Last Updated : 22 Sep, 2018 11:46 AM

 

Published : 22 Sep 2018 11:46 AM
Last Updated : 22 Sep 2018 11:46 AM

முதல் பார்வை: ராஜா ரங்குஸ்கி

ஒரு வில்லாவில் மர்மமான முறையில் ஒரு பெண் கொல்லப்பட்டால், அந்தக் கொலையை கான்ஸ்டபிள் செய்திருக்கலாம் என சந்தேகப்பட்டால் அதுவே 'ராஜா ரங்குஸ்கி'.

செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாகப் பணிபுரிகிறார் ராஜா (சிரிஷ்). ரோந்துப் பணியில் ஈடுபடும் அவர் ஒரு வில்லாவில் தனித்து வாழும் மரியாவை (அனுபமா) தினம் சந்தித்து அவரிடம் கையெழுத்து வாங்கிச் செல்கிறார். பணியின் போது அடிக்கடி ரங்குஸ்கியைப் (சாந்தினி) பார்ப்பதால் காதலில் விழுகிறார். ஒருநாள் திடீரென்று சாந்தினியைக் கொல்லப்போவதாக சிரிஷுக்கு அனாமதேய அழைப்பு வருகிறது. இதனால் பதறியடித்து சாந்தினியைப் பார்க்க வருகிறார்.ஆனால், எதிர்பாராவிதமாக அனுபமா கொல்லப்பட்டு கிடக்கிறார்.இதனால் அந்தக் கொலையை கான்ஸ்டபிள் சிரிஷ் செய்திருக்கலாம் என்று போலீஸ் விசாரிக்கிறது. யார் இந்த அனுபமா, அவர் கொலை செய்யப்பட்ட என்ன காரணம், சிரிஷ் ஏன் இதில் சிக்கிக் கொள்கிறார், கொலையைச் செய்தது யார் போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

மர்மக் கொலை, அதைச் சுற்றிய சந்தேகங்கள் என்று திரைக்கதை முடிச்சுகளில் சுவாரஸ்யம் கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் தரணிதரன். பார்வையாளார்களிடம் அவர் கதை சொல்லும் உத்தி சரியாக எடுபடுகிறது.

'மெட்ரோ'வில் ஆச்சர்யப்பட வைத்த சிரிஷ் நடிப்பில் தன்னைத் தக்கவைத்துக்கொள்ளத் தடுமாறுகிறார். நடிக்க ஸ்கோப் இருந்தும் அதைச் சரியாகப் பயன்படுத்தாமல் திணறுவது அப்பட்டமாகத் தெரிகிறது. அந்த அப்பாவி முகம் பலவகையில் பலமாக இருந்தாலும், அதற்கு ஈடுகொடுக்கும் அளவுக்கு நடிப்பில் பக்குவம் காட்டவில்லை.

சாந்தினிக்கு மிக வலுவான கதாபாத்திரம். அதற்கான அர்த்தமுள்ள நடிப்பை வழங்க முடியாவிட்டாலும் ஓரளவு சமாளித்திருக்கிறார். சிரிஷ் நண்பனாக கூடவே வரும் கல்லூரி வினோத் சின்னச்சின்ன புலம்பல்களில் கவனிக்க வைத்து, சிரிப்புக்கு உத்தரவாதம் தருகிறார். அனுபமா குமார் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

தன்னிடம் வந்த வழக்கு ஸ்பெஷல் டீம் இன்ஸ்பெக்டருக்குப் போய்விட்டதே என்ற கடுப்பை, வெறுப்பை இன்ஸ்பெக்டர் பிரதிபலிப்பது ரசனை. கொலை குறித்து ஜெயகுமார் விசாரிக்கும் விதம் நல்லவிதமாக ஆரம்பித்து ஒரு எல்லைக்கோட்டுக்குள் அப்படியே அமிழ்ந்துவிடுகிறது.

யுவாவின் ஒளிப்பதிவு படத்தின் தரத்தைக் கூட்டியிருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் படத்துடன் ஒட்டாமல் சில இடங்களில் துருத்திக்கொண்டும், சில இடங்களில் வேகத்தடையாகவும் உள்ளன. பின்னணி இசையில் மட்டும் கொஞ்சம் பார்த்துச் செய்திருப்பதால் தப்பிக்கிறார்.

சிரிஷ் ஏன் அந்த சிசிடிவி ஃபுட்டேஜை அழிக்கிறார், போலீஸிடம் உண்மையைச் சொல்லாமல் மறைக்கிறார் என்பதற்குத் தெளிவான விளக்கம் இல்லை. கொலைகாரன் ஸ்பிளிட் பெர்சானலிட்டியா, சைக்கோவா, ஒரே மாதிரி உருவ ஒற்றுமை உள்ள நபரா என்று பல விதங்களில் இயக்குநர் யோசிக்க வைக்கிறார்.

அதுவும் இவர் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் அடுத்தடுத்து மாறிக்கொண்டே இருப்பது பலம். ஆனால், அதுவே ஒருகட்டத்தில் யூகிக்க முடியாத திருப்பமாக அமைந்துவிடுகிறது. அப்படி ஒரு சிறந்த ட்விஸ்ட், கணிக்க முடியாதது என்ற அளவில் திடுக்கிட வைக்கிறது என்றாலும் அதை நம்பத்தகுந்த அளவில் இயக்குநர் நிறுவவில்லை. அதுவே படத்தின் பலவீனம். மற்றபடி, திருப்பம் நிறைந்த மர்ம நாவலுக்குரிய சுவாரஸ்யங்களோடு 'ராஜா ரங்குஸ்கி' ரசிக்க வைக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x