Last Updated : 20 Dec, 2018 06:08 PM

 

Published : 20 Dec 2018 06:08 PM
Last Updated : 20 Dec 2018 06:08 PM

முதல் பார்வை: சீதக்காதி

பழம்பெரும் நாடகக் கலைஞர் ஆதிமூலம் ஐயா ( விஜய் சேதுபதி). சபா நிறையும் அளவுக்கு நாடகம் நிகழ்த்தி பழக்கப்பட்டவர். காலப்போக்கில் மக்கள் கூட்டம் குறைந்து 10 பேர் 15 பேர் மட்டும் நாடகம் பார்க்க வருகிறார்கள்.  தியேட்டர், மதுபானக்கடைகள், தெருக்களில் செல்போனில் அரட்டை அடிக்கும் இளைஞர்கள், செல்ஃபி விரும்பிகள் என எங்கும் திரளும் கூட்டம் நாடகம் மட்டும் பார்க்க வருவதில்லை என்று கவலைப்படுகிறார். விளம்பரம் கொடுத்தாவது நாடகம் பார்க்க வருவார்கள் என்று சபா உரிமையாளர் மௌலி ஆலோசனை கூற, அதனை விஜய் சேதுபதி ஏற்கிறார். ஆனாலும், கூட்டம் வரவில்லை. பேரனின் மருத்துவச் செலவுக்கு பணம் தேவைப்படும் சூழலில், எதிர்பாராட்த துயரம் நிகழ்கிறது. அதற்குப் பின் விநோதமான, நம்பமுடியாத சம்பவங்கள் அரங்கேறுகின்றன. அப்படி என்ன நடந்தது, பேரனின் மருத்துவச் செலவுக்குப் பணம் கிடைத்ததா, கலைக்கும் கலைஞனுக்கும் கிடைக்கும் மரியாதை என்ன போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தை இயக்கிய பாலாஜி தரணிதரன் நாடகக் கலைஞனின் வாழ்வையும் அவரின் கலை தாகத்தையும் மிக நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார். கலைக்குப் பின் கலைஞனின் நிலை, கலைஞனுக்குப் பின் கலையின் நிலை என்ற இரு புள்ளிகளையும் இணைத்து அதை காட்சிவழியாக அடுத்த தளத்துக்குள் கொண்டு சென்ற விதத்தில் கவனம் ஈர்க்கிறார். செத்தும் கொடுத்தான் சீதக்காதி என்ற ஒற்றை வரிக்கு பாலாஜி தரணிதரன் புத்திசாலித்தனமான திரைக்கதையால் கவுரவம் செய்திருக்கிறார்.

விஜய் சேதுபதிக்கு இது 25-வது படம். மேடை நாடகக் கலைஞர் ஆதிமூலம் ஐயாவாக சேது அப்படியே பொருந்திப் போகிறார். 70 வயதைக் கடந்த முதியவரின் முக பாவனைகளை, உடல் மொழியை, நிதானத்தை, தவிப்பை அப்படியே பிரதிபலிக்கிறார். சத்தியவான், ஔரங்கசீப் என மேடை நாடகத்தில் நடிக்கும் போது தன் தேர்ந்த நடிப்பால் வசீகரிக்கிறார். படத்தில் விஜய் சேதுபதி சுமார் 45 நிமிடங்கள் மட்டுமே வருகிறார். ஆனால், அதற்குப் பிறகும் அவரை சுற்றியே நகர்கிறது திரைக்கதை.  அந்த பிம்பம் கட்டமைக்கப்படுவதற்கான நியாயத்தை விஜய் சேதுபதி செய்திருக்கிறார்.

மிகப்பெரிய ஆளுமையை அருகிலிருந்து பார்த்து, நெகிழ்ந்து, உருகிய நண்பனைப் போன்ற சபா உரிமையாளர் கதாபாத்திரத்தில் மௌலி பக்குவமாக நடித்திருக்கிறார். அர்ச்சனா கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்துக்குத் தேவையான நடிப்பைக் குறையில்லாமல் வழங்கியுள்ளார். நாடகக் கலைக்குள் புதிதாக அறிமுகமாகி சினிமாவில் நட்சத்திரமாக வளர்ந்து கெத்து காட்டும் சரவணன் கதாபாத்திரத்தில் ராஜ்குமார் திறமை காட்டியிருக்கிறார். நடிக்கத் தெரியாமல் அவஸ்தைப்பட்டு புலம்பும் தனபால் கதாபாத்திரத்தில் சுனில் அசத்தி இருக்கிறார். நடிகர்களிடம் தேவைப்படும் நடிப்பை வாங்க முடியாமல் திணறும் பகவதி பெருமாள் உள்ளிட்ட சில இயக்குநர்களின் நடிப்பும் ரசிக்க வைக்கிறது.

காயத்ரி, ரம்யா நம்பீசன், பார்வதி நாயர் ஆகியோர் ஓரிரு காட்சிகளில் வந்து போகிறார்கள்.  நீதிபதியாக வரும் இயக்குநர் மகேந்திரன், வழக்கறிஞர்களாக வரும் கருணாகரன், சுந்தர் ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.

சரஸ்காந்தின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம். கதையின் ஓட்டத்துக்குத் தகுந்த இரு வேறுமாதிரியான பின்னணி இசையில் கோவிந்த் வஸந்தா ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார். இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவின் வரிகளில் அய்யா பாடலும், மதன் கார்க்கியின் வரிகளில் அவன் துகள் நீயா பாடலும் படத்துக்கு வலு சேர்க்கின்றன.

லவகுசா, சத்தியவான் சாவித்திரி நாடகங்களில் இருந்து ஔரங்கசீப், மகாபாரதம் நாடகங்கள் வரும்போது சுவாரஸ்யம் மேலோங்குகிறது. ஒரே ஷாட்டில் லைவ் ரெக்கார்டிங் செய்யப்பட்ட ஔரங்கசீப் நாடகம் தனித்துத் தெரிகிறது. மகாபாரதம் நாடகத்தில் திரௌபதி, பீமன், அர்ஜுனன் என ஒவ்வொரு கதாபாத்திரமும் மேம்பட்ட நடிப்பை வழங்கும்போது படத்தின் பயணம் வேறு திசையில் வேகமெடுக்கிறது. படப்பிடிப்புத் தளத்தில் ராஜ்குமார் ரீடேக் வாங்குவதும், சுனில் திரும்பத் திரும்ப நடிப்பதுமாக அதகளம் செய்வதும் சிரிக்க வைக்கும் ரகம்.

ஃபேன்டஸி தளத்தில் படம் நகர்வதால் லாஜிக் பற்றி யோசிக்கத் தேவையில்லைதான். ஆனால், நாடகக் கலைஞர் ஆதிமூலம் ஐயா பற்றித் தெரியாதவர்கள் அதற்குப் பிறகு அவரை ஆராதிக்கும் ரசிகர்களாக மாறுவதும், கொண்டாடுவதும், அவர் குறித்த எந்த விஷயத்துக்கும் கருத்து சொல்வதும் நம்பும்படியாக இல்லை. நகைச்சுவை நிரம்பிய காட்சிகளும் ஒருகட்டத்துக்குப் பிறகு நகராமல் அங்கேயே நொண்டியடிப்பதால் படம் தொய்வடைகிறது. எடிட்டர் கோவிந்தராஜ் உதவியுடன் இயக்குநர் பாலாஜி தரணிதரன் அந்தத் தொய்வை சரி செய்திருக்கலாம்.

நடிகனுக்காக கூடும் ரசிகர்கள் நாடகத்துக்காக கூடுவதில்லை என்பதையும், ஔரங்கசீப் நாடகம் மூலம் அன்பே அறியாத மாபெரும் மன்னனின் தனிமை உணர்வையும் குறியீடுகளாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குநர் பாலாஜி தரணிதரன். படத்தில் சில குறைகள் இருந்தாலும் நாடகத்தையே தன் சுவாசமாக நினைத்த கலைஞனின் வாழ்க்கையை அவரது ஆன்மாவின் வழியே மீட்டெடுத்த விதத்தில் 'சீதக்காதி' தவிர்க்கக்கூடாத படம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x