Published : 20 Sep 2018 02:26 PM
Last Updated : 20 Sep 2018 02:26 PM

ஜெயம் ரவி - காஜல் அகர்வால் படம்: பூஜையுடன் இன்று தொடங்கியது

ஜெயம் ரவி - காஜல் அகர்வால் நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங், பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது.

ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘டிக் டிக் டிக்’. சக்தி செளந்தரராஜன் இயக்கிய இந்தப் படம், ‘இந்தியாவின் முதல் விண்வெளிப் படம்’ என்று கூறப்பட்டது. நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடித்த இந்தப் படத்தில், ஜெயம் ரவியின் மகன் ஆரவ்வும் நடித்தார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது ‘அடங்க மறு’ என்ற படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி. அறிமுக இயக்குநரான கார்த்திக் தங்கவேல் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இதில், ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார்.

இந்நிலையில், 2015-ம் ஆண்டு வெளியான ‘தனி ஒருவன்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகப் போகிறது என அறிவித்துள்ளார் இயக்குநர் மோகன் ராஜா. எனவே, ‘அடங்க மறு’ படத்துக்குப் பிறகு ‘தனி ஒருவன் 2’வில் நடிக்கப் போகிறார் ஜெயம் ரவி என்ற கருத்து நிலவியது.

ஆனால், ‘தனி ஒருவன் 2’ படத்துக்கு முன்னர், அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ஜெயம் ரவி. இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கப் போகிறார். இருவருமே நீண்ட வருடங்களாக சினிமாவில் இருந்தாலும், இணைந்து நடிப்பது இதுதான் முதல்முறை.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு, பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், யோகிபாபு, சம்யுக்தா ஹெக்டே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை, வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x