Last Updated : 05 Feb, 2019 06:24 PM

 

Published : 05 Feb 2019 06:24 PM
Last Updated : 05 Feb 2019 06:24 PM

ஆஸ்கரைப் பெறும்போது ஒல்லியாகத் தெரிய பட்டினி கிடந்தேன்: ஏ.ஆர்.ரஹ்மான் ருசிகரம்

ஆஸ்கர் விருதைப் பெறும்போது ஒல்லியாகத் தெரிய வேண்டும் என்பதற்காக பட்டினி கிடந்தேன் என்று விருது வாங்கி 10 ஆண்டுகள் கழித்து ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார்.

 

ஏ.ஆர்.ரஹ்மான், 'ஸ்லம்டாக் மில்லினியர்' திரைப்படம் மற்றும் 'ஜெய் ஹோ' பாடலுக்காக 2009-ம் ஆண்டு ஆஸ்கர் விருது பெற்றார். பத்து ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடுவதற்காக மும்பை தாராவி பகுதியில் நிகழ்ச்சி நேற்று (திங்கட்கிழமை) நடந்தது. இதில் ரஹ்மான், பாடலாசிரியர் குல்சார், பாடகர்கள் சுக்விந்தர் சிங், மஹாலக்‌ஷ்மி ஐயர், விஜய் பிரகாஷ், நடிகர் அனில் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது ஏராளமான செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்  ஏ.ஆர்.ரஹ்மான்.

இரண்டு ஆஸ்கர்களைப் பெற்று சாதனை படைத்த இந்தியர் நீங்கள். அன்று உங்களின் மனநிலை எப்படி இருந்தது?

நிஜமாகச் சொல்ல வேண்டுமென்றால் எப்படியும் இல்லை. விழாவில் ஒல்லியாகத் தெரிய வேண்டும் என்பதற்காக பட்டினி கிடந்தேன். அவ்வளவே!

 

அடுத்தடுத்த படங்களை நோக்கி நகரும்போது ஆஸ்கரின் புகழ் உங்களுக்கு உதவியதா, பாதித்ததா?

உதவியது. ஆஸ்கர் மிகப்பெரிய அடையாளத்தைப் பெற்றுத் தந்தது. ஹாலிவுட்டில் அந்த அடையாளம் எனக்குத் தேவைப்பட்டது. இப்போது எங்கெல்லாம் நான் குறிப்பிடப்படுகிறேனோ, அங்குள்ள மக்களுக்கெல்லாம் என் பெயர் தெரிந்திருக்கிறது.

 

அது இசையில் உங்களுக்கு பயன்பட்டதா?

ஆஸ்கரின் அங்கீகாரம், இசையில் மட்டும் என்னை முன்னேற்றவில்லை. படங்களைத் தயாரிப்பதிலும் வர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற தொழில்நுட்பங்களில் ஈடுபடுவதிலும் என்னை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றது. இதற்கான அனைத்து சுதந்திரமும் ஆஸ்கரின் வலிமையால் கிடைத்தது.

 

விருது பெறும் நிகழ்ச்சியில் மறக்க முடியாத சம்பவம் ஏதாவது?

நான் அனில் கபூருக்கு அடுத்ததாக அமர்ந்திருந்தேன். அப்போது எனக்கு மிகவும் தாகமாக இருந்தது. என்னிடம் மிகவும் அன்பாக இருக்கும் அனில், எனக்காக ஸ்ப்ரைட் வாங்கச் சென்றார்.

 

அவர் வாங்கிக்கொண்டு திரும்புவதற்குள் நான் விருதை வாங்கிவிட்டேன். இதனால் என்மீது விளையாட்டாகக் கோபப்பட்ட அனில், என்னை மன்னிக்க மாட்டேன் என்று கூறினார்.

 

இவ்வாறு ஏ.ஆர்.ரஹ்மான் பேசினார்.

 

ஸ்லம்டாக் மில்லினியர் திரைப்படம் 8 ஆஸ்கர் விருதுகளை வென்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான் இரண்டு விருதுகளைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x