Last Updated : 01 Mar, 2019 09:51 AM

 

Published : 01 Mar 2019 09:51 AM
Last Updated : 01 Mar 2019 09:51 AM

தென்னிந்தியாவில் இருக்கும் நமக்கு போரின் தீவிரம் புரிவதில்லை!- நடிகர் கார்த்தி உருக்கம்

பொதுவாக தென்னிந்தியாவில் வசிக்கும் மக்கள் நமது நாட்டின் எல்லைப் பகுதியில் நடக்கும் போரின் தீவிரம் அறியாதவர்களாக இருக்கிறார்கள். ஒரு போர் ஏற்படுத்தும் பின்விளைவு எந்த அளவுக்கு இருக்கும் என்பது நமக்கு அவ்வளவாக தெரியாது. அதனால் நாம் எல்லோரும் இந்த மாதிரியான சூழ்நிலையில் மதிப்பளிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என நடிகர் கார்த்தி உருக்கமாக தெரிவித்தார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘காற்று வெளியிடை’ திரைப்படத்தில் நடிகர் கார்த்தி இந்திய விமானப் படை பைலட் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அயல்நாட்டு ராணுவத்திடம் சிக்கிக்கொண்டு மீள்வதைப் போல காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

காஷ்மீர் பகுதியில் தற்போது நிலவிவரும் பரபரப்பான சூழல் தொடர்பாக திரைத்துறையினர் உள்ளிட்ட பலரும் உணர்ச்சிகரமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தான் பிடியில் சிக்கிக்கொண்ட விமானி அபிநந்தனை மீட்டுக் கொண்டு வர வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் கார்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்திய விமானப் படையைச் சேர்ந்த சில ஃபைட்டர் பைலட்டு களை என் வாழ்வில் சந்தித்தது பெருமை. அவர்கள் முற்றிலும் வித்தியாசமான களத்தில் இயங்கும் மனிதர்கள். நமது வீரர்கள் பாதுகாப்பாக திரும்ப நானும் பிரார்த்திக்கிறேன். நமது ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக நமது ஒட்டுமொத்த தேசமும் நிற்கிறது. அவர்களின் துணிந்த இதயமும், தியாகமும்தான் நம்மை பாதுகாப்பாக வைத்திருக்கிறது" என்று பதிவிட்டிருந்தார்.

‘காற்று வெளியிடை’ படத்துக்காக இயக்குநர் மணி ரத்னம் உருவாக்கிய கதைக்களத்துக்கு ராணுவ வீரர் அபிநந்தனின் தந்தை ஏர் மார்ஷல் வர்த்தமான் ஆலோசகராக செயல் பட்டிருக்கிறார். அவரது ஆலோசனைகளும், அனுபவமும் கார்த்தி கதாபாத்திரத்துக்கு பெரிதாக பலம் சேர்த்ததாக அப்போது தகவல் வெளியானது. இது குறித்து நடிகர் கார்த்தி ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் பேசியதாவது:

விமானி அபிநந்தனை நான் நேரில் சந்தித்ததில்லை. அவரது தந்தை ‘காற்று வெளியிடை’ படத்துக்கு ஆலோசகராக பணியாற்றினார் என்பது தெரியும். அப்போதும் அவருக்கும் மணி சாருக்கும்தான் சந்திப்புகள் அதிகம் இருந்தன. எனக்கு அவர் நேரடியாக எந்தப் பயிற்சியும் அளிக்கவில்லை. அந்தப் படம் தொடர்பான ஒரு நிகழ்ச்சியில்தான் அபிநந்தனின் தந்தையை நேரில் நான் பார்த்தேன். தற்போது வெளி யாகி வரும் சில தகவல்கள் எனக்கு வருத்தத்தை அளிக் கிறது. இந்த நேரத்தில் எதைப் பற்றி பேசினாலும் அது சரியான தாக இருக்காது என்பதே உண்மை.

தென்னிந்தியாவில் இருக்கும் நாம் போரின் தீவிரத்தை பார்க்காதவர்கள். நாம் போரின் விளைவு என்ன என்று பார்க்காத தலைமுறை. அது ஏற்படுத்தும் பின்விளைவுகள் என்ன என்பதும் நமக்குத் தெரியாது. அதனால் இந்த மாதிரியான சூழ்நிலையில் நாம் அவர்களுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

திரைப்படத்துக்காக ராணுவப் பயிற்சி இடங் களுக்குச் சென்றவன் என்ற முறையில், ‘எந்த இடத்தில் ஒரு ராணுவ வீரரை பார்த்தாலும் உடனே எழுந்து நின்று மதிப்பளிக்கும் மனநிலை வர வேண்டும்!’ என்று சொல் வேன். இப்போது எல்லையில் நிற்கும் அனைவரும் பாதுகாப் பாக வீடு திரும்ப வேண்டும் என நாம் எல்லோருமே பிரார்த்திப்போம்!’’

இவ்வாறு நடிகர் கார்த்தி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x