Published : 10 Dec 2018 06:20 PM
Last Updated : 10 Dec 2018 06:20 PM

தனக்குத்தானே பாரத ரத்னா, பத்மஸ்ரீ என என்ன விருது வேண்டுமானாலும் ராதாரவி கொடுத்துக் கொள்ளட்டும்: சின்மயி கடும் சாடல்

ராதாரவிக்கு டத்தோ பட்டம் கொடுக்கப்பட்டது என்பதே பொய் என்று ட்விட்டரில் கடித ஆதாரத்துடன் கூறிய பாடகி சின்மயி, மீண்டும் அது தொடர்பாக தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

ஃபேஸ்புக் லைவ் வீடியோவில் பேசிய அவர், மீடூ பற்றி பல்வேறு விஷயங்களை முன்வைத்தார். அதனைத் தொடர்ந்து தன்னை டப்பிங் யூனியனில் இருந்து நீக்க ராதாரவி வேலை செய்திருப்பதாகக் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, "நான் 2016-ல் இருந்தே டப்பிங் யூனியன் உறுப்பினர் இல்லை என்று சொல்லும் ராதாரவி, கடந்த 2 ஆண்டுகளில் 4 படங்களில் டப்பிங் பேச ஏன் ஒப்புக் கொண்டார்? டப்பிங் யூனியன் உறுப்பினர்களிடம் வசூலிக்கப்படும் காசில் கட்டப்பட்ட கட்டிடத்துக்கு, எதற்காக டத்தோ ராதாரவி வளாகம் எனப் பெயர் சூட்டிக் கொண்டிருக்கிறார்?

மீடூ புகார் எல்லாம் சொன்னால் இனி நீங்கள் நடிக்கவே வராதீர்கள். ஆண்களே பெண் வேடமிட்டு நடிப்பார்கள் என ஏன் எச்சரிக்கிறார்?" என்று அடுக்கடுக்காக கேள்விகளை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் பேசும்போது, டத்தோ பட்டத்தை அவர் பயன்படுத்திக் கொள்வதில் தனிப்பட்ட முறையில் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால், அதை அவருடைய லெட்டர்ஹெட், டப்பிங் வளாகக் கட்டிடம் என எல்லாவற்றிலும் பயன்படுத்தியதாலேயே நான் அதைப்பற்றி ஆராய்ந்தேன். அப்போதுதான் மெலாகா அரசு டத்தோ பட்டம் தரவே இல்லை என்பது தெரியவந்தது.

பின்னர், இப்போது அதை சுல்தான் ஒருவர் வழங்கினார் என்றார். மெர்சி ஃபவுண்டேஷன் என்றெல்லாம் கூறினார். சரி அந்த மெர்சி ஃபவுண்டேஷன் சார்பாக பேசிய பெண்மணி, அது எந்த சுல்தான் அல்லது எந்த தொழிலதிபர் என்று சொல்லலாம் அல்லவா?

ராதாரவி அவருக்கு அவரே பாரத ரத்னா, பத்மஸ்ரீ என என்ன விருது வேண்டுமானாலும் கொடுத்துக் கொள்ளட்டும். எனக்கு அதைப் பற்றி சிறிதும் கவலை இல்லை. ஆனால், டப்பிங் யூனியனில் விசாகா குழு இருக்கிறது என்று அவர் கூறினால், பணியிடம் என்று எதைக் குறிப்பிடுவார் என்று கேள்வி கேளுங்கள்.

மீடூ பிரச்சினை வந்தது முதல் ஆண்களிடம் கேள்வி கேட்பதும், பெண்களிடம் கேள்வி கேட்பதற்கும் இடையே அவ்வளவு வித்தியாசம் இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்".

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x