Last Updated : 05 Dec, 2018 01:20 PM

 

Published : 05 Dec 2018 01:20 PM
Last Updated : 05 Dec 2018 01:20 PM

மாரி 2 வெளியீட்டு தேதி; தனுஷ் தரப்பு ஆடியோவால் சர்ச்சை: தயாரிப்பாளர் சங்கம் அதிர்ச்சி

'மாரி 2' வெளியீட்டு தேதி அறிவிப்பு குறித்து, தனுஷ் தரப்பு வெளியிட்டுள்ள ஆடியோவால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது. இதனால் தயாரிப்பாளர் சங்கம் அதிர்ச்சியடைந்துள்ளனர்

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி, ரோபோ ஷங்கர், டேவினோ தாமஸ், கிருஷ்ணா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாரி 2'. ஃவுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படம் டிசம்பர் 21-ம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளது படக்குழு.

ஜெயம் ரவி நடித்துள்ள 'அடங்க மறு', சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள 'கனா', விஜய் சேதுபதி நடித்துள்ள 'சீதக்காதி', விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘சிலுக்குவார்பட்டி சிங்கம்’ உள்ளிட்ட படங்களுடன் இணைந்து தனுஷ் தயாரித்து நடித்திருக்கும் 'மாரி 2' படமும் டிசம்பர் 21-ம் தேதி வெளியாகவுள்ளது.

டிசம்பர் 21-ம் தேதி 5 படங்கள் வெளியாவதால் விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், படங்கள் வெளியீட்டுத் தேதியை தீர்மானிக்கும் தயாரிப்பாளர் சங்கம் என்ன செய்கிறது என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். 'மாரி 2' வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர் சங்கம் உறுதிப்படுத்தவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தனுஷ் தயாரிப்பு நிறுவனமான ஃவுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:

''இரண்டு, மூன்று நாட்களாக இன்றைக்கு மீட்டிங் என்று தினேஷ் போன் பண்ணுவார். மீட்டிங்கிற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு, தலைவருக்கு உடம்பு சரியில்லை அதனால் மீட்டிங் கேன்சல் என்று சொல்லுவார். இது தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது.

தயாரிப்பாளர் சங்கம் சொல்லி தேதி போடுவதா போன்ற எந்தவொரு திட்டமும் செய்ய முடியவில்லை. சங்கம் சொல்லுமா, என்ன செய்வது, வெளியீட்டு தேதி போடலாமா என்ற எந்தவொரு முடிவுக்குமே வர இயலவில்லை.

இது வேண்டுமென்றே செய்வது போல் தெரிகிறது. 'காலா' சமயத்திலும் இப்படித்தான் அமைந்தது. இதனால், 'மாரி 2' படத்தை டிசம்பர் 21-ம் தேதி வெளியிடுவது என முடிவு பண்ணியிருக்கோம். இரண்டு மாதத்துக்கு முன்பாக கடிதம் கொடுத்துவிட்டோம். தணிக்கையும் ஆகிவிட்டது.

தயாரிப்பாளர் சங்கத்தைச் சேர்ந்த தினேஷ், கதிரேசன் என யாருமே லைனுக்கு வரவில்லை. யாரிடமிருந்து எந்தவொரு பதிலுமே இல்லாமல், முடிவுக்கு வர இயலாததால், வியாபாரம் பண்ணனும், விளம்பரப்படுத்த வேண்டும் என அனைத்தையும் தீர்மானித்து டிசம்பர் 21-ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளோம்.

தயாரிப்பாளர் சங்கத்தில் யாருமே போனை எடுப்பதில்லை. அது ரொம்ப வருத்தமாக இருக்கிறது. மீட்டிங்கை வேண்டுமென்றே நாட்களைத் தள்ளுவது போல் தெரிகிறது. 33 கோடி பட்ஜெட் ஆகியுள்ளதால், மாதம் 1 கோடி வரை வட்டி கட்ட வேண்டியுள்ளது. ஆகையால், டிசம்பர் 21-ம் தேதி வெளியீடு என முடிவு எடுத்துவிட்டோம்.

கவுன்சிலுக்கு கட்டுப்பட்டு போக வேண்டும் என்று தான் இவ்வளவு நாள் காத்திருந்தோம். எந்தவொரு பதிலுமே யாருமே சொல்லவில்லை. இதனால்  எங்களுடைய  முடிவு இது தான்''.

இவ்வாறு அந்த ஆடியோ பதிவில் பேசியுள்ளனர்.

இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகப் பரவி வருகிறது. இந்தப் பதிவால் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x