Published : 08 Feb 2019 06:12 PM
Last Updated : 08 Feb 2019 06:12 PM

உங்கள் தெய்வீக குரலும், புனிதமான இசையும் மனதை வருடுகிறது: ஷான் ரோல்டனைப் பாராட்டிய தனுஷ்

உங்கள் தெய்வீக குரலும், புனிதமான இசையும் மனதை வருடுகிறது என இசையமைப்பாளர் ஷான் ரோல்டனைப் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் தனுஷ்.

பாலாஜி மோகன் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘வாயை மூடி பேசவும்’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஷான் ரோல்டன். தொடர்ந்து ‘முண்டாசுப்பட்டி’, ‘ஜோக்கர்’ என பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

தனுஷ் இயக்குநராக மாறிய ‘பவர் பாண்டி’ படத்துக்கு, ஷால் ரோல்டன் தான் இசையமைப்பாளர். அத்துடன், தனுஷ் நடிப்பில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்துக்கும் இசையமைத்தார். இசையமைப்பதோடு, பல பாடல்களையும் பாடியுள்ளார் ஷான் ரோல்டன். தன்னுடைய இசையில் மட்டுமின்றி, பிற இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார்.

ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அந்தப் பாடல்களைக் கேட்டு மகிழ்ந்த தனுஷ், ட்விட்டரில் ஷான் ரோல்டனைப் பாராட்டிப் பதிவிட்டுள்ளார்.

‘வெள்ளாட்டுக் கண்ணழகி, கோடி அருவி கொட்டுதடி. ஷான் ரோல்டன்... உங்கள் தெய்வீகக் குரலும், புனிதமான இசையும் மனதை வருடுகிறது. வாழ்த்துகள்!’ எனத் தெரிவித்துள்ளார் தனுஷ்.

சரவண ராஜேந்திரன் இயக்கியுள்ள ‘மெஹந்தி சர்க்கஸ்’ படத்துக்கு, ராஜு முருகன் கதை எழுதியுள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ், ஸ்வேதா திரிபாதி, வேல ராமமூர்த்தி, ஆர்.ஜே. விக்னேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x