Last Updated : 22 Dec, 2018 04:57 PM

 

Published : 22 Dec 2018 04:57 PM
Last Updated : 22 Dec 2018 04:57 PM

முதல் பார்வை: அடங்க மறு

சட்டப்படி தன் கடமையைச் செய்ய முடியாத போலீஸ் அதிகாரி அந்த வேலையைத் தூக்கியெறிந்துவிட்டு குற்றவாளிகளைத் தண்டித்தால் அதுவே 'அடங்க மறு'.

சென்னை அண்ணா நகரில் காவல் உதவி ஆய்வாளராக வேலைக்குச் சேர்கிறார் சுபாஷ் (ஜெயம் ரவி).  உயர் அதிகாரியின் உத்தரவின் பேரில் ஒரு மதுக்கடையை மூடக் கோரி நடைபெறும் போராட்டத்தைத் தடுத்து நிறுத்தச் செல்கிறார். ஆனால், எஸ்.ஐ. சுபாஷின் நூதன ஆலோசனையால் மாணவர்கள் மதுக்கடையைச் சூறையாடுகின்றனர். ஓர் இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடக்க, அதை தற்கொலை என்று சொல்லி வழக்கை முடித்து வைக்க போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்கருப்பன் (மைம் கோபி) முடிவெடுக்கிறார். சுபாஷ் அதையும் முறியடிக்கிறார். அந்தக் கொலை வழக்கு சம்பந்தமான விசாரணையில் தீவிரமாக இறங்க, தன் குடும்பத்தை இழக்கிறார்.

 உண்மையில் நடந்தது என்ன, இளம்பெண் மரணத்தில் இருக்கும் மர்மம் என்ன, காவல்துறை உயர் அதிகாரிகள் சுபாஷை கடமை ஆற்ற விடாமல் கட்டிப்போட, அவர் அடுத்து என்ன செய்கிறார், குற்றவாளிகளை எப்படித் தண்டிக்கிறார் போன்ற கேள்விகளுக்கு பரபர பாணியில் பதில் சொல்கிறது திரைக்கதை.

பொறுப்பான கதைக்களத்தை மிகச் சாதுர்யமாகக் கையாண்டு முதல் படத்திலேயே சிக்ஸர் அடித்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் தங்கவேல். அவரின் அக்கறையும், பொதுநலனும் பாராட்டுக்குரியது.

காக்கிச்சட்டைக்கான கம்பீரத்தில் ஜெயம் ரவி கச்சிதம். 'ஒபே தி ஆர்டர்' என்ற கட்டளைக்குக் கட்டுப்படுவதில் இருக்கும் அசவுகரியத்தையும், தப்பைத் தட்டிக்கேட்கும் துணிச்சலையும் மிக அழகாக வெளிப்படுத்துகிறார். எதிரி யார் யார் என்பது தெரிந்ததும் அவர்களுக்கு எதிர்வினையாற்றும் விதத்திலும் ரவி இயல்பாக ஈர்க்கிறார். குற்றவாளிகளுக்கு எதிரான குரலாக ஓங்கி ஒலிக்கும்போது கண்ணியமான காவல்துறை அதிகாரியாக மிளிர்கிறார்.

ராஷிகன்னாவுக்கு படத்தில் அதிகம் வேலை இல்லை. அந்தக் காதலில் ஆழமும் இல்லை. ஆனால், கதையின் ஓட்டத்தில் சில முக்கியச் செயல்பாடுகள் இவரைச் சுற்றியே நகர்கின்றன.

அன்பு காட்டி வழிகாட்டும் சக போலீஸ் அதிகாரியாக அழகம் பெருமாள் பக்குவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவரது கதாபாத்திரம் திடீரென சுருங்கி விடுவது ஏன் என்று தெரியவில்லை.  'முனீஸ்காந்த்' ராம்தாஸ், பஞ்சு சுப்பு, பொன்வண்ணன், மீரா கிருஷ்ணன், கஜராஜ் போன்றோர் சில காட்சிகள் வந்துபோனாலும் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்துள்ளனர். பூர்ணாவுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.

மிகப்பெரிய உயர் பொறுப்பில் இருக்கும் காவல்துறை அதிகாரியான சம்பத் கடைசி வரை எதுவுமே செய்யாமல் மிரட்டிக்கொண்டே இருக்கிறார். தன் கட்டுப்பாட்டில் இருக்கும் எஸ்.ஐ.யிடம் இருந்து எந்த உண்மையும் வரவழைக்க முடியாமல் திணறுகிறார்.

சத்யன் சூரியனின் ஒளிப்பதிவும், ரூபனின் எடிட்டிங்கும் படத்துக்குப் பலம். சாம் சி.எஸ். இசையில் சாயாளி பாடல் சூப்பர். பின்னணி இசையில் மிரட்டி படத்துக்கான டெம்போவை சாம் கடத்தி இருக்கும் விதம் கவனிக்க வைக்கிறது. ''நாடே ஓடும்போது நாம நடுவுல ஓடணும், தனியா ஓடணும்னு நினைச்சா காணமப் போய்டுவ'', ''எல்லோ போலீஸும் சின்சியரா இருந்திட்டா ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனும் கோயில்தான்'' போன்ற ஷார்ப்பான வசனங்கள் படத்துக்கு வலு சேர்க்கின்றன.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து இயக்குநர் கார்த்திக் தங்கவேல் பதிவு செய்திருப்பது படத்தின் ப்ளஸ்.  தொழில்நுட்ப அம்சங்களை பிரதானமாகக் கொண்டு பழிவாங்கும் படலத்தை விதவிதமாக அரங்கேற்றி இருக்கும் விதம் போரடிக்காமல் பார்க்கச் செய்கிறது.  படத்தில் லாஜிக் மீறல்கள் இருப்பதையும் மறுக்க முடியாது. குடும்பத்தையே இழக்கும்போது ஜெயம் ரவியின் துயரத்தை சரியாகக் காட்சிப்படுத்தவில்லை. உணர்வுபூர்வமான காட்சி வெறுமனே கடந்துபோகிறது.

ஒவ்வொரு குற்றவாளியும் ஏன் தனித்தனியாகவே வந்து சிக்குகிறார்கள், கலெக்டரின் மகன் எப்படி தனியாகச் சிக்கினான், சந்தேகத்துக்குரிய நபர் என்று தெரிந்தும் அவரைத் தொடர்ந்து கண்காணிக்காதது ஏன், உயிர் முக்கியம் என நினைப்பவர்கள் ஏன் எச்சரிக்கையே இல்லாமல் அலட்சியத்துடன் செயல்படுகிறார்கள் போன்ற கேள்விகள் எழுகின்றன. ஆனால், பரபரப்பான விறுவிறுப்பான திரைக்கதையும், புத்திசாலித்தனமான தொழில்நுட்ப அம்சங்களும் இந்தக் கேள்விகளைத் தாண்டி படம் பார்க்கச் செய்கின்றன. அந்தவிதத்தில் 'அடங்க மறு' திரைப்படத்தை அவசியம் பார்க்கலாம்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x