Published : 05 Feb 2019 02:34 PM
Last Updated : 05 Feb 2019 02:34 PM

பத்திரிகையாளர்கள் கோபம்: வருத்தம் தெரிவித்த 96 இயக்குநர்

பத்திரிகையாளர் கோபமடைந்ததால், ’96’ படத்தின் 100-வது நாள் நிகழ்வுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார் இயக்குநர் பிரேம்குமார்.

பிரேம்குமார் இயக்கத்தில் விஜய்சேதுபதி, த்ரிஷா, திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் '96'. நந்தகோபால் தயாரித்த அப்படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். மாபெரும் வெற்றியடைந்து சுமார் 100 நாட்கள் கடந்துள்ளது.

இதனைக் கொண்டாடும் வகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. அப்போது படக்குழுவினர் அனைவருக்கும் ஷீல்டும் கொடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் யூ-டியூப் விமர்சகர்களின் விமர்சனத்துக்கு நன்றி தெரிவித்து அவர்களது வீடியோவை திரையிட்டனர். இது தினசரி பத்திரிகையாளர்களை மிகவும் கோபத்துக்கு உள்ளாக்கியது.

பலரும் தங்களுடைய எதிர்ப்பை பதிவு செய்ததைத் தொடர்ந்து, இயக்குநர் பிரேம்குமார் வருத்தம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

'96' படத்தை இந்த இமாலய வெற்றிக்கு வழி வகுத்த தூக்கி கொண்டாடிய அனைத்து பத்திரிகை, ஊடக, இணையதள, தொலைக்காட்சி, பண்பலை நண்பர்கள் அனைவருக்கும் முதலில் என் தார்மீக வருத்தத்தை தெரிவித்து கொண்டு நடந்த நிகழ்வை தெளிவு படுத்த கடமை பட்டிருக்கிறேன்.

'96' பட நூறாவது நாள் விழாவில் இந்த படத்தை கொண்டாடிய பத்திரிகையாளர்களையும், அவர்கள் '96' படத்துக்கு தந்த கவுரவங்களையும் திரையிட்டு மகிழ்ச்சி படுத்த வேண்டும் என்று விரும்பிதான் அந்த வீடியோ திரையிடப்பட்டது.

மேலும், ஒவ்வொரு பிரிவாக அந்த வீடியோ நிகழ்வை வைத்து கொள்ளலாம். விருந்தினர்கள் ஒவ்வொருவரும் பேசி அமரும் போது இடையிடையே அந்த வீடியோவை சின்ன சின்னதாக காண்பித்தால் சரியாக இருக்கும் என்று திட்டமிட்டோம்.

இந்த வீடியோ ஒன்று இருக்கிறது என்பதே பட நாயகன் விஜய்சேதுபதிக்கோ, நாயகி த்ரிஷாவுக்கோ தெரியாது. அவர்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் ஒரு திடீர் சந்தோஷத்தை தரலாம் என்று நினைத்துதான் அந்த வீடியோ தயாரிக்கப்பட்டது.

விழா தொடங்கி 140 பேர்களுக்கு மேல் நினைவு பரிசு வழங்கயிருந்தோம். ஆனால், நேரமின்மையால் 40 பேருக்கு மேல் தர முடியாமல் போய்விட்டது. அதைப்போலதான் பெரும்பாலான பத்திரிகையாளர்களின் விமர்சன பாராட்டுக்களை தொகுத்து அடுத்து போட இருந்த வீடியோவுக்கும் திரையிட முடியாமல் நேரமின்மை தடுத்து விட்டது.

இந்த நிகழ்வால் பத்திரிகையாளர்களாகிய உங்கள் மனம் வருத்தத்திற்கு என் சிரம்தாழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல, மீண்டும் நினைவுபடுத்த விரும்புகிறேன் பத்திரிகையாளர்கள்தான் இந்த உயர்வுக்கு காரணம். என்னை உயர்த்தி விட்ட உங்களை நான் ஏன் அவமரியாதை செய்யப்போகிறேன். எனவே, நடந்த தவறுக்கு யார் மீதும் எதன் மீதும் பழி போட்டு விட்டு போகாமல் நானே பொறுப்பேற்று வருத்தம் தெரிவிக்கிறேன். இனி எதிர்காலத்தில் இதுபோன்ற எந்த தவறும் நடக்காது என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

எப்போதும் என் உயர்வில் பத்திரிகையாளர்களாகிய உங்கள் அனைவரின் ஆதரவும், அன்பும் எனக்கு தொடரும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறேன்.

இவ்வாறு பிரேம்குமார் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x