Published : 06 Jan 2019 03:26 PM
Last Updated : 06 Jan 2019 03:26 PM

சுயநலத்தோடு செயல்படுகிறார் விஷால்: தயாரிப்பாளர் சிவா காட்டம்

தயாரிப்பாளர் சங்கத்தில் விஷால் சுயநலத்தோடு செயல்படுவதாக தயாரிப்பாளர் சிவா காட்டமாக தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் நடந்த பிரச்சினையால் மீண்டும் இருதரப்பினர் கடுமையான வார்த்தைப் போர் நடத்தி வருகின்றனர். பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறவுள்ள இளையராஜா இசை நிகழ்ச்சியை எந்த அணி வெற்றிகரமாக நடத்தி பெயர் வாங்கப் போகிறது என்பதற்காக இந்தப் போட்டி என்று கூறுகிறார்கள்.

தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் அணிக்கு எதிராக, சுரேஷ் காமாட்சி, டி.சிவா உள்ளிட்ட பலர் ஒன்றிணைந்து சங்க அலுவலகத்துக்கு பூட்டு போட்டனர். அதனை உடைத்து உள்ளே செல்ல முயன்ற விஷால் கைதாகி, மாலையில் விடுதலை செய்யப்பட்டார். மேலும், இது தொடர்பாக விஷால் மீது வழக்கும் பதியப்பட்டுள்ளது.

இந்நிலையில், பூட்டுப் போட்ட விவகாரம் தொடர்பாக 29 தயாரிப்பாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதற்கு 15 நாட்களுக்கு விளக்கமளிக்க கெடுவும் விதித்துள்ளது. மேலும், இவர்கள அனைவருமே சங்கத்திலிருந்து நீக்கப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

விஷால் அணியின் மீது அதிருப்தியில் இருக்கும் தயாரிப்பாளர் டி.சிவாவிடம் நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரம் குறித்து கேட்டதற்கு, அவர் கூறியிருப்பதாவது:

தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவராக வந்தால் இதெல்லாம் செய்வேன் என்று விஷால் அளித்த வாக்குறுதிகள் எதையுமே அவர் நிறைவேற்றவில்லை. அரசியால் ஆதாயத்துக்காகவும், சுயநலமாகவும் விஷால் செயலாற்றி வருகிறார்.

தமிழக அரசுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இருந்த உறவை முறித்துவிட்டார். தலைவர் பொறுப்பில் இருப்பவர்கள் அரசுடன் ஒத்துப்போக வேண்டும். ஆனால் சுயநலத்தோடு விஷால் செயல்படுகிறார். எங்களை தகுதி நீக்கம் செய்ய விஷாலுக்கு தகுதி இல்லை. அவர்கள் அனுப்பியுள்ள நோட்டீஸை சட்டப்படி சந்திப்போம்

இவ்வாறு தயாரிப்ப்பாளர் சிவா தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x