Published : 09 Feb 2019 09:21 PM
Last Updated : 09 Feb 2019 09:21 PM

வர்மா பட சர்ச்சை: விலகியது ஏன்?- பாலா விளக்கம்

'வர்மா' படத்திலிருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு என்று பாலா தெரிவித்துள்ளார்.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் சூப்பர் ஹிட்டான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. இந்தப் படத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால், தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இதனை ரீமேக் செய்து வருகின்றனர். தமிழில், ‘வர்மா’ என்ற பெயரில் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பாலா இயக்க, விக்ரமின் மகன் துருவ் விக்ரம் இதன்மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். மேகா என்ற மாடல் ஹீரோயினாக நடித்துள்ளார். இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை, பாலாவின் ‘பி ஸ்டுடியோஸ்’ வழங்குகிறது.

இந்நிலையில், ‘வர்மா’படம் திருப்தி அளிக்காததால் மறுபடியும் படத்தை எடுக்க இருப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை இ4 என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டது. அதில்,  ''எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட ‘வர்மா’ படம் எங்களுக்குப் போதுமான மகிழ்ச்சியை அளிக்கவில்லை. எனவே, நாங்கள் இந்தப் பதிப்பை வெளியிட விரும்பவில்லை. இதற்குப் பதிலாக ‘அர்ஜுன் ரெட்டி’தமிழ் ரீமேக்கை நாங்கள் புதிதாகத் தொடங்க இருக்கிறோம். ஒரிஜினல் ‘அர்ஜுன் ரெட்டி’படத்தின் உயிரோட்டம் மாறாமல், துருவ்வை மீண்டும் கதாநாயகனாக வைத்து படத்தை மீண்டும் எடுக்க இருக்கிறோம்.

படத்தின் இயக்குநர், நடிக்க இருக்கும் பிற கதாபாத்திரங்கள் குறித்து புதிதாக விரைவில் அறிவிக்கப்படும். இந்தப் படத்துக்காக நாங்கள் நிறைய பணத்தைச் செலவழித்தோம். இருப்பினும், இப்படத்தைத் தமிழில் காண வேண்டும் என்ற எங்கள் முடிவில் மாற்றமில்லை. நாங்கள் ஓய்வின்றி உழைத்து இப்படத்தை ஜூன் மாதம் வெளியிடுவோம். எங்கள் பயணத்துக்கு உங்கள் ஆதரவையும் வாழ்த்தையும் எதிர்பார்க்கிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டது. இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 'வர்மா' படத்திலிருந்து விலகிக் கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு என்று பாலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாலா இன்று  வெளியிட்ட அறிக்கையில், '' 'வர்மா' படத் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தெரிவித்த தவறான தகவலால், இந்த விளக்கத்தைத் தர வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறேன்.

படைப்பு சுதந்திரம் கருதி, 'வர்மா' படத்திலிருந்து விலகிக்கொள்வது என்பது நான் மட்டுமே எடுத்த முடிவு.  கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதியே தயாரிப்பாளருடன் இதற்காக ஒப்பந்தம் செய்துகொண்டேன். துருவ் விக்ரமின் எதிர்கால நலன் கருதி மேலும் பேச விரும்பவில்லை'' என்று பாலா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x