Published : 23 Sep 2018 09:08 AM
Last Updated : 23 Sep 2018 09:08 AM

சமூக வலைதளங்களில் ‘விஜய் சேதுபதி’யாக மாற்றப்பட்ட நெல்லை கவிஞர் கிருஷி: ‘என் மேல் இவ்வளவு பிரியமா’ என நெகிழ்ச்சி

நடிகர் விஜய் சேதுபதி, ‘ஆரஞ்சுமிட்டாய்’ படத்தில் வயதான தோற்றம் ஏற்று நடித்திருந்தார். அதேபோல, தற்போது பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘சீதக்காதி’ படத்தில் முதிர்ந்த நாடகக் கலைஞர் அவதாரம் ஏற்று நடித்திருக்கிறார். அடுத்து தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் வெளிவரவுள்ள ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திலும் வித்தியாசமான தோற்றம் ஏற்று நடித்து வருகிறார்.

இப்படி தொடர்ந்து தனது கதாபாத்திரங்களிலும், உருவ மாற்றத்திலும் கவனம் செலுத்திவரும் விஜய் சேதுபதி ‘கடைசி விவசாயி’ என்ற படத்தில் புதிய தோற்றத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படம் வெளியாகி பிரபலமானது.

அது ‘கடைசி விவசாயி’ படத்தின் தோற்றம் அல்ல; பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியாக உள்ள ‘சீதக்காதி’ படத்தின் காட்சி என பின்னர் புது தகவல் பரவியது.

இந்நிலையில், அந்த புகைப்படத்தில் இருப்பது விஜய் சேதுபதியே அல்ல. அவர் நெல்லை கவிஞர் கிருஷி. அவரது உருவமும், விஜய் சேதுபதியின் புது திரைப்பட போஸ்டர் புகைப்படமும் ஒரேமாதிரி இருப்பதால் இந்தக் குழப்பம் ஏற்பட்டுள்ளது என தற்போது சமூக வலைதளங்களில் மறு பதிவுகள் வந்த வண்ணம் உள்ளன.

இதுகுறித்து கவிஞர் கிருஷியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:

முதலில் இதை காமெடியாக நினைத்து விட்டுவிட்டேன். பிறகு, என் நண்பர்கள், என்னை அறிந்தவர்கள் பலரும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் என் புகைப்படத்தைப் போட்டு, ‘இது விஜய் சேதுபதி அல்ல; நெல்லை கவிஞர் கிருஷி’ என்று பகிரத் தொடங்கினர். எல்லோருக்கும் என் மீது இவ்வளவு பிரியமா! அன்பா என்று ஆச்சரியப்பட்டுப் போனேன்.

2 வாரங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் ‘ஸீட்’ (Seed) என்ற சித்த அறக்கட்டளை அமைப்பு நடத்திய நிகழ்ச்சிக்காக சென்றேன். அங்கு நண்பர் மதன் சுந்தர் என்னை புகைப்படம் எடுத்தார். அதுதான், வலைதளங்களில் வேகமாகப் பரவி, எனக்கு இவ்வளவு அன்பை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

‘சீதக்காதி’ பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் கூறியபோது, ‘‘முதலில் இதை விஜய் சேதுபதியின் ‘கடைசி விவசாயி’ பட ஃபர்ஸ்ட்லுக் என்றார்கள். அடுத்து, ‘சீதக்காதி’ படக் காட்சி என்றார்கள். மக்களிடம் ஒரு விஷயத்தை கொண்டு செல்லும்போது, அதை உறுதிசெய்துகொள்ள வேண்டியது அவசியம். அவர்களது எதிர்பார்ப்பு ஒரு மாதிரி இருந்து படம் பார்க்க வரும்போது அது வேறொரு கோணத்தில் இருந்தால் அவர்களால் அதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகலாம். உறுதி செய்யப்படாத தகவல்களை பதிவிடாமல் தவிர்ப்பதே நல்லது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x