Published : 25 Mar 2019 03:39 PM
Last Updated : 25 Mar 2019 03:39 PM

ராதாரவியின் மலிவான உத்தி; நடிகர் சங்கத்துக்கு கேள்வி: நயன்தாரா காட்டம்

ராதாரவியின் கருத்துக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்தது மட்டுமன்றி, நடிகர் சங்கத்துக்கும் கேள்வி எழுப்பி நயன்தாரா காட்டமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

'கொலையுதிர் காலம்' பத்திரிகையாளர் சந்திப்பில், நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய பேச்சு மிகவும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இது தொடர்பாக தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.

ராதாரவியின் பேச்சு பெரும் சர்ச்சையானதைத் தொடர்ந்து, திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். மேலும், திமுக தலைவர் ஸ்டாலினும் ராதாரவியின் பேச்சுக்கு தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ராதாரவியின் பேச்சு குறித்து நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

''நான் அறிக்கை கொடுப்பது அரிது. ஏனென்றால் எப்போதும் நான் பேசுவதை விட என் பணி பேசட்டும் என்றே இருக்கிறேன். ஆனால் சில நேரங்கள் சில நடவடிக்கைகள் தேவைப்படுகிறது. இன்று நான் என் நிலையை தெளிவுபடுத்தவும், ஆண்களின் பாலின வேறுபாடு மற்றும் உணர்ச்சியற்ற செயல்களால் பாதிக்கப்பட்டும் பெண்களுக்காகப் பேசவும் ஒரு விரிவான அறிக்கையை தரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

முதலில், ராதராவியின் பெண் வெறுப்புப் பேச்சைக் கண்டித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் கூறுவது எனது கடமை. உங்களுக்கு என் உளமார்ந்த நன்றிகள் சார்.

ராதாரவி உள்ளிட்ட பெண்களை வெறுக்கும் ஆண்களுக்கு ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். அவர்களுக்கு உயிர் கொடுத்ததும் ஒரு பெண் தான். பாலின ரீதியான கருத்துகளைச் சொல்லி பெண்களின் நிலையைத் தரம் தாழ்த்துவதன் மூலம், இத்தகைய பாதிக்கப்பட்ட ஆண்கள், ஆண்மையை உணர்கிறார்கள். இப்படியான முன் தீர்மானத்தோடு ஒரு பெண்ணை இவர்கள் நடத்துவது குறித்து நான் வருத்தப்படுகிறேன். மேலும், இப்படியான 'ஆண்மை' மிகுந்தவர்களின் வீட்டில் இருக்கும் பெண்களுக்காகவும் நான் பச்சாதாபப்படுகிறேன்.

மூத்த நடிகராகவும், இவ்வளவு வேலை அனுபவமும் கொண்ட நடிகர் ராதாரவி இளம் தலைமுறைக்கு ஒரு முன் மாதிரியாக திகழ்ந்திருக்க வேண்டும். அதற்கு மாறாக, பெண் வெறுப்பில் ஒரு முன் மாதிரியாக இருப்பதையே அவர் விரும்பியிருக்கிறார். பெண்களுக்கு இது கடினமான காலம். தகுதி அடிப்படையில் இயங்கி வரும் இந்தக் காலகட்டத்தில், பொதுவாழ்வில் ஒவ்வொரு துறையிலும் பெண்கள் தங்களுக்கென ஒரு இடத்தைப் பிடித்து பெயர்பெற்று வருகின்றனர். ராதாரவி போன்ற நடிகர்கள் வாய்ப்புகளின்றி, துறைக்குப் பொருத்தமின்றி போகும்போது, புகழ் வெளிச்சத்துக்காக சில மலிவான உத்திகளை களமிறக்குகிறார்கள்.

இதில் பெரும் அதிர்ச்சி என்னவென்றால், அவரது ஆணாதிக்கப் பேச்சுகளுக்கு எப்போதும் கைதட்டுகளும், சிரிப்பு சத்தமும் ரசிகர்கள் பக்கத்திலிருந்து தவறாமல் வரும். இதுபோன்ற பாலியல் வேறுபாட்டுக் கருத்துகளை ரசிகர்கள் ஆதரிக்கும் வரை, பெண் வெறுப்பு, பெண்களை இழிவுபடுத்தும் நகைச்சுவை ஆகியவற்றையே ராதாரவி போனறவர்கள் தொடர்ந்து பேசுவார்கள்.

நல்ல எண்ணம் கொண்ட மக்களும், எனது அன்பார்ந்த ரசிகர்களும் ராதாரவி போன்றவர்களின் நடத்தையைக் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். நான் மேற்சொன்னவைகளையும் தாண்டி இந்த அறிக்கையின் மூலம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராகவும், குறிப்பாக எனக்கு எதிராகவும் ராதாரவி தெரிவித்த தரக்குறைவான கருத்துகளை வன்மையாகக் கண்டிக்கிறேன், எதிர்க்கிறேன்.

எனக்கு அற்புதமான வாய்ப்புகள் வருமளவும் கடவுள் என்னிடம் கருணை காட்டியுள்ளார். தமிழகத்தின் அன்பார்ந்த சினிமா ரசிகர்கள் எனது நல்ல நடிப்புக்காக வெகுமதி அளித்துள்ளார்கள். எனக்கெதிரான எதிர்மறையான கருத்துகளையும், அவமதிப்புகளையும் தாண்டி, என் ரசிகர்களுக்கு அதிகபட்ச பொழுதுபோக்கு தர வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், சீதா, பேய், பெண் தெய்வம், தோழி, மனைவி, காதலி என பன்முகத்தன்மை கொண்ட கதாபாத்திரங்களை நான் தொடர்ந்து ஏற்று நடிப்பேன்.

கடைசியாக, நடிகர் சங்கத்துக்கு எனது பணிவான கேள்வி - உச்ச நீதிமன்றம் சொன்னதைப் போல ஒரு புகார் குழுவை அமைப்பீர்களா? விசாகா குழு வழிகாட்டுதல்களின் படி துறைக்குள் விசாரணையைத் தொடங்குவீர்களா?

இந்த சிறிய எதிர்மறையான காலகட்டத்தில் என்னுடன் மீண்டும் துணை நின்ற, ஆதரவு தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மீண்டும் நன்றி கூறிக்கொள்கிறேன். இப்போதும், எப்போதும் போல கடவுளின் ஆசியுடனும், உங்கள் நிபந்தனையற்ற அன்புடனும் பணிக்குத் திரும்புகிறேன்''.

இவ்வாறு நயன்தாரா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x