Last Updated : 18 Jan, 2019 09:36 PM

 

Published : 18 Jan 2019 09:36 PM
Last Updated : 18 Jan 2019 09:36 PM

கவலைப்படாமல் பேச தைரியத்தைக் கொடுத்தவர் பெரியார்: சிம்பு

கவலைப்படாமல் பேச தைரியத்தைக் கொடுத்தவர் பெரியார் என்று சிம்பு தெரிவித்துள்ளார்.

’பெரியார் குத்து’ என்ற தலைப்பில் சிம்பு பாடலை ஒன்றை பாடி, அதற்கு நடனமும் ஆடியுள்ளார். தீபன், சஞ்சய் தயாரித்த இப்பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். இப்பாடலுக்கு திராவிட திருநாள் விழாவில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

சிம்பு, மதன் கார்க்கி, தயாரிப்பாளர்கள் தீபன், சஞ்சய் ஆகியோருக்கு கீ.விரமணி பொன்னாடைப் போர்த்தி வாழ்த்து தெரிவித்தார். இவ்விழாவில் சிம்பு பேசியதாவது:

சின்ன வயதிலிருந்து நிறைய மேடை பார்த்துள்ளேன். சினிமா, ஸ்கூல் ஆகிய மேடைகளைத் தாண்டி இந்த மேடை எனக்கு ரொம்பவே ஸ்பெஷலானதாக பார்க்கிறேன். இதைப் பாராட்டு என்று நினைப்பதை விட, இதில் எனக்கும் ஒரு இடம் கிடைத்துள்ளது என்று நினைக்கும் போது சந்தோஷமாக உள்ளது.

ஒரு மதத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமானால், அதற்கான புத்தகத்தை படித்தால் மட்டுமே தெரிந்து கொள்ள முடியும். ஆனால், பெரியாரைப் பற்றி படிக்க வேண்டுமானால் "கடவுளை மற... மனிதனை நினை" அவ்வளவு தான்.

முதலில் ஒரு மனிதனாக இன்னொரு மனிதனை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், பிறகு எப்படி கடவுளைப் பற்றி புரியும். இவ்வளவு பேர் சினிமாவில் இருக்கும் போது, மனதில் பட்டதை பேசிவிடுகிறீர்கள், உங்களைச் சுற்றி ஏகப்பட்ட சர்ச்சைகள், எதைப் பற்றி கவலைப்பட மாட்டிக்கிறீர்கள் என்று பலரும் கேட்பார்கள்.

அந்த தன்னம்பிக்கைக்கு காரணம் எங்கப்பா டி.ஆர் தான். அதற்குப் பிறகு மனதில் பட்டதை என்ன வேண்டுமானாலும் பேசலாம், அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை என்ற தைரியத்தைக் கொடுத்தது பெரியார் தான். அதனால் மட்டுமே என்னால் அப்படிப் பேச முடிகிறது.

முதலில் நாம் நாமாக இருக்க வேண்டும். பெண் விடுதலையைப் பற்றி பலரும் பேசியிருக்கிறார்கள். ஆனால், ஒரு ஆண் மகனாக பெண் விடுதலையைப் பற்றி பேசியது சாதாரண விஷயமில்லை. நாம் அனைவரும் எதை வேண்டுமானாலும் சார்ந்து இருக்கலாம். எப்படி வேண்டுமானாலும் பிரிந்திருக்கலாம். ஆனால் உணர்வால் எப்போதுமே ஒன்றாக தான் இருக்க வேண்டும்.

இன்றைய காலகட்டத்தில் பெரியரைக் கொண்டு போய் சேர்க்கவில்லை என்றால், அவரைப் பற்றி தெரிந்து கொண்டதற்கு பிரயோஜனமே இல்லாமல் போய்விடும். அதற்காகத் தான் இப்பாடலைப் பாடி, ஆடினேன். இதனை 'பெரியார் பாடல்' என்று போடாமல் 'பெரியார் குத்து' எனப் போட்டோம். ஏனென்றால், அவர் பேசியது எல்லாம் குத்து மாதிரி தான் இருந்தது.

அப்பாடல் வெற்றியடைந்ததிற்கு காரணம் நானல்ல, பெரியார் மட்டுமே காரணம். அதற்குத் தான் உழைத்தோம். அதற்கு கிடைத்த இந்த அங்கீகாரத்திற்கு நன்றி.

இவ்வாறு சிம்பு பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x