Published : 10 Dec 2018 03:51 PM
Last Updated : 10 Dec 2018 03:51 PM

பாலியல் வன்கொடுமைகள் பற்றி வெளியில் பேசுங்கள்; பேசினால்தான் தீர்வு வரும்: சின்மயி

பாலியல் வன்கொடுமைகள் பற்றி வெளியில் துணிச்சலாக பேசுங்கள் பேசினால்தான் தீர்வு வரும் என்று பாடகி சின்மயி கூறியுள்ளார். 

மீடூ இயக்கத்தின் வாயிலாக கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் கூறியவர் சின்மயி. இதற்காக அவர் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், தனது ஃபேஸ்புக் வாயிலாக லைவ் வீடியோவில் தோன்றிய அவர் மீடூ இயக்கத்தின் முக்கியத்துவம் பற்றி பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். அவர் பேசியதாவது:

மீடூ இரண்டாவது அலை ஆரம்பித்து 2 மாதங்கள் ஆகிவிட்டன. முதன்முதலில் ராய சர்கார் என்பவரே இந்தியாவில் இந்த இயக்கத்தை முன்னெடுத்தார். அவரது புகாரின் பேரில் பல்வேறு கவுரவ பொறுப்புகளை வைத்திருந்த பப்பு வேணுகோபால் ராவ் அவற்றிலிருந்து நீக்கப்பட்டார். கல்வித்துறையில் இருந்த சில முகங்கள் தோலுரிக்கப்பட்டன.

இந்த ஆண்டு இது ஸ்டாண்ட் அப் காமெடியன் ஸ்பேஸில்தான் ஆரம்பித்தது. அப்புறம், பத்திரிகையாளர் சந்தியா மேனன் முன்வந்து பேசினார். அவர் வைரமுத்துவைப் பற்றி பேசியபோது நான் அவரிடம் என்னை அடையாளம் காட்டிக் கொள்ளாமல்தான் எனக்கு நேர்ந்ததைக் கூறினேன். அப்புறம் சந்தியா மேனன், நான், பெயர் கூற விரும்பாத பெண் என மூன்று பேர் வைரமுத்து மீது குற்றஞ்சாட்டியிருக்கிறோம்.

பெண் குழந்தைகளுக்கு இந்த சமூகத்தில் மிகச் சாதாரணமாக பாலியன் வன்கொடுமை நடந்துவிடுகிறது. எவ்வளவு சாதாரணமாக என்றால் அதைப் பற்றி அவர்கள் சொன்னால் குடும்பத்தினரே வெளியே சொல்லிவிடாதே என்று கூறுகின்றனர். மீடு என்னைப் போன்றோருக்கு மட்டும் நடந்தது அல்ல. குடும்பங்களில், பள்ளிகளில், கல்லூரிகளில், குடியிருப்பு வளாகங்களில் எங்கும் நடக்கிறது. அண்மையில் சென்னையில் ஒரு வாய் பேச இயலாத காது கேட்காத சிறுமிக்கு 17 பேரால் வன்கொடுமை நடந்தது. இத்தகைய சமூகத்தில்தான் நாம் வாழ்கிறோம்.

இந்த சூழலில் பாலியல் வன்கொடுமைகளை மறைக்காதீர்கள். இதை மூடி மறைக்கக்கூடாது. வெட்கப்பட வேண்டியது பெண்களும் குழந்தைகளும் கிடையாது என்பதே மீடூவின் அடிநாதம்.

பெண்களுக்கு மட்டும் இது நிகழ்வதில்லை. ஆண் குழந்தைகளுக்கும் நிகழ்கிறது. என்னிடம் நிறைய ஆண்கள் தங்களுக்கு நேர்ந்த அவலத்தை சொல்லியிருக்கின்றனர்.

இது நம்மை நாமே கேள்விக்கு உள்ளாக்க வேண்டிய தருணம். ஆனால், இன்றும்கூட பாதிக்கப்பட்டவர்களை விடுத்து பாதிப்புக்கு உள்ளாக்கியவர்களை பலப்படுத்தவே இந்த சமூகம் முற்படுகிறது. பெண்கள் சொல்லும் புகார் மீதான சமூகத்தின் அமைதி பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் பலமாக்கும்.

மீடூவில் நான் புகார் சொன்ன பிறகு. நிறைய பெண்கள் என்னை இந்த சமூக வலைதளங்கள் எப்படிப் பார்க்கிறது என்று உற்று நோக்கினார்கள். என்னை அவ்வளவு வசைபாடுகிறார்கள். தமிழில் இருக்கும் எல்லா கெட்ட வார்த்தைகளை சொல்லித்தந்தவர்கள் தமிழ் ஆண்மகன்களுக்கும் நன்றி. நீ யோகியமா, நீ ஒழுக்கமா, நீ உத்தமியா என்று கேட்பார்கள். அப்புறம் என்னை பாலியல் தொழிலாளி என்பார்கள். ஒரு விஷயம் சொல்கிறேன். நீங்கள் என்னை பாலியல் தொழிலாளி எனக் கூறுவதால் நான் வெட்கித் தலை குணிய மாட்டேன். இந்த உலகிலேயே ஆண்களுக்காக மட்டுமே வாழும் தொழில் பாலியல் தொழில். ஆண்களின் பல்வேறு பாலியல் தேவைக்காகவே இந்தத் தொழில் இருக்கிறது. ஒருவேளை அந்த தொழிலாளிகள் எல்லாம் திருந்திவந்தால் நீங்கள் சமூகத்தில் அவர்களுக்கு இடமா கொடுக்கப்போகிறீர்கள்?

அப்புறம் எனது பிறப்புறுப்பை சொல்லியே திட்டுவார்கள். ஆரம்பத்தில் மனம் வலித்தது. அப்புறம் ஆமாம் நான் ஒரு பெண், எனக்கு பெண் பிறப்புறப்பு இருக்கிறது. இதில் நான் ஏன் அவமானப்பட வேண்டும் என மனதை தேற்றிக் கொண்டேன். எனக்கு இப்படிப்பட்ட மனோ தைரியம் கொடுத்தவர்களுக்கு நன்றி.

எப்போதுமே சொல்வார்கள் சுடு தண்ணீரில் போட்டால்தான் தேநீரின் பலம் தெரியும் என்று. நீங்கள் கொதிக்கும் தண்ணீர், எண்ணெய் எல்லாவற்றிலும் போட்டு வறுத்து எடுத்து என் பலத்தை புரிய வைத்துவிட்டீர்கள்.

இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். உங்கள் வீட்டு பெண்கள் பாலியல் புகார் சொன்னால், வேலைக்கு போகாதே படிக்கப் போகாதே என்று வீட்டுக்குள் பூட்டி வைக்காதீர்கள். தப்பு செய்தவர்களை திருத்துங்கள். தவற்றால் பாதிக்கப்பட்டவரை கேவலப்படுத்தாதீர்கள், அசிங்கப்படுத்தாதீர்கள். பாலியல் வன்கொடுமைகள் ஏன் நடக்கிறது. எதற்கு நடக்கிறது என்று பேசுங்கள். குடும்பம், கல்வி நிறுவனம், பணியிடம் என எல்லா இடத்திலும் பேசுங்கள்.

மீடூ இயக்கத்துக்குப் பின்னர் என்னிடம் ஒரு பெண் சொன்ன கதையை மறக்கவே முடியாது. அந்தப் பெண்ணின் அண்ணன் சிறுவயதில் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியிருக்கிறார்.

மீடுவுக்கு பிறகு அந்தப் பெண் குடும்பத்தினரிடம் இது குறித்து பேசும்போதுதான் அதே அண்ணன் அவரது 7 வயது மகளையும் துன்புறுத்திக் கொண்டிருந்தது தெரியவந்துள்ளது.

அதனால், பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி வெளிப்படையாக பேசுங்கள். ஆண்களும் நம்மை புரிந்து கொள்வார்கள். எதுவாக இருந்தாலும் பேசி முடிவு செய்யலாம். சமூகம் அதற்கான மாற்றம் கண்டு வருகிறது. திருமணத்துக்குப் பின் கணவன் மனைவியின் விருப்பம் இல்லாமல் உறவு கொண்டால் அது மேரிட்டல் ரேப் என்று பேசும் அளவுக்கு இப்போதெல்லாம் சமூக மாற்றம் வந்திருக்கிறது.

இன்னும் மாற்றம் வரவேண்டுமானால் அதற்கு விவாதமும் ஆலோசனையும் செய்யப்பட வேண்டும். எனவே வெளிப்படையாக பேசுங்கள். இதில் நீங்கள் வெட்கப்படுவதற்கு ஒன்றுமில்லை. இன்று சமூகம் சில விமர்சனங்களை முன்வைத்தாலும்கூட விரைவில் மாற்றம் வரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x