Published : 18 Mar 2019 07:08 PM
Last Updated : 18 Mar 2019 07:08 PM

பொள்ளாச்சி சம்பவம்; ஆண் வலியை உணர்ந்து மாறினால் மட்டுமே இங்கு மாற்றம் சாத்தியம்: யூடியூப் பிரபலம் ஹரிஜா

பெண்ணின் வலியை ஆண் உணர்ந்து அதில் எந்த சுகமும் இல்லையென்று மாறினால் மட்டும் தான் மாறுதல் மாறுதலாக இருக்கும் என்று யூடியூப் பிரபலம் ஹரிஜா கூறியுள்ளார்.

எரும சாணி யூடியூப் சேனல் மூலம் பரவலான கவன ஈர்ப்பைப் பெற்றவர் ஹரிஹா. இவர் பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக தன் கருத்தை முகநூல் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

''பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். நானே தாமதமாக பேசுவது எனக்கே வருத்தமாக உள்ளது. பெண்களிடம் வெளியே செல்லாதீர்கள் என்று சொல்வதெல்லாம் தேவையில்லாதது. எவ்வளவு நாள் தான் உட்கார்ந்து பேசிக் கொண்டும், போராடிக் கொண்டும் இருப்போம். இதெல்லாம் சொல்லி சொல்லி வாய் தான் வலிக்கிறது. இந்தச் சம்பவம் இன்னொரு 10 நாட்கள் கழித்து மறுபடியும் பழைய நிலைக்கே வந்துவிடும் என்பது அனைவருக்குமே தெரியும். 

கண்டிப்பாக சட்டங்கள் மாற வேண்டும், பயமுறுத்த வேண்டும். இந்தத்  தப்பு பண்ணினால், இந்த மாதிரி தண்டனை கிடைக்கும் என்ற பயத்தைக் கொண்டுவர வேண்டும். 

அனைத்து பெற்றோர்களுக்கும் ஒரு வேண்டுகோள். உங்களுடைய பையனிடமோ, பெண்ணிடமோ உங்களுக்கு என்ன பிரச்சினை இருந்தாலும், எங்களிடம் சொல்லுங்கள் நாங்கள் புரிந்து கொள்வோம் என்ற உத்வேகத்தை அளிக்க வேண்டும். இதன் மூலமாக தான் எல்லாமே மாறும். ஃபேஸ்புக்கில் பார்த்தவுடன் எப்படி ஒருவரை நம்புகிறீர்கள் என்ற கேள்வியே மிகவும் முட்டாள்தனமானது.

காதல் என்பது ஓர் இயல்பு, ஓர் உணர்ச்சி. பெண்கள் மாற வேண்டும் என்று சொல்வதெல்லாம் வேஸ்ட். கண்டிப்பாக இந்த விஷயமெல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கும். ஒரு பெண்ணை, ஒரு பையன் பார்த்தால் பிடிக்கத்தான் செய்யும். திடீரென்று அன்பான வார்த்தைகள் கேட்டால் பிடிப்பது இயல்பு தான். அனைவரையும் உட்கார்ந்து இவர் இப்படித்தான் என்ற முன்முடிவுக்கு வரமுடியாது.

ஆண்கள் நல்லவங்களா இல்லையா என்று யூகிச்சிட்டு இருந்தால் ஒரு பொண்ணு யாரையும் கல்யாணம் செய்துகொள்ள முடியாது. பெற்றோர்கள் பேசுவதில் தான் எல்லாக் குழந்தைகளின் வாழ்க்கையும் அடங்கியுள்ளது.  தேர்வில் வெற்றி பெறவில்லை என்றால் வீட்டுக்கு வரவேண்டாம் என்று சொல்லாதீர்கள். தேர்ச்சி ஆகவில்லை என்றாலும் பரவாயில்லை. அடுத்த தேர்வில் பார்த்துக் கொள்ளலாம் என்று நீங்கள் நம்பிக்கை கொடுத்தால் தான் அவர்களுக்கு தன்னம்பிக்கை வரும். 

பெற்றோர்களைப் பார்த்து பிள்ளைகள் ஏன் பயப்பட வேண்டும்?  எக்காரணத்தைக் கொண்டும் பெற்றோர்கள் பயத்தைக் கொண்டு வர வேண்டாம். தயவு செய்து உங்கள் பையனிடமும் பெண்ணிடமும் உட்கார வைத்துப் பேசுங்கள.  உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்று உறுதி அளியுங்கள் அப்பொழுது தான் எல்லாம் மாறும்.

நாமும் மாற வேண்டும். நம் எண்ணங்களும் மாற வேண்டும். அதற்கு நாம் தான் முதலில் ஒரு அடி எடுத்து வைக்க வேண்டும். அதற்குப் பிறகு அரசைக் குற்றம் சொல்லலாம். ஒரு பெண்ணை இவ்வாறு செய்துவிட்டால் சட்டப்படி இந்தத் தண்டனை கிடைத்து விடும் என்று ஓர் ஆண் இருக்கக்கூடாது. ஆண் அந்த வலியை உணர்ந்து அதில் எந்த சுகமும் இல்லையென்று மாறினால் மட்டும் தான் மாறுதல் மாறுதலாக இருக்கும்''.

இவ்வாறு ஹரிஜா தெரிவித்தார்.

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x