Published : 06 Mar 2019 06:36 PM
Last Updated : 06 Mar 2019 06:36 PM

பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு மறைவு: நாடக நடிகர்கள், திரையுலகினர் அஞ்சலி

பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 82.

கிட்டத்தட்ட 50 ஆண்டுகள், 500க்கும் அதிகமான படங்களில் நடித்தவர் டைப்பிஸ்ட் கோபு. எண்ணற்ற நாடகங்களிலும் நடித்துள்ளார். திருச்சியில் பிறந்தாலும் இளம் வயதிலேயே இவரது குடும்பம் சென்னைக்கு பெயர்ந்து விட்டது. 

கோபு, கல்லூரி நாட்கள் முதலே நாடகங்களில் நடிப்பதில் தான் ஆர்வத்துடன் இருந்தார். பின், வேலை செய்துகொண்டே நாடகங்களில் நடித்து வந்தார். நாடகங்களில் டைப்பிஸ்ட் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டதால் அதுவே இவரது பெயரோடு ஒட்டிக் கொண்டு கோபாலரத்தினம் டைப்பிஸ்ட் கோபு ஆகிவிட்டார். இவர் நடித்த முதல் படம் 'அதே கண்கள்'. அங்கு தொடங்கி 'உயர்ந்த மனிதன்', 'காசேதான் கடவுளடா', 'பரீட்சைக்கு நேரமாச்சு', 'மைக்கேல் மதன காமராஜன்' என தலைமுறை கடந்து பல நடிகர்களுடன் நடித்துள்ளார். 

நடிகர் நாகேஷ் இவரது நெருங்கிய நண்பர். இவர் மூலமாகத்தான் நாகேஷுக்கு முதல் திரைப்பட வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதை நாகேஷ் பல இடங்களில் குறிப்பிட்டு பேசியுள்ளார். சோ, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோரின் நாடக குழுக்களில் தொடர்ந்து நடித்துள்ள கோபு தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

கடைசி காலத்தில் ராயபேட்டையில் மனைவியுடன் வாடகை வீட்டில் வறுமையில் வாழ்ந்தார் கோபு. இவருக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள். புதன் கிழமை அன்று உடல் நலக் குறைவால் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை காலை 11.30 மணிக்கு அயப்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x