத்த தேதிகளில், வேறு படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார்.

எனவே, இனிமேல் ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் நடிக்க மாட்டார் அமிதாப் பச்சன் என செய்திகள் வெளியாகின. ஆனால், இதை மறுத்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

“அமிதாப் சாருக்கும், தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையே சிறிய பிரச்சினை. அந்தப் பிரச்சினையைச் சரிசெய்து விடுவோம். ‘மான்ஸ்டர்’ படம் ரிலீஸானதும், நானே நேரடியாக மும்பை சென்று இந்தப் பிரச்சினையைச் சரிசெய்வேன். நானும், இயக்குநர் தமிழ்வாணனும் ஏற்கெனவே பல பிரச்சினைகளைச் சரிசெய்து தான் படத்தை இந்தக் கட்டத்துக்குக் கொண்டு வந்துள்ளோம்.

எங்களின் உழைப்பைப் பார்த்து, படப்பிடிப்பு தொடங்கிய மூன்றாவது நாளிலேயே தன்னுடைய அன்பையும் மரியாதையையும் ட்விட்டரில் வெளிப்படுத்தினார் அமிதாப் சார். எதிர்மறையான செய்திகளைத் தவிர்த்து விடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார் எஸ்.ஜே.சூர்யா.

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் நாளை மறுநாள் (மே 17) ‘மான்ஸ்டர்’ படம் ரிலீஸாக இருக்கிறது. இதில், பிரியா பவானிசங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x