Published : 12 Mar 2019 05:26 PM
Last Updated : 12 Mar 2019 05:26 PM

பொள்ளாச்சி பாலியல் பயங்கரம்: திரையுலக பிரபலங்கள் 22 பேரின் கொந்தளிப்பு

பொள்ளாச்சி பாலியல் கொடுமை தொடர்பாக, ட்விட்டர் பக்கத்தில் தமிழ் திரையுலகினர் தங்களுடைய கொந்தளிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

பொள்ளாச்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளை, ஒரு கும்பல் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியிருக்கும் செய்தி, தமிழகத்தையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. அந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் பலமாக ஒலித்து வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் இந்தச் சம்பவம் குறித்து தங்களுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் திரையுலக பிரபலங்களும் தங்களுடைய ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளனர்.

அவற்றின் தொகுப்பு:

கார்த்திக் சுப்பராஜ்: கொடூரம், வேதனை, அச்சப்பட வைக்கிறது. இதில் மோசமான விஷயம் என்னவென்றால் இந்த சைக்கோக்கள் இதனை பல வருடங்களாக நிறைய பெண்களுக்கு செய்து கொண்டிருக்கின்றனர். நாம் வாழும் இந்த உலகம் நாம் நினைப்பதைவிட மிகவும் கெட்டுப்போய் இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் துணிச்சல் பெற்று மீண்டு வரட்டும். பலாத்காரகர்கள் தண்டனை பெறட்டும். அதுவும் மிகக் கொடூரமான தண்டனை வழங்கப்படட்டும். அதுதான் சரியான வழி.

ரமேஷ் திலக்: உன்ன நம்பிதானடா வந்தேன்... சொல்றத கேட்கும்போது ரொம்ப வலிக்குது. அனைத்து நட்சத்திரங்களின் அன்பான ரசிகர்களே இந்த விஷயத்தில் ஒன்றிணைந்து போராடுங்கள்.#PollachiGangRape #PunishTheRapists

சிபி சத்யராஜ்: இதுபோன்ற செயல்கள் தண்டிக்கப்படாமல் போனால் இந்தியா நிச்சயமாக பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நாடுகள் பட்டியலில் முதலிடத்துக்கு வந்துவிடும். #PunishTheRapists #PollachiSexualAbuse

வரலட்சுமி சரத்குமார்: என்னை வைத்து விளையாடுகிறீர்களா? மீண்டும் மீண்டும் அதே கொடூர குற்றம். அப்புறம் ஒருபக்கம் மகளிர் தினம் வேறு. இந்தச் சமூகத்திற்கு பெண் என்றால் இதுதான் அர்த்தமா? பொள்ளாச்சி பலாத்காரர்களை தோலுரித்துக் கொல்ல வேண்டும். இந்த மாதிரியான உலகத்தில்தான் நாம் வாழ்கிறோமா?! பலாத்காரத்துக்கு மரண தண்டனை. இது மட்டும்தான் ஒரே வழி. வெறுப்பாக இருக்கிறது.

ஜெயம் ரவி: எனது நிலைப்பாடு எப்போதுமே ஒன்றுதான். எனது படங்களோ அல்லது தனிப்பட்ட கருத்தோ உச்சபட்ச தண்டனையை ஆதரிக்கிறது. ஒரு பெண்ணின் உரிமை, பெண் பிள்ளையின் அறியாமையை சீண்டும் விலங்குகளுக்கு இதுதான் தண்டனையாக இருக்க வேண்டும். #PollachiSexualAbuse #PunishTheRapists

ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர்: நட்பின் எல்லை எது. நம்பிக்கையின் எல்லை எது, சமூக வலைதளத்தினை பதின் பருவத்தினர் எப்படி பயன்படுத்த வேண்டும் என பாடம் புகட்ட வேண்டும். சமூக வலைதளத்தின் வீச்சு மிகக் கொடூரமான எல்லையை எட்டியிருக்கிறது.#PollachiSexualAbuse #heartbroken

கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ்: குடல் நடுங்கச் செய்கிறது. இதுபோன்ற அரக்கர்கள் சுதந்திரமாக சுற்றிவர நம்மைப் போன்றோர் கூட்டாக அனுமதியளித்து சமூகப் பொறுப்பிலிருந்து தவறிவிட்டோம். பாதிக்கப்பட்ட பெண்களுக்காக வருந்துகிறேன். உங்களுக்கு நேர்ந்த கொடூரத்துக்காக வருந்துகிறேன். இப்போதைய தேவை துரிதமான இரக்கமற்ற நீதி.#PunishTheRapists

நடிகர் டேனியல்: மனித வடிவில் திரியும் இந்த மிருகங்களுக்கு இரக்கமும் இல்லை, ஆதரவும் இல்லை. அந்தப் பெண்ணின் குரல் இதயத்தைத் துளைக்கிறது. இந்த இரக்கமற்ற மனிதர்களுக்கு வழங்கப்படும் தண்டனை சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். #PollachiSexualAbuse #ArrestpollachiRapists

இயக்குநர் திரு: இந்த அரக்கர்களைத் தண்டியுங்கள். #PollachiSexualAbuse

இயக்குநர் கார்த்திக் தங்கவேல்: எனக்கு மட்டும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் அந்த நபர்களை அவரவர் வீட்டின் முன்னே உயிருடன் எரித்துக் கொல்வேன். அந்தப் பெண்ணின் குரல் என்னை நோகடிக்கச் செய்கிறது. என்னை மீண்டும் மீண்டும் அச்சுறுத்துகிறது. அவர்களை உடனே தூக்கிலிடுங்கள்... #PollachiSexualAbuse #PunishTheRapists

ஹரிஷ் கல்யாண்: இது மீண்டும் நட்ந்து கொண்டே இருக்கக்கூடாது. #PunishTheRapists #PollachiSexualAbuse #brutalpunishment

ராஷி கண்ணா: பொள்ளாச்சி பாலியல் வழக்கு என்னை மிகவும் பாதிக்கிறது. நடந்தது எல்லாம் மிகவும் கொடூரமாக இருக்கிறது. அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை அவர்கள் முதுகெலும்பை நொறுக்குவதாக இருக்க வேண்டும். இந்த அரசாங்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு ஆதரவு கொடுக்க வேண்டும்.

சாந்தனு: இந்தியாவில் மகளிர் தினம் கொண்டாடுவதுகூட இழுக்கு. ஒவ்வொரு முறையும் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை நாம் உருவாக்கும்போதும் இப்படியான சம்பவங்கள் எல்லாவற்றையும் நொறுக்கிவிடுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்காததற்கு நம் மீது நாமே வெட்கப்பட வேண்டும். #PunishPollachiRapists #PunishTheRapists #PollachiSexualAbuse

ஆரவ்: இது பார்ப்பதற்கு மிகவும் கொடூரமாக இருக்கிறது. இதைப் போன்றதொரு சம்பவத்தை இதற்குமுன் பார்த்திருக்கவில்லை. இவர்களை விலங்குகளுடன் ஒப்பிட இயலாது. இவர்களைப் போன்ற விலங்குகள் இதற்கு முன் இருந்ததில்லையே. அவர்கள் வாழத் தகுதியற்றவர்கள்.

ரா.பார்த்திபன்: பொள்ளாச்சி சம்பவம் கதி கலங்கச் செய்தது! இவ்வன்முறை வருடம் ஒரு முறை வந்தது போய், மாதம் இருமுறையும், வாரம் ஒரு முறையுமாய் வருவது, நீதிமன்றத்தின் கடுமையாக்கப்பட்ட தண்டனைகளால் மட்டுமே மட்டுப்படுத்தப்படும்!

இயக்குநர் பா.இரஞ்சித்: பொள்ளாச்சி போன்று ஒவ்வொரு முறை மனிதத்தைக் கேள்வி கேட்கும் சம்பவங்கள் நடக்கும் போதும் பெண்களை பொறுப்பு கோரச் சொல்லும், எச்சரிக்கையாக இருக்கச் சொல்லும் நம் அனைவருக்கும்....நம் பாவம், பரிதவிப்பால், பிரச்சினை நடந்த பிறகு எழும் கோவத்தால் மட்டும் ஒரு மாற்றமும் இங்கு நிகழப்போவது இல்லை. ஆண் மைய சமூகத்தில் பெண் உடல், உடை, சமூக செயல்பாடு, கலாச்சாரம் பற்றிய  பிற்போக்குத்தன கருத்துருவாக்கத்தை மாற்றி நம்மை சுயபரிசோதனை செய்ய ஒவ்வொருவரும் முன் வரவேண்டும். இல்லையேல் பாதிக்கப்பட்ட,பாதிக்கபடப்போகும் பெண்களின் குரல்களை இன்னும் எத்தனை சட்டங்கள் இருந்தாலும் அதிகாரம் விழுங்கிக் கொண்டுதான் இருக்கும். நாமும் கேட்டு, பார்த்து, குரல் கொடுத்து அல்லது எதுவும் செய்யாமல் கடந்து போய் கொண்டுதான் இருக்க போகிறோம்.

இயக்குநர் சேரன்: பொள்ளாச்சி சம்பவத்தில் எந்தவிதமான அரசியல் தலையீடுமின்றி இளம் பெண்களை சீரழித்த அனைவருக்கும் சட்டப்படி தண்டனை கிடைக்கவேண்டும்.. (இந்த விசயத்தில் நாம் அரேபிய சட்டத்தைப் பின்பற்றலாம்) மாறாக எது நடந்தாலும் எதிர்த்துப்போராட அனைத்து பெற்றோர்களும் தயாராக இருக்கவேண்டும்..

நடிகர் பாலசரவணன்: பொள்ளாச்சி கொடூரர்களைத் தண்டிக்கவில்லையென்றால் நாம்எ ன்ன செய்வோம். சட்டையைப் போட்டுக்கொண்டு ஓட்டுபோட சென்றுவிடுவோம்..இவர்கள் தண்டிக்கபடவில்லையென்றால் தேர்தலை புறக்கணிப்போம் என்று சபதமெடுப்போம்.. எப்படி என்றாலும் நாடு நாசமாய் போவது உறுதி. நமது ஓட்டில்லாமலே அது நடக்கட்டும்..#ArrestPollachiRapist

இயக்குநர் சசிகுமார்: சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி பெண்களை கொடூரமாக நாசம் செய்திருப்பது குலைநடுங்க வைக்கிறது. உடனடியாக இந்தக் கொடூரர்களை தண்டிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்களின் எதிர்காலம் காப்பாற்றப்பட வேண்டும். #ArrestPollachiRapists

விஜயலட்சுமி: யோசிக்கவே வேணாம். நிக்க வெச்சு சுடுங்க. Live telecastல.  பயம் வரட்டும். பண பலம், அதிகாரம், வயசு, குரூர மனசுனு இந்த காம்பினேஷன்ல கால தூக்கி காட்ற கருமாந்ரோலா பயத்துல பொத்திக்கிட்டு பொழப்பப் பாக்கணும் உயிர் பயம் வந்தா தான் உருப்படுவான்க. போட்ருங்க சார்.  உடனே.!!!

இயக்குநர் கரு.பழனியப்பன்: பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி, கட்டுப்பாடுகள் விதித்து, கண்காணித்து, திரும்பிப் பார்த்தால் ஆண்பிள்ளைகள் தறுதலைகளாகி தரங்கெட்டு நிற்கிறார்கள். பெண்ணை சக மனுஷியாய் மதிக்கச் சொல்லிக் கொடுத்து ஆண்பிள்ளைகளை வளர்க்கும் வரை சமூகத்தில் பெண்ணுக்கு  விடிவு இல்லை .

ஐஸ்வர்யா ராஜேஷ்:  இனியும் நாம் மவுனம் காக்கத்தான் வேண்டுமா? பதில் சொல்ல வேண்டியவர் யார்...??

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x