Published : 03 Nov 2018 08:04 PM
Last Updated : 03 Nov 2018 08:04 PM

’சர்கார்’ படத்தின் சிம்டாங்காரன் பாடல் சர்ச்சை: பாடலாசிரியர் விவேக் பாடலில் கையாண்ட சொற்களுக்கு நூதன விளக்கம்

’சர்கார்’ படத்தின் 'சிம்டாங்காரன்' பாடல் சர்ச்சையானதைத் தொடர்ந்து பாடலாசிரியர் விவேக் பாடல் சொற்களுடன் கூடிய நீண்ட விளக்கமளித்திருக்கிறார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, ராதாரவி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சர்கார்’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நவம்பர் 6-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.

‘சர்கார்’ படத்தின் விளம்பரப்படுத்தும் பணிக்காக முதலில் படத்திலிருந்து ‘சிம்டாங்காரன்’ என்ற பாடலை படக்குழு வெளியிட்டது. அப்பாடல் வரிகளுக்கு சமூகவலைத்தளத்தில் கடும் கண்டனங்கள் எழுந்தது. மேலும் அது தமிழே அல்ல, தமிழை கெடுத்து விட்டனர் என்று அந்தப் பாடலின் வித்தியாசமான மொழிக்கு விமர்சனங்களும் எழுந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கு முதலில் எதிர்ப்புகள் வந்தாலும், பாடலும் வரவேற்பைப் பெற்றது. இதுவரை சுமார் 2.6 கோடி பார்வைகளை யு-டியூப் இணையத்தில் பெற்றிருக்கிறது.

அந்த எதிர்ப்புக்கு முதலில், ‘சிம்டாங்காரன்’ என்றால் என்ன அர்த்தம் என்பதை மட்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தார் அதை எழுதிய பாடலாசிரியர் விவேக். தற்போது படம் வெளியாகவுள்ள சூழலில், அப்பாடலில் இருக்கும் வார்த்தைகளுக்கு முழுமையான விளக்கத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள கடிதத்தில் தெரிவித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சிம்டாங்காரன் பாடலின் மொழி - சென்னைத் தமிழ். பல்வேறு மொழிகளின் பாதிப்பு வெளிப்படுவதால், எளிதில் புரிந்து கொள்ள முடியாத பல சொற்கள் இருந்தாலும் (எ.கா- டர் இந்தி, உட்டா லக்கடி உருது)

எதார்த்தமான, உணர்வு பூர்வமான, இனிமையான ஒலிக் கோர்வைகளை உடைய மொழி. எளிய மக்களின் வாழ்விற்கு அருகில் இருக்கும், அவர்கள் வாழ்வியலை பிரதிபலிக்கும், கொண்டாடும் இம்மொழியில் இப்பாடலை எழுதியதில் பெருமை அடைகிறேன்.

அர்த்தம் எளிதில் புரியாததால், அதைப் புரிந்து கொள்ளத் துடிக்கும் பரவசமே பெரும்பாலும் இம்மொழியின், இவ்வகை பாடல்களின் (எ.கா - அட்டக்கு பட்டக்கு டிமிக்கடிக்குற) தனிச் சிறப்பு என்பது என் தாழ்மையான கருத்து. அதன் வெளிப்பாடே புரிந்தும் புரியாமலும் இருக்கும் இப்பாடலின் வரிகள். உங்களின் ரசனையையும் பின்னூட்டத்தையும், மதிக்கும் காரணத்தினால் இப்பாடலின் பொருளை வெளியிட கடமைப்பட்டுள்ளேன்.

பிழை இருப்பின் - மன்னிக்கவும்

நிறை இருப்பின் - அன்பைப் பகிரவும்

நன்றி

#Simtaangaran - Chennai Tamil

* பக்குரு - ஒரு வகை மீன் வலை

* பல்டி பக்குர - எமாத்தி பணத்த சுருட்டுரவன (வலை மீனை சுருட்டுவது போல)

* டர்ல - பயத்துல

* டர்ல உடணும் - பயத்துல வச்சுருக்கணும்

* பல்து - பல்தா கை - பெரிய ஆள், பலம் வாய்ந்தவன்

* வர்ல்டு - உலகம்

* பிஸ்து - பிஸ்தா

* பிசுறு கெள்ப்பி - தூள் கெளப்பு

* நெக்குலு - நக்கல்

* பிக்குலு - ஊர்காய்

* நெக்குலு பிக்குலு - கெத்தான காரசாரமான ஆள்

* தொக்கல் - அந்தரம்

* தொட்டன்னா தொக்கல் - அவன தொட்டன்னா அந்தரத்துல விட்டுடுவான்

* மக்கரு - பழுது

* தர்ல - தரையில

* அந்தரு - தகராறு

 

* சிம்டாங்காரன் - கவர்ந்து இழுப்பவன் / பயமற்றவன் / துடுக்கானவன்

கண் சிமிட்டாம சிலர் பார்க்க தோனுமே.. அந்த ஒருவன் நம் # சிம்டாங்காரன்

* நின்டன் பாரன் - நிலையான ஒரு எடத்த எனக்குனு உருவாக்கிட்டேன் பார்

* முஸ்டு - உன்ன முடிச்சுட்டு

* அப்டிக்கா - அந்தப் பக்கம்

* பக்குல போடன், விர்ந்து வக்க போறன் - Buckle up n get ready for my treat

* கொக்கலங்கா - வட சென்னை விளையாட்டு

* குபீலு - பொங்கும் சிரிப்பு

* நம்ம புஷ்டுருக்க கோட்ட இல்ல, அல்லா ஜோரும் பேட்டயில - என் சர்கால கோட்டைகள் இல்ல, என் சந்தோஷமெல்லாம் என் மக்களிடத்தில்

* வர்ல்டு மொத்தமும் அர்ல உடணும் - Nov 6, 2018

இவ்வாறு பாடலாசிரியர் விவேக் தெரிவித்திருக்கிறார்.

பாடலாசிரியர் விவேக்கின் விளக்கத்தை  பல விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து, முதலில் கண்டனம் தெரிவித்தவர்களையும் இந்த விளக்கத்தை படிக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x