Published : 24 Sep 2018 09:03 PM
Last Updated : 24 Sep 2018 09:03 PM

முதல் பட சம்பளத்தை கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு அளித்த துருவ்: இணையத்தில் குவியும் பாராட்டு

'வர்மா' படத்துக்கான சம்பளத்தை கேரளா வெள்ள நிவாரண நிதிக்கு அளித்திருக்கிறார் விக்ரம் மகன் துருவ். இதற்காக இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சமீபத்தில் கேரளாவில் பெய்த கனமழையால், அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் பலத்த சேதமடைந்தன. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் வீடுகளை இழந்துள்ளனர். வெள்ளச் சேதத்தின் மதிப்பு 21 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று தோராயமாக மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசு நிவாரண உதவி வழங்கியிருந்தாலும், உலக நாடுகளில் இருந்தும் நிதியுதவி வருகிறது. இங்கும் பலர் உதவி வருகின்றனர்.

குறிப்பாக, திரைத்துறையில் இருந்து பலர் கேரள முதல்வர் நிவாரண நிதிக்குத் தங்கள் பங்களிப்பைச் செய்து வருகின்றனர். கமல்ஹாசன், ரோகிணி, விக்ரம், சிவகார்த்திகேயன், நயன்தாரா, சூர்யா, கார்த்தி, ஸ்ரீப்ரியா, அல்லு அர்ஜுன், சிரஞ்சீவி, நாகர்ஜுனா, மம்மூட்டி எனப் பலரும் உதவியுள்ளனர்.

இந்நிலையில், விக்ரம் மகன் துருவ் தனது முதல் படமான ‘வர்மா’வுக்கு வாங்கிய மொத்த சம்பளத்தையும் கேரள முதல்வர் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார். இதற்கான காசோலையை கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து அளித்தார் துருவ். அவரோடு ‘வர்மா’ படத்தின் தயாரிப்பாளர் முகேஷ் மேத்தா மற்றும் இணை தயாரிப்பாளர் அனூப் ஆகியோரும் உடனிருந்தனர்.

துருவ்வின் இந்த செயலுக்கு சமூகவலைத்தளத்தில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x