Published : 17 Mar 2019 10:35 AM
Last Updated : 17 Mar 2019 10:35 AM

வா தலைவா: அஜித்தை அரசியலுக்கு அழைக்கும் சுசீந்திரன் - ட்விட்டரில் பரபரப்பு

அஜித்தை மக்கள் பணிக்கு வருமாறு இயக்குநர் சுசீந்திரன் வெளியிட்ட பதிவால், ட்விட்டர் பக்கத்தில் சிறிய பரபரப்பு நிலவியது.

இந்தியா முழுக்க மக்களவைத் தேர்தல் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கூட்டணியை முடிவு செய்து, வேட்பாளர்கள் தேர்வில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதனால், சமூகவலைத்தளத்தில் அரசியல் தொடர்பான கருத்துகள், செய்திகள் என முழுக்க வட்டமிட்டு வருகின்றன.

இதில் தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான சுசீந்திரன், “வறுமையை உணர்ந்தவனால் மட்டுமே மக்களின் தலைவனாக முடியும்..” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். அவர் யாரைச் சொல்கிறார் என்பதை குறிப்பிடாததால் குழப்பம் உண்டானது.

இதைத் தொடர்ந்து நேற்றிரவு (மார்ச் 16) ”அஜித்குமார் அண்ணனின் ரசிகர்களுக்கு 10:30 மணிக்கு -இன்று” என ட்வீட் செய்தார். இதனால் அஜித் ரசிகர்கள் பலரும் என்ன சொல்லப் போகிறார் என்று ஆர்வமுடன் எதிர்பார்த்தனர்.

"40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன்கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன். இது தான் 100% சரியான தருணம். வா தலைவா, மாற்றத்தை உருவாக்கு.... உங்களுக்காக காத்திருக்கும், பலகோடி மக்களில் நானும் ஒருவன்" என்று இயக்குநர் சுசீந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டார். இது பல அஜித் ரசிகர்களாலும் பகிரப்பட்டு வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர் ஒருவர் அஜித்தை நேரடியாக அரசியல் அழைத்திருப்பதால், ட்விட்டரில் இது தொடர்பாக பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். முன்னதாக, 2017-ம் ஆண்டு  "சினிமா துறையில் இருந்து அடுத்து யார் முதல்வராக வர தகுதியானவர்கள் என்ற கேள்விக்கு, நான் அளித்த பதில் கமல் சார், அஜித் சார் வந்தா நல்லா இருக்கும்" என்று சுசீந்திரன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x