Published : 15 Dec 2018 07:56 PM
Last Updated : 15 Dec 2018 07:56 PM

தாமதமானது இந்தியன் 2 படப்பிடிப்பு

டிசம்பர் மாதம் துவங்குவதாக இருந்த 'இந்தியன் 2' படப்பிடிப்பு, 2019-ல் தொடங்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் ‘இந்தியன்’. அப்பா - மகன் என இரண்டு வேடங்களில் கமல் நடித்திருந்தார். ஊழல், லஞ்சம் ஆகியவற்றுக்கு எதிராக இந்தப் படம் எடுக்கப்பட்டது.

இந்தப் படம்தான் கமல் - ஷங்கர் இணைந்து பணியாற்றிய கடைசிப் படம். 22 வருடங்கள் கழித்து, ‘இந்தியன் 2’ படத்துக்காக இருவரும் மறுபடி இணைந்திருக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது. கமலின் பிறந்த நாளின்போது இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது லைகா.

தற்போது, தனது அரசியல் பணிகளுக்கு இடையே உடலமைப்பை மாற்றியமைக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகிறார் கமல். அப்பணிகள் முடிந்து, டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்க, அரங்கும் அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டது. இதனை கலை இயக்குநர் முத்துராஜ் கவனித்து வந்தார்.

இப்பணிகள் முடிவு பெறாத காரணத்தால், 2019-ம் ஆண்டு ஜனவரியில் தொடங்கலாம் என்று ஒத்திவைத்துவிட்டார்கள். மேலும், மார்கழி மாதம் துவங்குவதால், இப்போது ஆரம்பிக்க வேண்டாம் என்ற முடிவு எடுத்துள்ளனர். 2019-ல் தொடங்கப்பட்டு, 2020-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் எனத் தெரிகிறது.

எழுத்தாளர்கள் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லட்சுமி சரவணகுமார் மூவரும் இணைந்து ‘இந்தியன் 2’க்கான வசனங்களை எழுதியுள்ளனர். கமலுடன் காஜல் அகர்வால் நடிப்பது மட்டும் உறுதியாகியுள்ளது. தொழில்நுட்ப ரீதியாக ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் பணிபுரியவுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x