Published : 11 Feb 2019 08:48 AM
Last Updated : 11 Feb 2019 08:48 AM

திரை விமர்சனம்: தில்லுக்கு துட்டு-2

சென்னையில் ஆட்டோ ஓட்டுபவர் சந்தானம். தினமும் தனது தாய்மாமனான மொட்டை ராஜேந்திரனுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு, அக்கம்பக்கம் வசிப்பவர்களிடம் வம்பு செய்கிறார். அவரது இம்சையைத் தாங்க முடியாமல் அதே காலனியைச் சேர்ந்த டாக்டர் கார்த்திக் அவஸ்தைப்படுகிறார். தன் மருத்துவமனையில் பணியாற்றும் பிசியோதெரபிஸ்ட் ஷ்ரிதா சிவதாஸ், சந்தானத்துடன் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பங்களை திட்டமிட்டு உருவாக்குகிறார். அவரது திட்டம் தெரியாமல் சந்தானமும் ஷ்ரிதாவின் காதலில் விழுகிறார். இந்தச் சூழலில், கேரளாவில் இருக்கும் மிகப்பெரிய மந்திரவாதியின் மகள்தான் ஷ்ரிதா என்பது தெரியவருகிறது. இதனால் சந்தானத்துக்கு வரும் ஆபத்துகள் என்ன? பில்லி, சூனியம் என்று தீய சக்திகளை ஏவிவிடும் மந்திரவாதியை சந்தானம் எப்படி எதிர்கொள்கிறார்? ஷ்ரிதாவின் காதலை ஏற்றுக்கொண்டாரா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது திரைப்படம்.

‘தில்லுக்கு துட்டு’ என்ற திகில் - நகைச்சுவை படம் மூலம் 2016-ல் இயக்குநராக அறிமுகமான ராம்பாலா, சந்தானத்துடன் மீண்டும் கூட்டணி சேர்ந்துள்ளார். தற்போது வந்திருப்பதும் ஒரு திகில் - நகைச்சுவை படம். மற்றபடி, முதல் பாகத்தின் கதை தொடர்ச்சி எதுவும் இல்லை. கதை, திரைக்கதை லாஜிக் பற்றி எந்தக் கவலையும் கொள்ளாமல், சிரிக்க வைப்பதையும் சந்தானத்தின் ஹீரோ இமேஜை நிலைநிறுத்துவதையும் மட்டுமே நோக்கமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள படம். மொட்டை ராஜேந்திரனின் அலப்பறைகளும், அவற்றுக்கு சந்தானம் கொடுக்கும் கவுன்ட்டர்களும் ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெறுகின்றன. காமெடிதான் சந்தானத்தின் சிறப்பு அம்சம். அந்த எதிர்பார்ப்பை ஓரளவு பூர்த்தி செய்கிறார். பெண்களை தரக்குறைவாக விமர்சிப்பதை நகைச்சுவை ஆக்குவதும், முகம்சுளிக்க வைக்கும் வசனங்களும் கதாநாயகனுக்கு அழகல்ல. அதை தவிர்ப்பது அவசியம்.

நாயகியாக ஷ்ரிதா சிவதாஸ் கொடுத்த வேலையை செய்திருக்கிறார். பெண் மந்திரவாதியாக வரும் ஊர்வசி 2-ம் பாதியின் பெரும்பகுதி நகைச்சுவைக்கு சிறப்பாகப் பங்களிக்கிறார். மொட்டை ராஜேந்திரன் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிரிக்க வைக்கிறார். விஜய் டிவி ராமருக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை.

சந்தானத்தின் அடாவடிகளை நேரடியாக எதிர்க்க காலனிவாசிகள் ஏன் பயப்படுகிறார்கள்? அவற்றை ஏன் பொறுத்துக்கொள்கிறார்கள் என்பது புரியவில்லை. போதையில் மற்றவர்களை தொந்தரவு செய்வது சாதாரண விஷயம் என்பதுபோல சித்தரிக்கப்பட்டுள்ளது. சந்தானத்தின் ஆரம்பகட்டப் பகுதிகள் அலுப்பையும், எரிச்சலையும் ஏற்படுத்துகின்றன. படத்தின் கதைக்கு சம்பந்தம் இல்லாத பகுதிகள் நீட்டி முழக்கப்பட்டு பொறுமையை சோதிக்கின்றன.

படம் எதை நோக்கிச் செல்கிறது என்ற தெளிவின்றி திசை தெரியாமல் திணறி நிற்கும் திரைக்கதை, ஒருவழியாக இடைவேளையில் மையப்புள்ளியை வந்தடைகிறது. ஆனால், அதற்குப் பிறகும் எந்த புத்திசாலித்தனமும் படத்தில் இல்லை. மந்திரவாதிகளின் போலி பிம்பம் மட்டும் திரைக்கதையின் திருப்பத்துக்குப் பயன்படுகிறது. பேய்க்கான பின்னணியில் ஓலைச்சுவடி, ஆங்கிலேயர் ஜார்ஜ், மார்த்தாண்ட வர்மாவின் மாந்திரீகம் என்று காட்சியப்படுத்தியதில் நம்பகத்தன்மை இல்லை.

இடைவேளையை ஒட்டி கதை கேரளாவுக்கு இடம்பெயர்வதோடு, படத்தின் தன்மையும் மாறுகிறது. போலி சாமியார் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன. சந்தானம் உட்பட அனைவரும் பேய் பங்களாவுக்குள் மாட்டிக்கொள்ளும் கடைசி அரைமணி நேரக் காட்சிகள் திரையரங்கில் தொடர் சிரிப்பலைகள், ஆரவாரத்தைக் கிளப்புகின்றன. இது முந்தைய பகுதிகளின் குறைகளை மறக்க வைத்துவிடுகிறது.

ஷபீரின் இசையில் பாடல்கள், பின்னணி இசை, மாதவனின் படத்தொகுப்பு சுமார் ரகம். தீபக் குமார் பதியின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம் சேர்க்கிறது.

கதாபாத்திரக் கட்டமைப்பிலும், கதை, திரைக்கதையிலும் கவனம் செலுத்தாததால் முழுமையான திகில் + நகைச்சுவை பட அனுபவத்தை தரத் தவறுகிறது ‘தில்லுக்கு துட்டு-2’.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x