Published : 11 Sep 2018 05:01 PM
Last Updated : 11 Sep 2018 05:01 PM

அடுத்தடுத்து ரிலீஸாகும் பெரிய பட்ஜெட் படங்கள்: என்ன செய்கிறது தயாரிப்பாளர்கள் சங்கம்?

பெரிய பட்ஜெட் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக இருப்பதால், தயாரிப்பாளர்கள் சங்கம் என்ன செய்கிறது? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக விஷால் பொறுப்பேற்றபோது, அரசியல் தலைவர்களைப் போல பல வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அதில், படங்களின் வெளியீட்டை முறைப்படுத்துவதும் ஒன்று. ஆனால், இன்றுவரை அவரால் அதை முறைப்படுத்த முடியவில்லை.

பட வெளியீட்டை முறைப்படுத்த விஷாலும் சில முயற்சிகள் மேற்கொண்டார் என்று கூறப்படுகிறது. ‘வித்தாரக்கள்ளி விறகொடிக்கப் போனாளாம்... கத்தாழ முள்ளு கொத்தோட குத்துச்சாம்...’ என்றொரு பழமொழி சொல்வார்களே... அதைப்போல விஷால் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

‘வாரத்துக்கு ஒரு பெரிய படம் + இரண்டு சின்ன படங்கள் அல்லது வாரத்துக்கு இரண்டு பெரிய படங்கள்’ - இதுதான் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுத்த முடிவு. ஆனால், இந்த முடிவு காற்றில் பறக்கவிடப்பட்டுப் பல நாட்கள் ஆகின்றன. ஒரே வாரத்தில் ஏழெட்டு படங்கள் ரிலீஸான நிலையைக்கூட சமீபத்தில் பார்த்தோம். அத்துடன், பெரிய நடிகர்களின் படங்களை விழாக் காலங்களில் மட்டுமே ரிலீஸ் செய்ய வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.

இந்நிலையில், பெரிய பட்ஜெட் படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக இருக்கின்றன. சிவகார்த்திகேயன் நடித்த ‘சீமராஜா’ வருகிற 14-ம் தேதியும், விக்ரம் நடித்துள்ள ‘சாமி ஸ்கொயர்’ 20-ம் தேதியும், மணிரத்னம் இயக்கத்தில் நிறைய நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘செக்கச்சிவந்த வானம்’ 27-ம் தேதியும் ரிலீஸாக இருக்கின்றன.

இதுதவிர, தனுஷின் ‘வடசென்னை’, ‘மாரி 2’ மற்றும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, விஜய்யின் ‘சர்கார்’, ரஜினியின் ‘2.0’ என அடுத்தடுத்த மாதங்களிலும் பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸாகக் காத்திருக்கின்றன. இப்படி அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸானால், வசூல் பாதிக்கப்படும் என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

உதாரணமாக, சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சீமராஜா’, தமிழ்நாட்டில் மட்டும் கிட்டத்தட்ட 36 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியிருப்பதாகச் சொல்கிறார்கள். 36 கோடி ரூபாயை எடுக்க வேண்டுமென்றால், ஜிஎஸ்டி, உள்ளாட்சி கேளிக்கை வரி, விநியோகஸ்தர்கள் கமிஷன் போன்றவை எல்லாம் சேர்த்து 70 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டும். அதற்கு, குறைந்தது 3 வாரங்களாவது அந்தப் படம் தியேட்டரில் ஓடவேண்டும். ஆனால், அடுத்த வாரம் ‘சாமி ஸ்கொயர்’ படமும், அதற்கடுத்த வாரம் ‘செக்கச்சிவந்த வானம்’ படமும் ரிலீஸாக இருப்பதால், ‘சீமராஜா’வுக்கு சொற்ப எண்ணிக்கையிலான தியேட்டர்களே கிடைக்கும். இது வசூலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

இந்த விஷயம், சமூக வலைதளங்களிலும் விவாதிக்கப்படும் விஷயமாக மாறி இருக்கிறது. இதுகுறித்து ட்விட்டரில் பதிலளித்துள்ள தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொருளாளரான எஸ்.ஆர்.பிரபு, “சின்ன பட்ஜெட், பெரிய பட்ஜெட் என எல்லாவிதமான படங்களும் அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. பட வெளியீட்டைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால், தயாரிப்பையும் கட்டுப்படுத்த வேண்டும். நம் நாடு சுதந்திரமான நாடு. அந்தச் சுதந்திரம் சினிமாத்துறையிலும் இருக்கிறது. எனவே இதை எப்படிக் கட்டுப்படுத்துவதென தெரியவில்லை.

2500 திரையரங்குகள் இருந்தபோது, வருடத்துக்கு 75 படங்கள் மட்டுமே வெளியானது. ஆனால், தற்போது 1200 திரையரங்குகள் மட்டுமே உள்ள நிலையில், வருடத்துக்கு 275 படங்கள் ரிலீஸாகின்றன. பணத்துக்காக மட்டும் யாரும் இப்போது சினிமா எடுப்பதில்லை. சினிமா மீது பேரார்வம், தனக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம், தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள, புகழுக்காக... என பல்வேறு விஷயங்களுக்காக சினிமா எடுக்கிறார்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.

என்ன செய்தால் இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று யோசித்து, அதை நடைமுறைப்படுத்த வேண்டியது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தான். ஆனால், அந்த சங்கமே இந்த விஷயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் கையைப் பிசைந்துகொண்டு நிற்கிறது. அப்படியானால், பூனைக்கு யார் தான் மணி கட்டுவது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x