Published : 05 Feb 2019 03:20 PM
Last Updated : 05 Feb 2019 03:20 PM

‘தளபதி 63’ படத்தில் விஜய்யின் பெயர் மைக்கேல்?

‘தளபதி 63’ படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்துக்கு மைக்கேல் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘தெறி’ மற்றும் ‘மெர்சல்’ படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்யை இயக்கி வருகிறார் அட்லீ. ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கும் இந்தப் படம், தற்போது ‘தளபதி 63’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது.

விஜய் ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், விவேக், யோகி பாபு, ரோபோ ஷங்கர் மகள் இந்திரஜா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு, சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தப் படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்துக்கு மைக்கேல் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் விளையாட்டுப் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய். எனவே, அவருடைய உடற்கட்டு, அதற்கேற்றவாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குநராக முத்துராஜ் பணியாற்ற, ரூபன் எடிட் செய்கிறார்.

இந்தப் படத்தின் பூஜையில் நடிகர்கள் டேனியல் பாலாஜி, ஆனந்த் ராஜ் இருவரும் கலந்து கொண்டனர். ஆனால், இவர்கள் படத்தில் நடிப்பதாக இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x