Published : 24 Sep 2018 06:38 PM
Last Updated : 24 Sep 2018 06:38 PM

குலுமணாலியில் நிலச்சரிவு: கார்த்தியின் தேவ் படப்பிடிப்பு நிறுத்தம்

குலுமணாலியில் ஏற்பட்ட கனமழை, பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் கார்த்தியின் 'தேவ்' படப்பிடிப்பு நின்றது.

அறிமுக இயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படம் 'தேவ்'. இதில் கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தைத் தொடர்ந்து இருவரும் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர். கார்த்திக், ரம்யா கிருஷ்ணன், பிரகாஷ் ராஜ், ரேணுகா, அம்ருதா, ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.

கார்த்தியின் 'தேவ்' திரைப்படத்தின் படப்பிடிப்பு குலுமணாலியில் நடைபெறுவதாக இருந்தது. கனமழை, பயங்கர வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 'தேவ்' படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. படக்குழுவினர் 140 பேர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி தவித்து வருகிறார்கள். படப்பிடிப்பு நின்று போனதால் படத்தை தயாரிப்பு நிறுவனத்துக்கு 1 1/2 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதைப் பற்றி நடிகர் கார்த்தி கூறும் போது, ''தேவ் படத்தின் படப்பிடிப்பை குலுமணாலியில் அழகிய மழை மற்றும் பனிச்சாரலுக்கு நடுவே படம்பிடிக்கலாம் என்று முடிவு செய்திருந்தோம். ஆனால் திடீரென்று நேற்று நிலைமை மிகவும் மோசமானது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு. கார், பஸ் மற்றும் பல பொருட்களை அடித்து சென்றன. நிலச்சரிவினால் பாறைகள் உருண்டு வந்ததை நானே கண்டேன். வேகமாக வந்த வெள்ளம் சின்ன சின்ன பாறைகளை அடித்து வந்தது. இந்த பதற்றமான சூழ்நிலையை பார்க்கும் போது ஒரு நிமிடம் உயிரே போய் வந்தது போல் இருந்தது.

இதனால் படப்பிடிப்புக்கு காரில் சென்றுகொண்டிருக்கும் போது கடுமையான டிராஃபிக் ஏற்பட்டது. இதனால் சாலையில் சென்ற கார்களும் நகரவே இல்லை. 4-5 மணி நேரம் நான் காரிலேயே இருக்க வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டது. பிறகு அருகில் இருந்த கிராமத்துக்குச் சென்று தங்க ஏற்பாடு செய்யப்பட்டு அங்கே தங்கியிருக்கிறேன். ஆனால் எங்கள் படக்குழுவினர் 140 பேரை நினைத்தால்தான் வருத்தமாக உள்ளது. அவர்கள் எங்கே தங்குவார்கள், சாப்பிடுவார்கள் எப்படி கீழே இறங்குவார்கள் என்று வருத்தமாக உள்ளது.

23 வருடங்களுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள இந்த நிலச்சரிவால் மக்கள் பயன்படுத்தி வந்த பாதைகளுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த பாதைகள் சரி செய்யப்பட கண்டிப்பாக 28 மணி நேரம் தேவைப்படும் என்றும். அதுவரை படக்குழுவினாரால் கீழே இறங்க முடியாது'' என்றார் நடிகர் கார்த்தி.

இந்த பாதிப்பால் தயாரிப்பாளர் லட்சுமணனுக்கு 1 1/2 கோடிக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x