Published : 22 Oct 2018 05:51 PM
Last Updated : 22 Oct 2018 05:51 PM

சுசீந்திரன் இயக்கத்தில் சசிகுமார், பாரதிராஜா

சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் சசிகுமார், பாரதிராஜா நடிக்கின்றனர்.

சுசீந்திரன் இயக்கத்தில் வருகிற வெள்ளிக்கிழமை (அக்டோபர் 22) ரிலீஸாக இருக்கும் படம் ‘ஜீனியஸ்’. ரோஷன் என்ற புதுமுகம் இந்தப் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். மன அழுத்தத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, கால் பந்தாட்டத்தை மையமாக வைத்து ‘சாம்பியன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார் சுசீந்திரன். படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகிற டிசம்பர் மாதம் இந்தப் படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர்.

இதற்கிடையே ‘ஏஞ்சலினா’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார் சுசீந்திரன். இதன் இறுதிக்கட்டப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், தன்னுடைய அடுத்த படத்தின் ஷூட்டிங்கை, பூஜையுடன் இன்று தொடங்கிவிட்டார் சுசீந்திரன்.

‘கென்னடி கிளப்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், ஹீரோவாக சசிகுமார் நடிக்கிறார். இயக்குநர் பாரதிராஜா, சூரி, முனீஸ்காந்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுசீந்திரன் இயக்கத்தில் ஏற்கெனவே வெளியான ‘பாண்டிய நாடு’ படத்தில், விஷாலின் தந்தையாக முக்கியமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார் பாரதிராஜா.

பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில், நிஜமான கபடி வீராங்கனைகளும் நடிக்கின்றனர். பழனியை கதைக்களமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது. ‘மாவீரன் கிட்டு’ படத்துக்குப் பிறகு சுசீந்திரனுடன் இசையமைப்பாளர் டி.இமான் கைகோக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x