Last Updated : 06 Dec, 2018 07:24 PM

 

Published : 06 Dec 2018 07:24 PM
Last Updated : 06 Dec 2018 07:24 PM

2.0 குறித்து எழுந்த விமர்சனங்கள், கதைச் சர்ச்சைகள்: வசனகர்த்தா ஜெயமோகன் சாடலுடன் கூடிய நீண்ட விளக்கம்

'2.0' குறித்து எழுந்த விமர்சனங்கள், கதைச் சர்ச்சைகள் ஆகியவற்றுக்கு அப்படத்தின் வசனகர்த்தா ஜெயமோகன் தனது வலைப்பூவில் சாடலுடன் கூடிய நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிப்பில் ரஜினி, அக்‌ஷய்குமார், ஏமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் '2.0'. ஷங்கர் இயக்கியுள்ள இப்படத்துக்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

தமிழை விட இதர மொழிகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் சென்னையில் '2.0' தொடர்ச்சியாக நல்ல வசூல் செய்து வருகிறது. இப்படம் உலகளவில் சுமார் 500 கோடி வசூலை கடந்துவிட்டதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால், படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

'2.0' வசூல் நிலவரங்களைத் தாண்டி, கதைகளங்கள், காட்சியமைப்புகள் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இவை அனைத்துக்குமே '2.0' வசனகர்த்தா ஜெயமோகன் தனது வலைப்பூவில் நீண்ட விளக்கமளித்துள்ளார். இதனை இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயமோகன் தனது வலைப்பூவில் '2.0' குறித்த விமர்சனங்கள் குறித்து கூறியுள்ளதாவது:

மறுபடியும் சினிமா பற்றிய கேள்விகள். கிட்டத்தட்ட மின்னஞ்சல்கள் அனைத்துமே இக்கேள்விகளால் நிறைந்துவிட்டன. தனித்தனியாக பதில்போடுவது இயலாதது. ஆகவே ஒட்டுமொத்தமாக ஒரு விளக்கம். இத்துடன் முடித்துக்கொள்வோம்.

பல கேள்விகள் 2.0 வின் வசூல் பற்றிய ஐயங்கள். ரசிகர்கள் இதைப்பற்றி ஏன் கவலைப்படுகிறார்கள் என எனக்குப் புரியவில்லை. சினிமா செயல்படும் விதமே வேறு. இதழ்களோ, சமூகவலைத்தளங்களோ முற்றிலும் சம்பந்தமில்லாத திசையில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. அவை வெறும் செய்திக்கேளிக்கைகள் மட்டுமே. 2.0 படம் நவம்பர் 29 அன்று காலை வெளியாகியது. சுமார் பத்து மணிக்கு அதன் தோராயமான மொத்த வசூலை கணக்கிட்டுவிட்டார்கள். அதற்கான எல்லா சூத்திரங்களும் வேறு எந்தத் தொழிலையும்போல இதிலும் உண்டு.

இந்தியவரலாற்றில் ஒரு சினிமா ஈட்டும் உச்சவசூல் 2.0 வுக்குத்தான்.ஏனென்றால் 2.0 உலகமெங்கும் வெளியாகியது. முதல் ஐந்து நாட்களிலேயே நாநூறுகோடியை தாண்டிவிட்டது வசூல் என லைக்கா அறிவித்துள்ளது [ எந்த நிறுவனமும் வசூலை மிகையாக அறிவிக்காது] மொத்தத்தில் இந்திய அளவில் வசூலில் அதன் இரண்டாமிடத்தில் இருக்கும் படத்தைவிடஒரு மடங்குக்குமேல் கூடுதல் வசூலாகலாம். முதலீட்டை விட  இருமடங்கு வசூல். பதினொன்றரை மணிக்கே ஷாம்பேன் உடைத்துக் கொண்டாடிவிட்டார்கள். அதன்பின்னர்தான் இங்கே இணையத்தில் சம்பந்தமில்லாதவர்கள் வசூல் கணக்குகளை அலச ஆரம்பிக்கிறார்கள். அவர்கள் எவரிடமும் தகவல்கள் இல்லை. சினிமாவுக்கும் அந்தச் செய்திகளுக்கும் சம்பந்தமில்லை. 2.0 வெளிவந்தபின்னரும் சர்க்கார் அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த ஆண்டின் இரு முதன்மைவெற்றிப்படங்கள் இவைதான்.

இது அடிப்படையில் தமிழ்ப்படம் அல்ல. இதன் வருவாயில் 20 சதம்கூட தமிழகத்தில் இல்லை. 50 சதம்கூட இந்தியாவிலிருந்து அல்ல. இது சர்வதேச ரசிகர்களுக்கான கதை. குறிப்பாகச் சொல்லப்போனால் மூன்றாமுலக நாடுகளுக்கான படம்.  உலகமெங்கும் பத்தாயிரத்துக்குமேற்பட்ட அரங்குகளில் வெளியாகியது. சீனாவில் வரும் மேமாதம் பத்தாயிரம் அரங்குகளில் வெளியாகவிருக்கிறது.  ஆகவேதான் எந்திரனில் இருந்த குடும்ப அம்சங்கள், காமெடி டிராக், காதல் போன்றவை இதில் இல்லை. கதையின் உணர்ச்சிகள் நாடகத்தனம் குறைவாக அளவோடு உள்ளன. ஆரா போன்ற மதம்சாராத ஆன்மிகச் சாயல்கொண்ட கருத்துக்கள் கீழைநாட்டு ரசிகர்களுக்கு மிக உகந்தவை.

இந்தப்படத்தின் திரைக்கதை அமைப்பு உலகளாவிய இளையதலைமுறை ரசிகர்களுக்குரியது. அவர்களின் ரசனையை கணக்கில்கொண்டது. ஆகவேதான் பாடல்கள் இல்லை. வழக்கமான தமிழ்ப்படம் முதலில் நெடுநேரம் விளையாட்டாக அலையும், அதன்பின்னரே முதல்முடிச்சு விழும். இதில் இரண்டாவதுகாட்சியிலேயே முதல் முடிச்சு விழுந்துவிடுகிறது. அதன்பின் நகைச்சுவை, குடும்பக்காட்சி எதற்கும் இடமில்லை. உணர்ச்சிகரக் காட்சிகள் அளவோடு உள்ளன.

வழக்கமான தமிழ்ப்பட அளவுகோல்களைக்கொண்டு இதை மதிப்பிட்டவர்கள் இதன் மலைக்கச்செய்யும் உலகளாவிய வசூலை எண்ணிப்பார்க்கவேண்டும். இனி இந்த வகைப் படங்கள் கூடுதலாக வரும் என்றும் புரிந்துகொள்ளவேண்டும். அத்துடன் இது முப்பரிமாணப் படம். அதில் ஓர் அளவுக்குமேல் காட்சிகளை வசனங்களாக நீட்டமுடியாது. ஏனென்றால் முப்பரிமாணம் கொண்டு நின்றிருக்கும் பொருட்கள் கவனச்சிதறலை உருவாக்கும்.

அறிவியல் அடிப்படை உண்டா?

இங்கே எழுந்த பெரிய கேள்வி, இதன் அறிவியல் அடிப்படை பற்றியது. வாழ்நாளில் ஓர் அறிவியல்நூலைக்கூட, ஓர் அறிவியல்கட்டுரையைக் கூட வாசித்திராதவர்களெல்லாம் அறிவியல்பற்றிப் பேசவைத்ததுதான் 2.0 வின் முதல்சாதனை. அவர்களிடமிருந்து அறிவியலைத் தெரிந்துகொள்ள நேர்ந்ததுதான் சோதனை.

தெளிவாகவே ஒன்று தெரிந்துகொள்ளவேண்டும். அறிவியல்புனைவு [science fiction] வேறு அறிவியல்மிகைக்கற்பனை [science fantasy]  வேறு. அறிவியல்புனைவு என்பதன் விதிகள் மூன்று.

1. அது அறிவியலின் அடிப்படைக் கொள்கைகளுக்கு உட்பட்டதாகவே இருக்கமுடியும்.

2 அறிவியலின் முன்னூகங்களில் [hypothesis] மட்டுமே அது கற்பனையை ஓட்டமுடியும். அதன் நிரூபணவழிமுறை அறிவியல் சார்ந்ததாகவே இருக்கமுடியும்.

3.அறிவியல்புனைவு என்பது வாழ்க்கையின் ஓர் உண்மையை, தத்துவத்தை அறிவியலைத் துணைகொண்டு சொல்வதாகவே இருக்கும். அதன் இலக்கு அறிவியலில் தாக்கம் செலுத்துவதல்ல, வாழ்க்கையை விளக்குவதே.

அறிவியல் மிகுபுனைவுக்கு முதல் இரண்டுவிதிமுறைகளும் இல்லை. அது அறிவியலில் இருந்து குறியீடுகளை,  வியப்பும் திகைப்பும் ஊட்டும் கதைகான வாய்ப்புகளை மட்டுமே எடுத்துக்கொள்கிறது. அது ஒருவகை புராணக்கதைதான், அறிவியலை பாவனைசெய்கிறது. அது கேளிக்கையை அளிக்கிறது, கூடவே உருவகங்கள் வழியாகச் சிலவற்றைச் சொல்கிறது. அதன் குறியீட்டுத்தன்மையைக் கொண்டுதான் அதன் அழகியலைக் கணிக்கிறோம்.

ஜுராஸிக் பார்க் முதல் மைனாரிட்டி ரிப்போர்ட் வரையிலான எல்லா சினிமாக்களும் அறிவியல்சார்ந்த மிகுபுனைவுகள்தான். மிக அரிதாகச் சில அறிவியல்புனைகதைகள் சினிமாவாக வந்துள்ளன, அவை பெரிய வணிகப் படங்கள் அல்ல. ஏனென்றால் அவை அனைவரும் பார்க்கத்தக்கவை அல்ல.

ஒரு டைனோசரை கொசு கடிக்க, கொசு அரக்கில் மாட்ட, அந்த அரக்கு நிமிளை [amber] ஆக, அந்த கொசுவின் டி.என்.ஏவை எடுத்து தவளைக்கருவுக்கு அளித்து டைனோசரை உருவாக்குவதெல்லாம் அறிவியல் அல்ல – சுஜாதா அந்தப்படம் வந்தபோது சொன்னதுபோல அது  ‘வாழைப்பழ அறிவியல்’ .லட்சக்கணக்கான ஆண்டுகளாக சிலிக்கானிலோ பிறபொருட்களிலோ உள்ள ஒரு பொருள் கற்படிவு [fossil] ஆகவே எஞ்சும்- நம் திருவக்கரை கல்மரங்கள் போல. கரிம [carbon] அமைப்புடன் அல்ல. அவற்றில் டி.என்.ஏ இருக்காது. உலகமெங்கும் டைனோசர் முட்டைகள் கிடைத்துள்ளன. எல்லாமே கல்தான். வேண்டுமென்றால் அப்படியும் யோசிக்கலாம், அவ்வளவுதான்.

ஆனால் அந்தக் குறியீடு முக்கியமானது. டைனோசர் என்பது இறந்தகாலம். ஒரு சிறு துளியில், ஒர் அணுவளவு கருவில் இருந்து கடந்தகாலம் உயிர்கொண்டு திரும்ப வருகிறது. நம்மால் கடந்தகாலத்தை கையாள முடியாது. நம் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது அது. இன்னொரு வகையில் டைனோசர் என்பது இயற்கை. இயற்கையை நாம் நம் விருப்பப் படி ஆட்சி செய்யமுடியாது. நாம் அதை சேணமிட்டு வாகனமாக ஆக்கமுடியாது. அடிப்படையில் அது கட்டற்றது. அதைத்தான் அந்தப்படம் சொல்கிறது. ஆகவே தான் ஜுராஸிக் பார்க் மிகப்பெரிய ஒரு செவ்வியல் ஆக்கம்.

இன்றைய சூழலில் ‘சிந்திக்கும் ரோபோ’ என்பதே ஒரு மிகைக்கற்பனைதான். வரையறுக்கப்பட்ட ஆணைகளைச் செய்யும் இயந்திரன்களையே மானுடர்களால் இன்று உருவாக்க முடியும். கொள்கை அடிப்படையில் நாளைகூட சிந்திக்கும் ரோபோக்களை உருவாக்கமுடியாது. செயற்கைநுண்ணறிவு [artificial intelligence]  பற்றி அசிமோவ் யுகத்தில், அறுபது-எழுபதுகளில், இருந்த நம்பிக்கை இன்று இல்லை. இன்று அதன் வரையறைகள் முற்றிலும் வேறு.

மானுடமொழியுடன் இயந்திரங்கள் உரையாடமுடியும் என்பதை ரோலான் பார்த் முதல் ழாக் தெரிதா வரையிலான அறிஞர்கள் முன்வைத்த நவீன நுண்மொழியியல் [micro linguistics] தகர்த்துவிட்டது. மானுட மொழி என்பது குறியீட்டமைப்புக்குள் குறியீட்டமைப்பு என விரிந்துசென்றுகொண்டே இருப்பது. ஒரு சொல் என்பது அந்த ஒட்டுமொத்த பண்பாட்டாலும், ஒட்டுமொத்த தருணத்தாலும் தற்காலிகமாக அர்த்தம்கொள்வது. தொடர்ந்து அர்த்தம் ஒத்திவைக்கப்படுவது. அந்த முடிவின்மையை இயந்திரங்கள் அடையமுடியாது.

மானுடமூளைக்கு நிகரான கணினி மூளை சாத்தியம் என்பதை நவீன நரம்பியல் [neuroscience] இல்லாமலாக்கியது. மூளையும் ஓர் அமைப்புக்குள் மேலும் அமைப்புகள் என முடிவிலாது சென்றுகொண்டே இருக்கும் செயல்பாடு கொண்டது. அதில் ஒருமுறை நிகழ்ந்தது மீண்டும் நிகழ்வதில்லை. ஆலிவர் சாக்ஸ், ரிச்சர்ட் ரீஸ்டாக் போன்றவர்களின் இதைச்சார்ந்த கட்டுரைகளை 1991ல் சொல்புதிதில் மொழியாக்கம் செய்து அளித்திருக்கிறோம். ஆகவே மனிதனைப்போல இயல்பாகச் சிந்திக்கும் இயந்திரன்கள் கூட ஒருவகை கனவுக்கற்பனைகள்தான், அறிவியல் அல்ல

எனவே டெர்மினேட்டர் முதல் இண்டர்ஸ்டெல்லார் வரை உலகின் எல்லா பெரும்படங்களும் அறிவியல்சார்ந்த மிகைபுனைவுகளே. எந்த ஒரு இயற்பியல்விதிகளின்படியும் ஒரு ரோபோ நீராக உருகி கதவுக்கடியில் பாய்ந்து மீண்டும் மானுட உருவாக எழுந்து துரத்திக்கொண்டுவராது – டெர்மினேட்டர் போல.எந்த ரோபோவும் பறக்காது. அதேபோல காலப்பயணங்கள், பிரபஞ்சத்துளைகள் எல்லாமே வெறும் கற்பனைகள்தான்.

உண்மையான அறிவியல்புனைவுகளில் ஆர்வமுள்ளவர்கள்  ஐசக் அஸிமோவ், ராபர்ட் சில்வர்பெர்க் முதல் ஜான் பார்த் வரையிலானவர்களை வாசித்துப் பார்க்கலாம். நான் சொல்புதிது நடத்தியபோது அறிவியல்புனைவுக்காக ஒரு தனி இதழே கொண்டுவந்திருக்கிறேன். அறிவியல்புனைவுகள் குறித்து சில கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். 12 அறிவியல் கதைகளின் தொகுதியாக  ‘விசும்பு’ என்னும் நூல் வெளிவந்துள்ளது.

அத்துடன்,அறிவியல் [science] வேறு தொழில்நுட்பம் [technology]  வேறு. தொழில்நுட்பம் என்பது பொறியியலின் வெளிப்பாடு. அதில் சிலவற்றை ஒரு கதைக்குள் கொண்டுவந்தால் அது அறிவியல்புனைவு அல்ல. அறிவியல் என்பது அறிவியல்கோட்பாடுதான். அந்தக் கோட்பாட்டைக்கொண்டு கற்பனை செய்வதே அறிவியல்புனைவு.

நம்மவர்களுக்கு அறிவியல்வாசிப்பு, அறிவியல்புனைவு வாசிப்பு மிகமிகக்குறைவு. ஆகவே ஹாலிவுட் ’பிளாக்பஸ்டர்’ படங்கள் அறிவியலைச் சொல்கின்றன என நம்பிவிடுகிறார்கள். அறிவியல் என்றால் அது அங்கே சொல்லப்பட்டிருக்க வேண்டும் என்றே நினைக்கிறார்கள்.’அங்கல்லாம் சயன்ஸ் பிக்‌ஷன் என்னமா எடுக்கறான்!” என புளகாங்கிதம் அடைகிறார்கள்.

2.0 ஓர் அறிவியல் மிகைபுனைவு மட்டுமே. ஜுராசிக் பார்க் போல. ஹல்க் போல. 2.0 வில் அறிவியலின் ஒரு விளக்கம் உள்ளது, அவ்வளவுதான். அதில் உள்ள உண்மையான அறிவியல் இருப்பது இந்தபூமி ஒற்றைக்கட்டுமானம், எந்த உயிரினத்தையும் தனியாகப் பிரிக்கமுடியாது என்ற தரிசனத்தில். அதுவே அதன் மையம். அது அறிவியல் இன்று வந்தடைந்துள்ள ஒர் இடம்.

2.0-வின் குறியீட்டுத்தன்மை மிகச்சிறிய ஒன்றை அழிக்க முயன்றால் அது மிகப்பெரிய வடிவை எடுக்கும் என்ற பார்வையில் உள்ளது. அது எப்போதுமே அறிவியலில் பேசப்பட்டு வருவது. பூச்சிமருந்துகளால் வெல்லமுடியாதவையாக ஆன பூச்சிகள் உண்டு. முறிமருந்துக்களால் பெரிய நோய்களாக ஆன கிருமிகள் உண்டு. அந்த அறிவியல் தரிசனமே அதில் குறியீடாகச் சொல்லப்பட்டுள்ளது. மிகச்சிறிய சிட்டுக்குருவி அழிவுச்சக்தியாக ஆகிறது.

இப்பிரபஞ்சத்தில் நல்லது – கெட்டது என ஏதுமில்லை. கட்டுக்குள் நிற்பது– கட்டற்றது என்ற இரண்டு விஷயங்களே உண்டு. கட்டுக்குள் இருக்கையில் மிக அழகியது, எளியது, உயிரூட்டுவது கட்டற்றுப் பெருகினால் அழிவுச்சக்தியாக ஆகும் என்பதை அறிவியல் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறது. 2.0 அதைத்தான் சொல்கிறது. உங்களுக்குப் புரியாவிட்டால் நவீன படக்கதைகளை வாசிக்கும் உங்கள் குழந்தைகளிடம் கேளுங்கள், விளக்குவார்கள்.

செல்பேசியும் சிட்டுக்குருவியும்

செல்பேசி அலைகளால் சிட்டுக்குருவிகள் பாதிக்கப்படுகின்றனவா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை , இந்தப்படத்தில் அறிவியல் இல்லை என ஒரு கூட்டம் சொல்கிறது. அவர்கள் தங்கள் அடிப்படை அறிதல்களையாவது கொஞ்சம் சரிபார்த்துக்கொள்ளலாம். உண்மையில் அவர்கள் சொல்வதுதான் முதிரா அறிவியல்.[pseudoscience].அறிவியல் என்பது ஒற்றை அமைப்பு அல்ல. ஒற்றை நிரூபண முறையும் அதற்கு இல்லை. ஒரே உலகப்பார்வையை பகிர்ந்துகொண்டால்தான் ஒரேவகை நிரூபணமுறை செல்லுபடியாகும். அறிவியலுக்குள் பார்வைக்கோணங்கள் பல உண்டு.

பூச்சிக்கொல்லிகளால் எந்த கெடுதலும் இல்லை, பசுமைக்குடில் விளைவால் எந்தக்கெடுதலும் இல்லை, அவையெல்லாம் நிரூபிக்கப்படவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் ஒர் அறிவியலாளர் கூட்டம் உள்ளது.மரங்கள் வெட்டப்படுவதனால் மழைகுறைகிறது என்பதுகூட புறவயமாக இன்னமும் நிரூபிக்கப்படாத ஊகம்தான்.

எதையும் பகுதிபகுதியாகப் பிரித்தால்தான் அதை ஆய்வுக்கூட நிரூபணமாக முன்வைக்க முடியும். பூமியை ஒட்டுமொத்தமாக பாதிக்கும் விஷயங்களை அப்படி பிரிக்க முடியாது. ஒட்டுமொத்தமாகப் பார்ப்பவர்கள் X ஆய்வுக்கூட உண்மைகளைப் பார்ப்பவர்கள் என அறிவியலாளர் இரு தரப்பு. அது அறிவியலுக்குள் நிகழும் பெரிய விவாதம்.  இந்த எளிய வணிகப்படத்திலேயே அது தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது, பக்ஷிராஜன் முழுமையாக புவியைச் சார்ந்து பார்க்க விரும்புபவர்.அவரால் தன் தரப்பை நிரூபிக்கமுடிவதில்லை.

ஆரா அறிவியலா?

ஆரா.[aura] பற்றி. பறவைகள் ஒரு மனிதனின் உடலாக ஆகின்றன என்று கற்பனைசெய்துவிட்ட பின் அதற்கு ஓர் அறிவியல்விளக்கம் அளிக்கவேண்டும் என்றால் இருப்பதிலேயே சிறந்த, அல்லது ஒரே விளக்கம் ஆராதான். ஆர்வம் கொண்டவர்கள் விக்கிபீடியாவிலேயே ஆரா பற்றி விரிவாகத் தெரிந்துகொள்ளலாம். ஆரா அறிவியல்சார்ந்ததா? இல்லை. அது இன்று முதிரா அறிவியல் [pseudoscience] என்றே கருதப்படுகிறது. ஆனால் நினைவில்கொள்க, மொத்த ஹோமியோபதி மருத்துவமும், மொத்த சித்தமருத்துவமும் நவீன அறிவியலால் முதிரா அறிவியலாகவே, நிரூபிக்கப்படாத நம்பிக்கைகளாகவே, கருதப்படுகிறது

ஆரா பற்றி மேல்நாட்டு அறிவியலிலும், மாற்று அறிவியலிலும் நிறைய பேசப்பட்டுள்ளது. பொதுவாக அறிவியலின் எல்லையில் நின்று இப்படி அதீதமான ஊகங்களைச் செய்துபார்ப்பது என்பது அறிவியலின் அவசியமான செயல்பாடுகளில் ஒன்று.  அதில் பத்துக்கு ஒன்பதும் அபத்தமாகப் போகும், ஆனால் ஒன்று நிரூபணமாகும். அதுவே அறிவியல்திறப்பாக ஆகும். பத்தொன்பதாம்நூற்றாண்டின் இறுதிவரை ரேடியோ அலைகள் காற்றிலுள்ள ஈதர் [ Ether] என்னும் பொருள்வழியாகச் செல்வதாக அறிவியலாளர் சொன்னார்கள்.  பின்னர் அக்கருத்து மறுக்கப்பட்டது. பின்னர் ஈதர் என்பது பருவெளியிலுள்ள மின்னூட்டம்பெறும் இயல்பு என இன்று விளக்கப்படுகிறது. வேறு அர்த்தங்களிலும் இச்சொல் விளக்கப்படுகிறது

ஆரா என்பது உயிர்ப்பொருள் வெளியிடும் ஆற்றல்மண்டலம் என பொருள்கொள்ளப்பட்டது. இது ஓர் அறிவியல் ஊகம்தான், ஆனால் நிரூபிக்கப்படாதது. இத்தகைய விளிம்புநிலை விஷயங்களைப் பற்றி எழுதிய லயால் வாட்சன் [Lyall Watson] அவருடைய நூல் ஒன்றில் ஓர் உதாரணம் சொல்கிறார். கருவறையில் இருந்து ஓரு வளரும் கருத்துளியை  எடுத்து பின்னர் அதன் உணர்கொம்பாக ஆகப்போகிற இடத்தில் இருந்து செல்லைப் பிரித்து எடுத்து அதை பின்னர் அதன் காலாக வளரப்போகிற இடத்தில் ஒட்டினால் என்ன ஆகும்? அங்கே உணர்கொம்பு வருமா? வராது, கால்தான் வரும். அதாவது அந்த உடலின் வரைபடம் வேறெங்கோ இருக்கிறது. செல்கள் அங்கே சென்று அமைகின்றன, அந்த வரைபடத்திலுள்ள உருவை அடைகின்றன. அந்த உடல்சாராமல்  உள்ள வரைபடமே ஆரா.

லயால்வாட்சன் அறிவியலின் விளிம்புநிலைகளைப் பற்றி எழுதியவர். கறாரான அறிவியலில் அவருக்கு  இடமில்லை, அவர் முன்னூகங்களை முன்வைத்தவர் மட்டுமே.  ஆனால் சுவாரசியமான பல கருத்துக்கள் உள்ளன. அறிவியல்புனைகதைக்கு அவை மிக உகந்தவை. எழுத்தாளன் உள்ளத்தில் பல கேள்விகளை உருவாக்குபவை. பல உருவகங்களை அளிப்பவை. ஆரா இந்தப் படத்தில் ஓரு குறைந்தபட்ச அறிவியல் விளக்கமாக உள்ளது, கூடவே ஓர் உருவகமாகவும் செயல்படுகிறது.

திரைப்படங்களும் பெரும்பாலான ‘பிரபல’ பாணி புனைவுகளும் அறிவியலை அல்ல, அறிவியலின் அதீத விளிம்புகளையே எடுத்துப்பேசுகின்றன. அறிவியலின் புதிர்கள் அமைந்துள்ள அவ்வெல்லையிலேயே கற்பனை அத்துமீற முடியும். காலப்பயணம், வேற்றுக்கோள்களின் உயிர்கள் போன்றவை அத்தகையவை. பொதுவாகக் கீழைநாடுகளின் ரசனைக்கு கறாரான அறிவியலை விட அறிவியலின் எல்லையில் அமைந்த கற்பனைகள் மேலும் உகந்தவை. ஆரா அத்தகையது.

குழந்தைகளுக்கானதா?

சிறுவர்கள் இந்தப்படத்தைப் பார்ப்பது பற்றி குழந்தை எழுத்தாளர் ஒருவரின் கருத்தை வாசித்தேன். இங்கே குழந்தைஎழுத்தாளர்கள் ஏன் குழந்தைகளால் தூக்கிவீசப்படுகிறார்கள் என்பதற்கான சான்று அவருடைய கூற்று. தாத்தாபோல அமர்ந்து பொய்யான மழலைக்குரலில் குழந்தைகளுக்கு நல்லுபதேசங்களைச் சொல்வதே குழந்தை இலக்கியம் என இவர்கள் நினைக்கிறார்கள்.குழந்தைகளை அறிதல்களில் இருந்து பொத்திப்பொத்தி ‘நல்வழியே’ கொண்டுசெல்ல விரும்புகிறார்கள். குழந்தை வாழ்வது அடுத்த காலகட்டத்தில். சரிதான் போய்யா என அது திரும்பிக்கொண்டுவிடும்.

ஜுராசிக் பார்க் கதை விவாதிக்கப்பட்டபோது இந்த வினா எழுந்ததை ஸ்பீல்பெர்க் சொல்லியிருக்கிறார். டைனோசர்கள் வந்து மனிதர்களை வாழைப்பழம் போல தின்பதைக் கண்டால் குழந்தைகள் அவற்றை வெறுக்கவும் அஞ்சவும் ஆரம்பிக்கும் என்றார்கள். ஆனால் ஸ்பீல்பெர்க் குழந்தைகள் ஆற்றலை வழிபடுபவை, பேருருக்களை கனவுகாண்பவை, அவை ஒருபோதும் டைனோசர்களை வெறுக்காது என்றார். அவ்வாறே ஆயிற்று. இன்று உலகம் முழுக்க டைனோசர் பித்து குழந்தைகளை ஆட்டிப்படைக்கிறது, அது ஜுராஸிக் பார்க்கிலிருந்து ஆரம்பித்ததுதான். அதில் பேருக்கொண்டு உறுமியபடி வரும் t-rex தான் குழந்தைகளின் உலகளாவிய செல்லம்.

ஜுராஸிக் பார்க்கின் அதே சூத்திரம்தான் 2.0விலும் உள்ளது. இயற்கையின் ஓர் நுண்ணிய அம்சம் சீண்டப்படுகிறது, அது பேருருக் கொள்கிறது. இன்று உலக அளவில் எழுதப்படும் பெரும்பாலான குழந்தைக்கதைகளின் கரு இதுதான். தமிழ்த் தொடர்கதைகளை வாசிப்பவர்களுக்குப் புரியாமலிருக்கலாம், குழந்தைகளுக்கு எளிதில் அக்கருத்து புரியும். புரிகிறது என்பதையே 2.0 கொண்ட பெரும்வெற்றி காட்டுகிறது. 2.0 ஓர் இந்திய கேளிக்கை பிராண்ட் ஆக மாறியிருப்பதும் அதனால்தான்

ஹாலிவுட்டிலும் சரி, உலகமெங்கும்சரி, இத்தகைய எல்லா கதைகளும் மானுடக் கற்பனையின் ஒரு சின்ன எல்லைக்குள் நிலைகொள்பவை. ஒற்றை அறிவுத்தளம் சார்ந்தவை. உலகளாவிய ரசிகர்களின் ஒரு சிறு உளநிலையை சென்றுதொடுபவை. ஆகவே அனைத்துமே ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள ஒரேவகையான பிம்பங்களால் ஆனவை. ஃபாண்டம், பேட்மேன்,சூப்பர்மேன்,ஸ்பைடர்மேன் என அனைத்துமே ஒரே பிம்பத்தின் வேறுபட்ட வடிவங்கள்தான். அதைப்புரிந்துகொள்வதற்குச் சற்று ஊடகவியல் அறிவு தேவை.

உண்மையான அறிவியக்கவாதி இந்த நிகழ்வைப் புரிந்துகொள்ளவே முயல்வான். பெரிய வாசிப்போ, ஆழமான திரைரசனையோ இல்லாதவர்கள்தான் இத்தகைய சினிமாக்களை மட்டம்தட்டி தங்கள் ரசனை மேம்பட்டது என நிறுவ முயல்கிறார்கள். அதெல்லாம் ‘லாடன் தெரியுமா?பின்ன்ன்ன்ன் லாடன்?’ வகை பம்மாத்துக்கள். இவர்கள் எவருக்குமே சினிமா என்னும் கலை குறித்து, அதில்நிகழ்ந்த சாதனைகள் குறித்து ஏதும் தெரியாது.

2.0 நிறுவியிருப்பது என்னவென்றால் இப்படி ஒன்றை உருவாக்கி உலகளாவிய வணிகத்தை அடைய தமிழகத்துக் கற்பனை தயாராகியிருக்கிறது, அதேசமயம் தமிழகத்தின் வாசிப்புப்பழக்கம் குறைவானதும் போதிய சினிமா அறிமுகம் அற்றதுமான  சமூகவலைச் சூழல் இதைப்புரிந்துகொள்ளமுடியாமல் தவிக்கிறது என்பதையே.

கடைசிவினா, இத்தகைய பெருமுதலீட்டுப் படங்கள் தேவையா? இது  வீணடிப்பு அல்ல, முதலீடு. இது ஒரு பெருந்தொழில். பெருந்தொழில்கள் தேவை என்றால் இதுவும் தேவைதான். இதுவே பெரிய அளவில் கொண்டுசேர்க்கப்படும். பெரும் வருவாயையும் கொண்டுவரும். ஹாலிவுட் அமெரிக்காவின் மாபெரும் உற்பத்திசாலை. அமெரிக்காவுக்கு கோடிக்கணக்காக வருமானம் கொண்டுவருவது. அதை இதைப்போன்ற படங்கள் இங்கே தொடங்கிவைக்கின்றன. பேட்மேன், ஸ்பைடர்மேன் போலஇது ஒரு இந்திய கேளிக்கை பிராண்ட். .இந்தியாவுக்கு பெரிய அளவில் வருவாய் கொண்டுவருவது. இந்தப்போக்கு வளரவேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x