Last Updated : 20 Apr, 2019 06:06 PM

 

Published : 20 Apr 2019 06:06 PM
Last Updated : 20 Apr 2019 06:06 PM

படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதியின் அணுகுமுறை: தயாரிப்பாளரின் நெகிழ்ச்சிப் பகிர்வு

படப்பிடிப்பில் விஜய் சேதுபதி நடந்து கொண்ட விதம் தொடர்பாக, நெகிழ்ச்சியுடன் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தயாரிப்பாளர் ஜோசப்

பல தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வரும் விஜய் சேதுபதி, 'சைரா' படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார். மேலும், 'மார்க்கோனி மித்தாய்' படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமாகவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது. விஜய் சேதுபதியின் எளிமை அப்படத்தின் இயக்குநர் சனில் மற்றும் நாயகன் ஜெயராம் ஆகியோரை ஆச்சர்யப்படுத்தியது மட்டுமன்றி தயாரிப்பாளர் ஜோசப்பையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தயாரிப்பாளர் ஜோசப் தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:

முன்னணி கதாசிரியர் ஜான் பால் அவர்களை நான் சந்திக்கச் சென்றிருந்தபோது படங்கள் பற்றி நிறைய உரையாடினோம். விஜய் சேதுபதியின் சமீபத்திய தயாரிப்பு 'மேற்கு தொடர்ச்சி மலை' பற்றியும் பேசினோம். எனது நண்பரும், புரொடக்‌ஷன் கண்ட்ரோலர் பாதுச்ஹாவும், எடப்பள்ளியில் படப்பிடிப்பு நடக்கிறது என சொன்னவுடன் அங்கு செல்வது என்று முடிவு செய்தோம்.

அங்கு சென்றவுடன், படக்குழுவைச் சேர்ந்த பலரும் ஜான் பாலிடம் சென்று பேசினார்கள். ட்ரைவர் சீட்டில் இருந்த நான், என்னை யாரும் கண்டுகொள்ளவில்லை என்ற கடுப்பில் இருக்கும்போது விஜய் சேதுபதி என்னிடம் வந்தார். நான் உடனே காரிலிருந்து இறங்கினேன். அவர் என்னை கட்டிப்பிடித்து வரவேற்றார். பிறகு பக்கத்தில் சென்று அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த ஜான் அவர்களிடம் பேச ஆரம்பித்தார்.

அவர் பேசிய விதத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். ஒரு சிஷ்யன் தன் குருவுக்கு முன் பேசுவதைப் போல இருந்தது. தமிழ்நாட்டு மக்கள் உங்களை மக்கள் செல்வன் என்று அழைப்பது முற்றிலும் சரி. விஜய் சேதுபதி  மனித வடிவில் ஒரு தேவதை என லெனின் பாரதி சொன்னபோது நான் நம்பவில்லை. ஆனால், இன்று, குருத்து ஞாயிறன்று நான் ஒரு தேவதையைப் பார்த்தேன்.

இவ்வாறு ஜோசப் கூறியுள்ளார்.

தற்போது விஜய் சந்தர் இயக்கத்தில் உருவாகி வரும் 'சங்கத்தலைவன்' படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இதன் படப்பிடிப்பு சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x