Last Updated : 26 Mar, 2019 07:08 PM

 

Published : 26 Mar 2019 07:08 PM
Last Updated : 26 Mar 2019 07:08 PM

ராதாரவி தொடர்ந்து இப்படித்தான் அவதூறாகப் பேசி வருகிறார்: விஷால் கண்டனம்

நயன்தாரா குறித்து அவதூறாகப் பேசிய ராதாரவிக்கு நடிகரும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராதாரவி தொடர்ந்து இப்படிப்பட்ட அவதூறான, இழிவான கருத்துகளை பெண்களுக்கு எதிராகப் பேசுவது வழக்கமாகி வருகிறது.  இந்த விவகாரத்தைக் கருத்தாகக் கவனத்தில் கொண்ட திமுக ராதாரவியை கட்சியிலிருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. திரைப்படத் துறையினரும் ராதாரவிக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் விஷால் கூறும்போது, ''மூத்த நடிகர் (ராதாரவி) இதுபோன்ற அவதூறு கருத்துகளைப் பெண்களுக்கு எதிராக அடிக்கடி கூறி வருபவர்தான். இப்படி அவர் பேசுவது முதல் முறையல்ல. அவர் மீது நாம் கடும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அவர் தொடர்ந்து இப்படித்தான் பேசுவார். அவர் இதனை திரும்பத் திரும்ப செய்து கொண்டுதான் இருக்கிறார்.

அங்கு அவர் பேசும்போது கூட்டத்தில் கை தட்டியவர்களும் ராதாரவிக்குச் சளைத்தவர்களல்லர்.  பெண்கள் பற்றி குப்பைக் கருத்துகளை ஒருவர் கூறுவதை பலரும் கைதட்டி வரவேற்றால் அவர்களும் பெண் விரோதிகளே''என்று விஷால் கடுமையாகச் சாடியுள்ளார்.

முன்னதாக, 'கொலையுதிர் காலம்' பட விழாவில் ராதாரவி பேசும்போது, ''எம்.ஜி.ஆர், சிவாஜி போன்றவர்கள் எல்லாம் ஒரு லெஜண்ட். அவர்கள் சாகா வரம் பெற்றவர்கள். நயன்தாரா நல்ல நடிகை, இவ்வளவு நாள் திரையுலகில் நிலைப்பதே பெரிய விஷயம். அவரைப் பற்றி வராத செய்தியே கிடையாது. அதெல்லாம் தாண்டி நிற்கிறார்கள். தமிழ்நாட்டு மக்கள் எப்போதுமே ஒரு விஷயத்தை 4 நாட்கள் மட்டுமே ஞாபகம் வைத்திருப்பார்கள். பிறகு விட்டுவிடுவார்கள்.

நயன்தாரா ஒரு படத்தில் பேயாகவும் நடிக்கிறார். இன்னொரு புறம் சீதாவாகவும் நடிக்கிறார். இப்போது சீதாவாக யார் வேண்டுமானாலும் நடிக்கலாம். முன்பெல்லாம் சீதாவாக நடிக்கவேண்டும் என்றால் கே.ஆர்.விஜயாவைத் தான் தேடுவார்கள். இப்போது பார்த்தவுடன் கும்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம், பார்த்தவுடன் கூப்பிடத் தோன்றுபவர்களும் நடிக்கலாம்'' என்றார். இது கடும் சர்ச்சைகளைக் கிளப்பியது.

இந்நிலையில் சமீபத்தில் ஷகீலா சுயவரலாறு படத்தில் பணியாற்றிய ரிச்சா சதா, ராதாரவியை திமுக நீக்கியதைப் பாராட்டினார். ''பெண்கள் குறித்து மரியாதைக் குறைவான கருத்துகளைக் கூறுபவர்களை மன்னிக்கக் கூடாது. பெண் பாலின வசையும் , பெண் விரோதமும் நவீன சமூகத்தில் இருக்கக் கூடாது'' என்றார்.

நடிகை குஷ்பு, சமந்தா, டாப்ஸி ஆகியோரும் தங்கள் கண்டனங்களைப் பதிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x