Published : 24 Mar 2019 08:17 PM
Last Updated : 24 Mar 2019 08:17 PM

பெண்களை கீழ்த்தரமாக நினைப்பவரைத் துரத்தி அடிக்க விரும்புகிறோம்: ராதாரவி பேச்சு குறித்து கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம்

பெண்களை கீழ்த்தரமாக நினைப்பவரைத் துரத்தி அடிக்க விரும்புகிறோம் என்று ராதாரவி பேச்சு குறித்து கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா, பிரதாப் போத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'கொலையுதிர் காலம்'. இப்படத்தை மதியழகன் தயாரித்துள்ளார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று (மார்ச் 23) நடைபெற்றது.

இவ்விழாவில் பேசும் போது நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்தார் ராதாரவி. இந்த வீடியோ பதிவு ட்விட்டரில் பகிரப்பட்டது. அதனைப் பார்த்து பலரும் ராதாரவியை கடுமையாக சாடி வருகிறார்கள்.

ராதாரவியின் பேச்சு குறித்து கே,ஜே.ஆர்  ஸ்டூடியோஸ் நிறுவனம் தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''ஒரு ட்ரெய்லர் அறிமுக விழாவில் பங்கேற்ற மதிப்புக்குரிய நடிகர் ஒருவர், சக பெண் நடிகரை புண்படுத்தும் வகையில் வெறுப்பை உமிழும், அருவருப்பான வார்த்தைகளைப் பேசியுள்ளார். அந்த நிகழ்ச்சி, அவமதிப்புக்கு உள்ளான அந்த நடிகை ஹீரோயினாக நடித்த திரைப்படத்துக்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சி. ஆனால், அந்த நடிகர் பேசும்போது நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் கைதட்டி, சிரித்தார்கள்.  மூத்த நடிகர் என்ற மரியாதை எனும் போர்வையில் மரியாதையை குறைத்துக்கொண்டது பார்ப்பதற்கு வேதனையாக இருந்தது.

ராதாரவி மிகுந்த பாரம்பரியம், மதிப்பு மிக்க குடும்பத்தில் இருந்து வந்தவர். அன்புள்ள ராதாரவி சார், மரியாதை என்பது பெயரால் வருவது அல்ல, நாம் பேசும் வார்த்தைகள், செயல்களால் வருவது. கைதட்டலுக்காக ஏதாவது பேச வேண்டும், செய்ய வேண்டும் என நினைத்தால், அதற்கு ஏராளமான இடங்கள் இருக்கின்றன. உங்களுக்கு பழக்கப்பட்ட இடங்கள் இருக்கின்றன. அங்கு பேசலாம், விருப்பப்பட்டதை செய்யலாம்.

தமிழ் சினிமாவில் இருந்து பெண்களுக்கு எதிராகப் பேசுபவரையும், கீழ்த்தரமாக நினைப்பவரையும் துரத்தி அடிக்க விரும்புகிறோம். இந்த நேரம்தான் அதைப் பேசுவதற்கும், நடவடிக்கையில் இறங்கவும் உகந்தது.

நடிகை நயன்தாரா குறித்தும், பொள்ளாச்சி பாலியல் வழக்கு குறித்தும் நடிகர் ராதாரவி பேசியது சரியானது அல்ல. ஒருபோதும் சரியானது அல்ல. அவருக்கு எதிராக நாம் குரல் கொடுப்பதற்கு இது சரியான நேரம். இது எதாவது மாற்றத்தை ஏற்படுத்துமா, அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். குரல் கொடுப்போம். சரியான மக்களுக்கு கேட்கும் வரை குரல் கொடுப்போம். அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு கேட்கட்டும். சரியான நடவடிக்கை மற்றும் நிலைப்பாடு எடுக்க நமது குரல் அழுத்தம் கொடுக்கட்டும்.

இந்த விஷயத்தை நடிகர் சங்கம் அறிந்திருப்பார்கள் என நம்புகிறோம். நாங்கள் நடிகர் ராதாரவியின் பேச்சை உண்மையாகவே வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்கள் திரைப்படங்களில் அவர் நடிக்க அனுமதிக்கமாட்டோம். நம்முடைய துறையில் இருக்கும் நண்பர்கள், சக தரப்பினருக்கும் அறிவுறுத்துவது என்னவென்றால், ராதாரவியை எந்த திரைப்படத்திலும் நடிக்க வைக்காதீர்கள். ராதாரவிக்கு எதிராக நீங்கள்  நடவடிக்கை எடுப்பீர்கள் என நம்புகிறோம். நம்முடைய பெண்களுக்கு ஆதரவாக நாம் குரல் கொடுக்காவிட்டால், வேறு யார் கொடுப்பது?''

இவ்வாறு கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x